தமிழகம், புதுவையில் கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக்.30) வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"நேற்று குமரிக்கடல் பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, அக்.30-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது, திருவனந்தபுரத்திற்கு தென்மேற்கில் சுமார் 220 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து அடுத்து வரும் 24 மணிநேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதனைத் தொடர்ந்து புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் லட்சத்தீவுகளைக் கடந்து செல்லக் கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 80 இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில், குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்கள் வரும் 30-ம் தேதி குமரிக்கடல், தெற்கு தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மன்னார் வளைகுடா, மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தெற்கு கேரள கடற்கரை பகுதிகளுக்கும் 31-ம் தேதி மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை தொடரும்,"

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE