திருநெல்வேலி
டாஸ்மாக் மதுபான விற்பனையில் காட்டும் அக்கறையை விவசாயிகளுக்குத் தேவையான யூரியாவை இருப்பு வைப்பதில் அரசு காட்டாமல் இருப்பது விவசாயிகளை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழக அரசோ, தேர்தல் ஆணையமோ வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மர்மமான முறையில் பல தகவல்களை கசிய விடுகின்றன.
தேர்தல் நடைபெறுமா, நடைபெறாதா என்ற சந்தேகம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. ஒரு மாவட்டத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் கலந்துகொண்டு பேசும்போது, பிறர் சந்தேகப்படும்படியாக நாம் நடந்துகொள்ளக் கூடாது. நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றார். அடுத்த நாளே அவர் மாற்றப்பட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு எல்லை வறையறுக்கப்படவில்லை. ஆனால், இதை தேர்தலுக்கு பிறகு செய்வோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இதை காரணம் காட்டி யாராவது நீதிமன்றத்துக்கு சென்றால் எதிர்க்கட்சிகள் மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்ள ஆளுங்கட்சி நினைக்கிறது.
கஜா புயல் பாதிப்புகள் ஏற்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்புக்கு ஏற்ப நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. குறைந்தபட்ச தொகையை அரசு அறிவித்தது. அதைக்கூட இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. பாதிப்பில் இருந்து மீள முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு உள்ளது. சாகுபடிக்குத் தேவையான அளவுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால், அரசு இதைச் செய்யவில்லை.
தீபாவளிக்கு எவ்வளவு மதுபானங்கள் விற்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, 15 நாட்களுக்கு முன்பே தேவையான மதுபானங்களை இருப்பு வைத்து, விற்பனை செய்தது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எவ்வளவு யூரினா தேவை என அரசுக்கு தெரியும். ஆனால், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்யவில்லை. மதுபானத்தில் காட்டும் அக்கறையை விவசாயிகளுக்குத் தேவையான யூரியாவில் காட்டாமல் இருப்பது விவசாயிகளை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி உள்ளது. வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஐஐடியில் மாணவிகள் தற்கொலைகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே உள்ளது. இதுவரை 7 பேர் தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது. மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுத்து, மாணவிகளுக்கு பாதுகாப்பையும், நம்பிக்கையையும் அளிக்க வேண்டும்.
தீப்பெட்டி, பீடி தொழில் ஜிஎஸ்டி வரியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்துவதில் விலைமதிப்பற்ற மனித உயிர் பறிபோவது அவமானகரமானது. அண்மையில் கும்பகோணத்தில் பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி இறந்துள்ளார். பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்துவதில் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்களை பயன்படத்தக் கூடாது.
சாதாரண மழைக்கே தமிழகம் முழுவதும் சாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பராமரிப்பு, நீர்நிலைகள் மராமத்து பணிக்கு ஒதுக்கப்படும் பணம் முழுமையாக செலவழிக்கப்படவில்லை. இந்த துறைகளில் நடைபெறும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகும் நீடிக்கும். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. கொள்கை அடிப்படையிலான கூட்டணி.
திருவிழாவில் திருடியவர் மற்றவர்களை திசை திருப்ப திருடன் ஓடுகிறான் என்று கூச்சலிட்டுவிட்டு தப்பித்துச் சென்றுவிடுவான். திருவிழாக் கூட்ட திருடன் கதைபோல் அதிமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளன.
உச்ச நீதிமன்றம் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தலையீட்டின் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது என்று ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட சில நீதிபதிகள் பகிரங்கமாகக் கூறினர்.
ரஞ்சன் கோகாய் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். தற்போது, பணி ஓய்வுக்கு முன் பாபர் மசூதி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை அவசர அவசரமாக கூறியுள்ளார். அனேகமாக அவர் ஓய்வு பெற்ற பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago