கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடிகளில் 52 மாணவர்கள் தற்கொலை: வேல்முருகன்

By செய்திப்பிரிவு

தொடர்கதையாகும் ஐஐடி மரணங்களுக்கு மதவாதம் அங்கு கோலோச்சுவதே காரணம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (நவ.15) வெளியிட்ட அறிக்கையில், "கேரளாவைச் சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப், அங்குள்ள தனது விடுதி அறையில் கடந்த வாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவர் முதலாம் ஆண்டு எம்.ஏ. மானுடவியல் படித்து வந்தவர். பிரேதப் பரிசோதனையில் இயற்கைக்கு மாறான மரணம் எனக் கூறப்பட்டு, சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஃபாத்திமாவின் செல்போன் ஸ்க்ரீன் சேவரில் "என் டேப்லெட்டைப் பார்க்கவும்" என்றிருந்தது. அதில் தன் மரணத்திற்கு பேராசிரியர் ஒருவர் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார் ஃபாத்திமா. மேலும் தனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்த 2 பேராசிரியர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

ஃபாத்திமாவின் தந்தை லத்தீப், "என் மகள் பாடங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை; ஏனென்றால் அவர் படிப்பில் படு சுட்டி; பேராசிரியர்கள் கொடுத்த மனஅழுத்த நெருக்கடிதான் அவள் இறப்புக்குக் காரணம்," என்றார்.

ஃபாத்திமாவின் தாயாரோ, "என் மகளுக்கு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது; அங்கெல்லாம் கும்பல் வன்முறைகள் நடப்பதால், பாதுகாப்பு கருதி சென்னை ஐஐடியில் சேர்ந்தோம். நன்றாகப் படிப்பவர் அல்லாது ஐஐடியில் சேர முடியுமா? ஆனால் இங்கு இப்படி நேர்ந்துவிட்டது," என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஐஐடிகளில் மொத்தம் 52 மாணவ-மாணவியர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சென்னை ஐஐடியில் 2016 முதல் தற்போது வரை 9 மாணவ-மாணவியர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டில் ஐஐடிகளில் தற்கொலை செய்துகொண்ட மூன்றாவது மாணவியாவார் ஃபாத்திமா. கடந்த ஜனவரியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரியும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் கோபால் பாபுவும் தற்கொலை செய்துகொண்டனர்.

ஐஐடி மரணங்களைப் பொறுத்தவரை முறையான விசாரணை நடப்பதில்லை; அதனால்தான் மரணங்கள் தொடர்கதையாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. ஃபாத்திமா மரணத்திலும் தமிழ்நாடு காவல்துறை எதையோ மூடி மறைப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனிடத்தில் புகார் அளித்துள்ளார் ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப். ஆனால் தமிழ்நாடு காவல்துறை, ஃபாத்திமா மரணத்தில் ஐஐடி பேராசிரியர்கள் 4 பேர் உட்பட 14 பேரை விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது.

பேராசிரியர்களும் ஐஐடியில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். 2019 டிசம்பரில் துணைப் பேராசிரியர் அதிதி ஷர்மா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். ஆனால் இதற்கு குடும்பப் பிரச்சினைதான் காரணமாகச் சொல்லப்பட்டது.

ஏற்கெனவே சென்னை ஐஐடியில் துணைப் பேராசிரியராக இருந்த வசந்தா கந்தசாமி, 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தும், கடைசி வரை பேராசிரியர் ஆக முடியாமலேயே ஓய்வு பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அத்தனை ஆய்வுகளைச் சமர்ப்பித்தவர் அங்கு யாருமில்லை. அவ்வளவு ஏன், ஆய்வே சமர்ப்பிக்காதவர்கள் கூட அங்கு பேராசிரியர்களாக இருக்கிறார்கள். ஆனால் வசந்தா கந்தசாமிக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதுதான் உண்மை. வேண்டுமென்றே அவரைப் பேராசிரியர் ஆக்கவில்லை. காரணம் அவர் சூத்திரர் என்பதே.

அந்த அளவுக்கு சென்னை ஐஐடியில் மட்டுமல்ல, அனைத்து ஐஐடிகள் மற்றும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் சனாதனம் மேலோங்கியிருப்பதும் உண்மை. இதற்கெல்லாம் பல காரணங்கள் இருப்பினும், ஒரு காரணம், ஐஐடிகளில் பேராசிரியர்கள் நியமனத்திலும் சரி, மாணவர் சேர்க்கையிலும் சரி; முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை.

தொடர்கதையாகும் ஐஐடி மரணங்களுக்கு மதவாதம் அங்கு கோலோச்சுவதே காரணம் என்று! மாணவி பாத்திமா லத்தீஃபின் மரணத்திற்கு நீதி வேண்டும்; அதுவே கடைசியாகவும் இருக்க வேண்டும்," என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்