2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் குழுவில் தான் தயாரித்த கருவியுடன் ஆரம்பத்தில் முயற்சி செய்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டனிடம் இன்று (அக்.28) காலையில் பேசினேன். அவரிடம் எடுத்த இந்த பேட்டியை எழுதும் சமயத்தில், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 66 மணிநேரத்தைக் கடக்கவிருந்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அன்று தொடங்கிய மீட்புப் பணி 4-வது நாளாக இன்றுவரை முழுவீச்சில் நடந்துவருகிறது
மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீதர், தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புத்துறை என கிட்டத்தட்ட 8 குழுக்கள் முயற்சித்தும், கடந்த 4 நாட்களாக கேட்க விரும்பும் நல்ல செய்தி இன்னும் காதுகளுக்கு எட்டவில்லை.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் இடையறாத பணிகளையும், தீபாவளியன்றும், வீட்டுக்குச் செல்லாமல் மீட்புப்பணிகளை தொடர்வதையும் மாற்றுக்கட்சியினரும், மக்களும் பாராட்டி வருகின்றனர்.
அதேவேளையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 67 மணிநேரம் கடந்தும் மீட்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கியிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இதனிடையே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தூக்கும் ரோபோட் போன்ற கருவியை தாயாரித்த மணிகண்டனிடம் பேசினோம். குழந்தை சுஜித்தை மீட்கும் குழுவில் இருந்தவரான மணிகண்டன், மீட்பில் ஏன் பின்னடைவு, எத்தகைய தொழில்நுட்பம் தேவை என்பதை பேசினார்.
உங்களுக்கு குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி எப்போது தெரியவந்தது? அப்போது உங்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது?
எனக்கு குழந்தை விழுந்த அன்றே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கே திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. 8 மணிக்கெல்லாம் நிகழ்விடத்திற்கு சென்றுவிட்டேன். அரை மணிநேரத்தில் குழந்தையை மீட்கலாம் என்ற நம்பிக்கையில் சென்றேன்.
ஏற்கெனவே அங்கு டேனியல் என்பவர், குழந்தையின் ஒரு கையில் கயிற்றை கட்டி மற்றொரு கையில் மாட்டுவதற்கான முயற்சியில் இருந்தார். அவருடைய முயற்சியே வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் இருந்தோம்.
பலமுறை முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆழ்துளை கிணற்றின் ஆழத்திற்கு செல்லச்செல்ல அதன் விட்டம் குறைந்துகொண்டே சென்றது, இதனால் குழந்தை அந்த இடத்தில் இறுக்கிக்கொண்டிருந்தது.
அடுத்ததாக, கோவை விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீதர் என்பவரின் தலைமையில் ஒரு கருவி மூலம் முயற்சி செய்தனர். ஆனால், குழந்தையின் இரு கைகளும் மடங்கியிருந்ததால், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
அதன்பிறகு தான் நான் முயற்சி செய்தேன். கைபோன்ற ரோபோட் கருவி மூலம் குழந்தையைத் தூக்குவது போன்ற கருவி, கயிற்றால் குழந்தையின் கைகளைக் கட்டி மேலே தூக்குவது போன்ற மற்றொரு கருவி என நான் வடிவமைத்திருந்த இரு கருவிகளையும் கொண்டு சென்றிருந்தேன்.
ரோபோட் போன்ற என்னுடைய கருவி 6*5 என்ற அளவில் இருந்தது. அது குழந்தை இருக்கும் இடத்தில் நுழையாது என்பதால், என்னுடைய இரண்டு கருவிகளையும் 5*5 என்ற அளவுக்கு சுருக்கி மறுநாள் காலையில் கொண்டு வந்தேன்.
ஆனால், அதற்குள் குழந்தை 70 அடிக்குள் சென்றுவிட்டது. இருந்தாலும் கயிற்றின் மூலம் இழுத்துப் பார்த்தோம். ஆனால், குழந்தை இறுக்கமாக இருந்ததால் மேலே வரவில்லை.
குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் பலனளிக்காததற்கான காரணம் என்ன?
இந்த ஆழ்துளை கிணற்றின் விட்டம் 5*5 என்ற அளவில் குறுகி இருப்பதே எந்த முயற்சியும் பலனளிக்காததற்குக் காரணம். குழந்தையின் தலைக்கு மேல் ஒரு குண்டூசியைக் கூட செலுத்த முடியாத அளவுக்கு இடைவெளியே இல்லாமல் இருந்தது. நான் தயாரித்த கருவியை முடிந்த அளவுக்குக் குழந்தையின் கைகளில் இறுக்கித் தூக்க முயற்சித்தோம். ஆனால், பலனளிக்கவில்லை. கருவியை மேலும் இறுக்கித் தூக்கினால் அது குழந்தையின் உயிருக்கு விபரீதமாகும் என்பதால், அம்முயற்சியைக் கைவிட்டோம்.
ரோபோட் போன்ற கருவியை நீங்கள் தயாரித்தது எப்போது, அதன்மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்ட நம்பிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?
2003-ல் என்னுடைய குழந்தையே ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை 5 அடிக்குள் தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருந்தது. அதனால், என் கைகளைக் கொடுத்தே குழந்தையை மீட்டுவிட்டேன். இருந்தாலும், என் குழந்தை விழுந்த போது நான் அடைந்த வேதனையை வேறெந்த பெற்றோரும் அடையக்கூடாது என்பதால் குழந்தையை தூக்குவதற்கான கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில், குழந்தையை தூக்கும் வகையில் மட்டுமே கருவியை செய்தேன். அதன்பிறகு, அதில் கேமரா பொருத்தி நவீன முறையில் மாற்றினேன். ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்குக் கீழே இந்த கருவியை செலுத்துவதற்கான தொழுல்நுட்பமும் இதில் இருக்கிறது. ஆழ்துளை கிணற்றில் தண்ணீரில் குழந்தை இருந்தாலும் மீட்கும் வகையில் நவீனமாக்கி உள்ளேன். தொடர்ந்து ஒவ்வொரு அனுபவங்களின் போதும் கருவியை சூழலுக்கு ஏற்ப நவீனமாக்கி வருகிறேன்.
சங்கரன்கோவிலில் ஏற்கெனவே 2014-ல் தர்ஷன் என்கிற குழந்தையை உயிருடன் மீட்டுள்ளோம். 20 அடியில் விழுந்த அந்த குழந்தைக்கு இடையே கருவியை செலுத்துவதற்கான இடைவெளி இருந்ததால் மீட்டோம். திருவண்ணாமலையில் இக்கருவி மூலம் மீட்ட குழந்தை, மருத்துவமனைக்கு செல்லும்போது உயிரிழந்தது. 2007-ல் இருந்து பல சம்பவங்களை இம்மாதிரி கருவிகளின் மூலம் மீட்க முயற்சித்திருக்கிறோம்.
நீங்கள் கண்டுபிடுத்த கருவியை அரசே பெற்று, அதனை தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டீர்களா?
2006 வரை இந்த கருவியை அரசு வாங்கிக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், கருவிக்கு உரிய அங்கீகாரம் வாங்கினால் தான் பெற்றுக்கொள்வோம் என தமிழக தீயணைப்புத் துறை தெரிவித்தது. 2006-ல் சென்னை ஐஐடியில் இந்த கருவியை நிரூபித்துக்காட்டினேன். அங்கு இந்த கருவிக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது வழங்கினர்.
அதன்பிறகும், தமிழக தீயணைப்புத்துறையில் இக்கருவியை வாங்கிக்கொள்வதற்காக முயற்சி செய்தேன். அப்போது, இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும்போது என்னை அழைப்பதாக தெரிவித்தனர். அதன்பிறகு, கரூரில் ஆழ்துளை கிணற்றில் 12 அடியில் விழுந்திருந்த குழந்தையை மீட்க அழைத்தனர்.
