சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடல் குத்தகை சர்ச்சை குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் திடலுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி ரூ.2081 கோடியை ரூ.250 கோடியாக குறைப்பதற்கு தமிழக அரசு பேரம் நடத்துவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அவரது புகாரின் உண்மைத் தன்மை ஒருபுறமிருக்க, இவ்விவகாரத்தில் 2000-வது ஆண்டு முதல் ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் திடல் அமைந்துள்ள 7.52 லட்சம் சதுர அடி பரப்பளவுள்ள நிலம் 1936-ம் ஆண்டு அப்போதைய மதராஸ் கிரிக்கெட் சங்கத்துக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகை ஒப்பந்தம் பின்னர் 1965-ம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கும், 1995-ம் ஆண்டில் 20 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு வரை மிகக்குறைந்த தொகைக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், 1995-ம் ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தில் நிலத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில், அதற்கான குத்தகை தொகையை உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டது.
அதன்படி, 1995 முதல் 2000-வது ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஏற்கெனவே வசூலிக்கப் பட்ட தொகையான ரூ.50 ஆயிரம் குத்தகையாக வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 2000-வது ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை குத்தகைத் தொகையை அரசு நிர்ணயிக்கும் என்றும் ஒப்பந்தத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2000-வது ஆண்டில் கிரிக்கெட் திடல் நிலத்துக்கான வாடகையை அரசு நிர்ணயித்திருந்திருக்க வேண்டும். குத்தகைத் தொகையை நிர்ணயிப்பது கடினமான பணி அல்ல. அரசு நிலம் வணிகப் பயன்பாட்டுக்காக குத்தகைக்கு விடப்பட்டு இருந்தால், அந்த நிலத்தின் சந்தை மதிப்பின் இரு மடங்கில் 7 விழுக்காட்டை ஆண்டு குத்தகையாக வசூலிக்க வேண்டும் என்பது தான் வருவாய்த்துறை வகுத்துள்ள விதியாகும். அதன்படி கிரிக்கெட் திடல் நிலத்துக்கான குத்தகைத் தொகையை தமிழக அரசு மிகவும் எளிதாக வகுத்திருக்க முடியும்.
ஆனால், 2000-வது ஆண்டில் தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. அப்போது தமிழ்நாட்டை ஆண்டது யார்? என்பது இப்போது சர்ச்சை எழுப்பியுள்ள ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். 2001-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, 2004-ம் ஆண்டில் வருவாய்த்துறை விதிகளின்படி கிரிக்கெட் திடலுக்கான குத்தகையை நிர்ணயித்தது. 2000-வது ஆண்டு முதல் 22.98 கோடி குத்தகை தர வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு அரசு அறிவிக்கை அனுப்பியது. ஆனால், அதை கிரிக்கெட் சங்கம் ஏற்க மறுத்த நிலையில், குத்தகை குறித்த சிக்கல் நீடித்தது.
2006-ம் ஆண்டுடன் இரண்டாவது குத்தகை நீடிப்பு காலமும் முடிவடைந்த நிலையில், கிரிக்கெட் திடலுக்கான குத்தகைத் தொகையை, சந்தை நிலவரப்படி நிர்ணயிக்கக் கோரி 2007-ஆம் ஆண்டில் வருவாய்த் துறை அமைச்சருக்கும், வருவாய்த்துறை செயலாளருக்கும் நில நிர்வாக ஆணையர் கோப்பு அனுப்பினார். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நில நிர்வாக ஆணையரின் கோப்பை கிடப்பில் போட்டது.
அடுத்த சில மாதங்களில் கிரிக்கெட் திடல் நிலத்திற்கு குத்தகை நிர்ணயிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை செயலாளருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் கோப்பு அனுப்பினார். அதனடிப்படையில் வருவாய்த்துறை செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கை வினோதமானது. கிரிக்கெட் திடலுக்கு குத்தகை தொகையை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வருவாய்த்துறை தெளிவாக வகுத்துள்ளது. அதன்படி குத்தகைத் தொகையை தமிழக அரசு மிகவும் எளிதாக வரையறுத்திருக்க முடியும். ஆனால், வருவாய்த்துறை செயலாளர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, கிரிக்கெட் திடலுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்க அதிகாரிகள் குழு ஒன்றை வருவாய்த்துறை செயலாளர் அமைத்தார். அந்தக் குழு அடுத்த ஆட்சி மாற்றம் நடக்கும் வரை கிரிக்கெட் திடலுக்கு குத்தகை நிர்ணயிக்கவில்லை. 2007-ம் ஆண்டில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தது? என்பதை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை.
2011-ம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர், 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் நில நிர்வாக ஆணையருக்கு கோப்பு அனுப்பினார். அதனடிப்படையில் தான் கிரிக்கெட் வாரியம் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ரூ.1,834.78 கோடி குத்தகை பாக்கி செலுத்த வேண்டும் என்று அறிவித்ததுடன், அதை வசூலிக்க நடவடிக்கையும் மேற்கொண்டார். ஆனால், அதை செலுத்தாத கிரிக்கெட் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனிடையே, 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையிலான குத்தகைத் தொகை ரூ.246.30 கோடி சேர்த்து மொத்தம் ரூ.2081 கோடி குத்தகை பாக்கி வசூலிக்கப் பட வேண்டும் என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
சேப்பாக்கம் திடல் குத்தகை குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்க முடியும். ஆனால், 2000-வது ஆண்டு முதல் அந்த நிலத்திற்கான குத்தகையை நிர்ணயிக்காமலும், வசூலிக்காமலும் தாமதப்படுத்தி வந்தது திமுக அரசு, குத்தகையை நிர்ணயித்து வசூலிக்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், தங்களின் தவறுகளை எல்லாம் மறைத்து விட்டு, இந்த விஷயத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
மீத்தேன் வாயு திட்டங்களுக்கு அனுமதி அளித்தது, நீட் தேர்வைக் கொண்டு வந்தது, ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டு வந்தது, பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்துக்கு அனுமதி அளித்தது, காவிரி நீர் சிக்கலில் துரோகம் செய்தது, கச்சத்தீவை தாரை வார்த்தது என தமிழகத்தின் நலன்களுக்கு அனைத்து வகையிலும் துரோகங்களை இழைத்து விட்டு, பின்னர் அதற்கான பழியை பிறர் மீது போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மு.க. ஸ்டாலினுக்கு வாடிக்கையாகி விட்டது. இது என்ன வகையான அரசியல்? என்பது தான் புரியவில்லை.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலுக்கான குத்தகையை நிர்ணயிப்பதில் கடந்த 2000-வது ஆண்டிலிருந்து இப்போது வரை திட்டமிட்டு இழைக்கப்பட்ட துரோகங்கள் எவை எவை?, அதற்குக் காரணமானவர்கள் யார்? என்பதை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியது அவசியம் ஆகும். அதற்காக இது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago