முப்பருவக் கல்வி முறை ரத்து: ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்துக்கு மூடுவிழா

By மு.அப்துல் முத்தலீஃப்

சென்னை

தமிழக பள்ளிக் கல்வித்துறை இதுவரை இருந்துவந்த முப்பருவக் கல்வி முறையை ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின் மூலம் முன்னர் ஜெயலலிதா குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைக்கக் கொண்டு வந்து வரவேற்பைப் பெற்ற திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2012-ல் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் இருந்தும் 9, 10-ம் வகுப்புகளுக்கு 2013-14 ஆம் கல்வியாண்டில் இருந்தும் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

முப்பருவக் கல்வி முறை என்பது காலாண்டுத் தேர்வு வரை படிப்பதை காலாண்டுத் தேர்வில் எழுதுவது, காலாண்டுக்குப் பின் அரையாண்டு வரை படிக்கும் பாடங்களை அரையாண்டுத் தேர்வில் எழுதுவது, அரையாண்டுக்குப் பிறகு முழு ஆண்டு வரை படிப்பதை முழு ஆண்டுத் தேர்வில் எழுதுவது என்ற நடைமுறை மாணவர்களின் புத்தகச் சுமையைப் பெருமளவு குறைக்கும் ஒரு உளவியல் பூர்வமான நடைமுறை ஆகும்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வாக்களித்தபடி அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா 110- விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் வரும் கல்வியாண்டு முதல் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்.

முழு கல்வி ஆண்டுக்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்கள் நீக்கப்படும்” என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 19.9.2011 அன்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவக் கல்வி முறையும் தொடர் மற்றும் முழுமையான முறையும் 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் அமல்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு முப்பருவக் கல்வி முறை நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு 2019- 20 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும், முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும்,தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின.

இதற்கிடையே மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை கொண்டுவரும் முன்னரே தமிழக பள்ளிக் கல்வித்துறை முந்திக்கொண்டு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் அறிவித்தது. இதைத் தவிர 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறையில், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாகப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வந்ததும் ரத்து செய்யப்பட்டு நடப்புக் கல்வியாண்டு முதல் ஒரே பாட நூலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டிலேயே பொதுத்தேர்வு நடைபெறுவதால், அவர்களின் பாட நூல்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், 2020- 21 ஆம் கல்வியாண்டு முதல் 8-ம் வகுப்புப் பாடநூல்களை ஒன்றாக இணைத்து, ஒரே பாடநூலாக வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

வரும் கல்வி ஆண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவே மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை ஒன்றிணைத்து தேர்வு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகம் மூன்று பிரிவுகளாக வழங்கியதற்கு பதில் ஒரே புத்தகமாக வழங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் திட்டம் மாற்றப்பட்டு மீண்டும் பழைய நிலைக்குச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இனி வரும் காலங்களில் ஆண்டு முழுவதும் மொத்தப் புத்தகத்தையும் படித்து பாடம் எழுதும் சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பள்ளிக் குழந்தைகளை சோர்வில் ஆழ்த்தும் விஷயமாகும்.

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது, ''5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துவிட்டார்கள். பொதுத்தேர்வு என்பது ஆண்டு முழுவதும் படிக்கும் முழுப்புத்தகத்தையும் வைத்து எழுதுவது. ஆகவே முப்பருவக் கல்வி முறையை ரத்து செய்கிறார்கள். இதில் இடையில் 6 மற்றும் 7-ம் வகுப்புகள் உள்ளதால் மொத்தமாக அந்த வகுப்புகளிலும் முப்பருவக் கல்வி முறையை ரத்து செய்கிறார்கள்.

குழந்தைளுக்குப் புத்தகச் சுமை இருக்கக்கூடாது, பைகளில் புத்தகங்களை அதிகமாக சுமந்துகொண்டு போகக்கூடாது, பாடமே சுமையாக மாறக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்துக்கு எதிரான ஒன்றை தற்போது கொண்டு வந்துள்ளனர் என்பது மட்டுமே உண்மை'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்