ஆனால், எனக்கு அழைப்பு வந்தபிறகு செல்வதில் தாமதமானதால், குழந்தை இறந்துதான் மீட்க முடிந்தது. அதன்பிறகு, குழந்தையை உயிருடன் மீட்டால்தான் கருவியை வாங்கிக்கொள்வோம் என தீயணைப்புத்துறை கூறிவிட்டது.
2014-ல் நான் ஏற்கெனவே சொன்னது போன்று குழந்தையை காப்பாற்றிய போது, வேலூர், மதுரை, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் தீயணைப்புத்துறை இக்கருவியை வாங்கியது. அந்த மாவட்டங்களில் தீயணைப்புத்துறையினர் அக்கருவியை எப்படி பயன்படுத்துவது, குழந்தையை எப்படி மீட்பது என தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.
எல்லா மாவட்டங்களுக்கும் வாங்குவதற்காக இந்த ஆண்டுதான் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எனக்கு அந்த தகவல் உறுதியாகத் தெரியவில்லை. மாவட்டம் முழுவதற்கும் வாங்குவதற்கான கருவிகளுக்கான விலையின் உத்தேசப் பட்டியலை கேட்டிருக்கின்றனர்.
இந்திய ராணுவம் பெங்களூருவில் இக்கருவியை வாங்கியிருக்கின்றனர். ஹைதராபாத்தில் தேசிய பேரிடர் மீட்புத்துறை வாங்கியுள்ளது. இந்தியா முழுவதும் வாங்குவதற்காகவுன் விலை உத்தேச பட்டியலை தேசிய பேரிடர் மீட்புத்துறை கேட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளே குழந்தை ஆழத்திற்கு சரிந்துகொண்டே செல்வதற்குக் காரணம் எனவும், குழந்தையை ஒரே இடத்தில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என சிலர் கூறுவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது ஆரம்பத்தில் 5 அடியில் தான் இருந்தது. ஆனால், குழந்தை சரிந்துகொண்டே ஆழத்திற்கு சென்றது. மிகக்கிறுகிய இடைவெளியே இருப்பதால், மீட்புப் பணிகளின் போது, மீட்புக்கருவிகள் ஆழ்துளை கிணற்றில் லேசாக தடுமாறினாலே குழந்தை சரிந்துகொண்டே சென்றது.
அதுதான் குழந்தை ஆழத்திற்கு சென்றுகொண்டே இருப்பதற்கான காரணம். கயிறு கட்டாமல் இருந்தாலும் குழந்தை ஆழத்திற்கு சென்றிருக்கும். மீட்புப்பணியால் குழந்தை ஆழத்திற்கு செல்வதாக சொல்வதை ஏற்க முடியாது.
மீட்புப்பணியில் பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தது தேசிய பேரிடர் மீட்புத்துறை தான். ஆனால், அவர்களின் முயற்சியிலும் எதிர்பார்த்த பலன் இல்லை. இவை ஏன், இந்தியாவில் நவீன தொழில்நுட்பம் இல்லை என நினைக்கிறீர்களா?
நிகழ்விடத்திலேயே அனைத்து மீட்புக்குழுக்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 10 கருவிகள் இருந்தன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் இல்லை. கடந்த மாதம், பஞ்சாபில் இதேபோன்று சம்பவம் நடந்தது, 5 நாட்கள் முயற்சித்துப் பார்த்து குழந்தை இறந்தவுடன் தான் என்னை அழைத்தனர். ஆனால், நாட்கள் கடந்துவிட்டதால் அங்கு செல்லவில்லை. இப்படி, எந்த மாநிலமாக இருந்தாலும் இங்கிருந்துதான் தொழில்நுட்பத்துடன் அங்கு செல்ல வேண்டியுள்ளது.
இருந்தாலும், இம்மாதிரியான சம்பவம் எங்கு நிகழ்ந்தாலும், நாங்கள் நிகழ்விடத்திற்கு செல்வது போல்தான் இன்னும் இருக்கிறது. அப்படியில்லாமல், அங்கேயே கருவிகள் இருக்க வேண்டும்.
