சென்னை
தமிழகத்தில் வடகிழக்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீபாவளியன்று மழை பெய்யுமா, அடுத்து வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை முடிந்து தமிழகத்தில் கடந்த 17-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த வரும் 2 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் நல்ல மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில் எவ்வாறு மழை இருக்கும் என்பது குறித்து ஃபேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் 'இந்து தமிழ்' இணையதளத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்ததில் அடுத்துவரும் நாட்களில் பருவமழை எவ்வாறு இருக்கும்?
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் நாட்களில் தீவிரமாகும். குறிப்பாக 23-ம் தேதிக்குப் பின் மழையின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும். இந்த மாத இறுதிவரை தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாத இறுதியில் அக்டோபர் மாதத்தில் சராசரியாகப் பெய்ய வேண்டிய அளவைக் காட்டிலும் அதிகமாகவே பெய்திருக்கும்.
தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
தற்போது அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஓமன் கடற்பகுதி நோக்கிச் செல்லவும் வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் மேற்கு திசைக் காற்று கிழக்கு நோக்கி இழுக்கப்படுவதால், செவ்வாய்க்கிழமை வரை கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் இரவு நேரத்தில் தொடங்கி காலை வரை வழக்கம்போல் மழை இருக்கும். தென் மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்துவரும் நாட்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.
இதுதவிர கேரளாவின் ஆலப்புழா, பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்துக்குக் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கு வாய்ப்புள்ளதா?
ஆம், வங்கக்கடலில் அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கிறது. அனேகமாக 23-ம் தேதி உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பின், தமிழகத்தின் வடதமிழகம், கடற்கரையோர மாவட்டங்களான சென்னை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கடலூர்,தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கனமழை இருக்கும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறுமா? எந்த திசை நோக்கி நகரும்?
இப்போதே அதைக் கணிக்க முடியாது. ஆனால், பல்வேறு வானிலை மையங்கள் கணிப்பின்படி, வடதமிழகம் நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதுபோன்றே காட்டப்படுகிறது. ஆனால், புயலாக வலுப்பெறுமா அல்லது கடலிலேயே வலுவிழந்துவிடுமா அல்லது தெற்கு ஆந்திரா நோக்கி நகருமா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும். இதன் காரணமாக, தமிழகத்தின் வடதமிழகம், கடலோர மாவட்டங்களில் அடுத்துவரும் நாட்களில் கனமழை பெய்யும்.
தீபாவளிப் பண்டிகையன்று மழை பெய்யுமா?
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதை, நகர்வைப் பொறுத்தே கூற முடியும். ஒருவேளை 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால், தீபாவளிக்கு முன்பாக மழை நிற்க வாய்ப்புள்ளது. அல்லது காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரா நோக்கிச் சென்றாலும் நமக்கு மழை தீபாவளியன்று இருக்காது. ஆனால் எதுவாக இருந்தாலும் இன்னும் சில இரு நாட்களில் தெளிவாகத் தெரிந்துவிடும்.
வங்கக் கடலில் இதுதவிர 2-வதாக காற்றழுத்த தாழ்வு நிலை அதைத்தொடர்ந்தே உருவாகிவிடும் என்று கூறப்படுகிறதே?
வாய்ப்பு இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் 2-வது காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகலாம். முதலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து சென்றபின் மழை குறையும் போது அடுத்ததாக ஒன்று உருவாகும். அனேகமாக 27-ம் தேதிக்கு மேல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருக்கிறது. எப்படியாகினும் இந்த மாதம் இறுதிவரை தமிழகத்துக்கு நல்ல மழை காத்திருக்கிறது.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்
பேட்டி: போத்திராஜ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago