திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தமிழிசையின் தேர்தல் வழக்கை வாக்காளர் தொடரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெற்றதால், அந்த வழக்கை வாக்காளர் என்ற முறையில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தமிழிசை மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தமிழிசை தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை, வாக்காளர் என்ற முறையில் தமிழிசைக்குப் பதிலாக தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கோரி ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நேற்று நடந்தது. அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்ஸன் வில்சன், ‘‘தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ள மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி தலைவராக உள்ளார். தமிழிசைக்காக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த தகவல்களை எல்லாம் மறைத்து தொகுதி வாக்காளர் எனக் கூறி தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆகவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

மனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், ‘‘இந்த வழக்கு தொடர்பாக தொகுதி வாக்காளர் என்ற முறையில்தான் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். வழக்குக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர, வழக்குக்கு தொடர்பில்லாத விஷயங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த வழக்கை தமிழிசைக்குப் பதிலாக முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் வழக்கு தொடர்ந்த நபர் அந்த வழக்கை திரும்பப் பெற்றால், அவருக்குப் பதிலாக அந்த வழக்கை தொகுதிக்கு சம்பந்தப்பட்ட வேறு யாரும் தொடர்ந்து நடத்தலாம். எனவே கனிமொழிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கை மனுதாரரான முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்தலாம்’’ என அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ‘தமிழிசை வழக்கை வாபஸ் பெற்றதால் இந்த வழக்கு செலவை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கனிமொழி தரப்பில் கோரப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி, ‘தமிழிசை தற்போது ஆளுநராகி விட்டார் என்பதால்தான் இந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். எனவே வழக்கு செலவு தொகையை வழங்கத் தேவையில்லை’ என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்