தமிழர்கள் உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி

By செய்திப்பிரிவு

எஸ். முஹம்மது ராஃபி

இலங்கையின் 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இலங்கை அதிபராக பதவி வகித்து வரும் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் நவ. 16-ல்(இன்று) இலங்கை அதிபர் தேர்தல்நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர்வைப்புத் தொகை செலுத்தியிருந்தனர்.

இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித்பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் குணரத்னம், மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உட்பட மொத்தம் 35 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் லங்கா சுதந்திர கட்சி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கைக்காக 43 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஞாயிற்றுக்கிழமை மதியம் இலங்கையின் 8-வது அதிபர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பாதுகாப்புக்காக 60 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினரும், 8,000 சிவில்பாது­காப்புப் படை­யினரும் நாடுமுழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு வாக்குறுதி

அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையேதான் பலத்தபோட்டி நிலவுகிறது. இவர்களுக்கு அடுத்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், ஒரே பெண் வேட்பாளர் என்றஅடிப்படையில் அஜந்தா பெரேராவும் கவனம் பெறுகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் கோத்தபய ராஜபக்சவுக்கு முக்கியப் பங்கு உள்ளதால் சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்கு அவருக்கு உண்டு. அதே சமயம் உள்நாட்டுப்போரின்போது பல்லாயிரணக்கான தமிழர்களை கொல்லக் காரணமானவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

கோத்தபய ராஜபக்ச தனது தேர்தல் அறிக்கையில், உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும், வடக்கு, கிழக்கில் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைவிடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ் இளைஞர்களுக்கு காவல்துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும், மலையகத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ.1000-ஆக அதிகரிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையில் மலையகத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ.1500-ஆகஉயர்த்தப்படும். நிலங்களுடன் கூடிய தனி வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும். உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நீண்டகால இடம் பெயர்வால் பாதிக்கப்பட்டோரின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் வணிக மறுசீரமைப்பு ஆகியன மேற்கொள்ளப்படும். யுத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை முழுவதும் 22 மாவட்டங்களில் 12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை5 மணி வரை நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்