சீனாவில் சில நிமிடங்களில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலாவுகின்றன? அதுகுறித்து...
அந்த வீடியோவை நன்றாக கவனித்தால், குழந்தையை மீட்பதற்கான இடைவெளி இருப்பது தெரியும். இந்த சம்பவத்திலும் இடைவெளி இருந்திருந்தால் குழந்தையை மீட்டிருக்கலாம். சீனாவில் இருந்து இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும் இந்த சம்பவத்தில் குழந்தை சுஜித்தை மீட்பது சிரமம்.
மீட்புப் பணிகளுக்கிடையில் இந்த இக்கட்டான உங்களின் தனிப்பட்ட உணர்வு என்ன மாதிரி இருந்தது? அங்கு எத்தகைய சூழல் நிலவியது?
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த இரவிலிருந்து நேற்றுவரை ஒன்றுமே சாப்பிடவில்லை. வேதனையை அனுபவித்தோம். சுஜித்தின் தாயின் வேதனை தாங்க முடியவில்லை. என்னுடைய 14-15 ஆண்டு உழைப்பு சுஜித்தை மீட்பதில் பலனளிக்காததில் வருத்தம்.
குழந்தையை மீட்க வேண்டும் என அனைவரும் போராடுகின்றனர். குழந்தையை உயிருடன் மீட்டு விட்டால் சந்தோஷம். அமைச்சர்களும் குழந்தையின் தாய்க்குரிய கவலையுடன் தான் இருக்கின்றனர். அமைச்சர்கள் என்ற ரீதியில் அமர்ந்திருக்கவில்லை. அமைச்சர்களும் சாப்பிடவில்லை. யார் வந்து, என்ன யோசனை தந்தாலும், அது நன்றாக இருந்தால் முயற்சிக்க அமைச்சர்கள் அனுமதி கொடுக்கின்றனர்.
அனைவரது யோசனைகளையும் சோதிப்பதிலேயே காலதாமதம் ஆவதாகவும், இதற்கான சரியான தொழில்நுட்பம் அரசிடம் இல்லை என்ற விமர்சனத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்?
தேசிய மீட்புத்துறையிடம் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. கயிறு மட்டும்தான் இருந்தது. அதன் மூலம் தான் குழந்தையை மீட்க முயற்சித்தனர். அரசிடம் எந்தக்கருவியும் இல்லை. ஆழ்துளை கிணற்றில் உள்ள மண்ணை உறிஞ்சுவதற்கான தொழில்நுட்பம் கூட அரசிடம் இல்லை.
அதனைக் கண்டுபிடித்தால் தான் அடுத்த சம்பவங்களில் குழந்தையைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான விபத்துகள் நடக்கக் கூடாது என நினைக்கிறோம். ஆனால், அதனை மீறி மாதத்திற்கு ஒரு விபத்து இம்மாதிரி நடந்துகொண்டிருக்கின்றன.
இம்மாதிரியான இரு சம்பவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடந்ததையெல்லாம் நானே எதிர்கொண்டிருக்கிறேன். நான் தயாரித்த கருவியை ஆராய்ச்சி செய்வதற்கு நவீனமாக்குவதற்கு உதவி செய்ய வேண்டும். அதன்பிறகு அக்கருவியை அரசாங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், குழந்தையை மீட்கக்கூடிய வகையிலான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அரசு பொருளாதார உதவி செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் தாண்டி கண்டுபிடித்த கருவிகளை பயன்படுத்தாத சூழல் ஏற்பட வேண்டும். இந்த உலகத்திலேயே பயன்படாத கருவி மணிகண்டன் கருவிதான் என்ற நிலை ஏற்பட வேண்டும். இதைத்தான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மீட்கும் கருவி இருக்கட்டும், ஆனால், அதனை பயன்படுத்தக்கூடாது.
தொடர்புக்கு: Nandhini.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago