திருநெல்வேலி
பிரபாகரன் படத்தை வைத்து அரசியல் செய்யும் சீமானுக்கு விளம்பர நோக்கம் மட்டுமே உள்ளது என விமர்சித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திருநெல்வேலியில் இன்று (அக்.18) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2021-ல் அதிமுக ஆட்சியை அகற்றுவதற்கான முன்னோட்டமாக அமையும். இந்தியாவில் இல்லாத அளவுக்கு அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல், முறைகேடு, அத்துமீறல் உள்ளிட்டவை தமிழகத்தின் 60 ஆண்டுகால வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டன.
மாநில அரசின் உரிமைகளைக் கேட்டுப் பெற தயங்குகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
ஆனால், அவர் வழி வந்ததாக சொல்லும் பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு பணிந்து நீட் தேர்வை நடத்தி, தமிழக மாணவர்களின் எதிர்க்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டது.
மத்திய அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எதிர்ப்பு இருந்தது. ஆனால், இப்போதைய தமிழக அரசு பாஜக என்ன சொல்கிறதோ அதை அப்படியே நிறைவேற்றுகிறது.
பாஜகவே இந்த மாநிலத்தை ஆண்டால்கூட இந்த அளவுக்கு அவர்களுடைய திட்டங்களை நிறைவேற்ற முடியாது. ஆனால், பாஜகவின் முகமூடியாக இருந்து ஆர்எஸ்எஸ் எதையெல்லாம் விரும்புகிறதோ அதையெல்லாம் நடைமுறைப்படுத்துவது கொடுமையானது.
சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, இந்தியா முழுவதும் உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு ஏராளமான கல்விக் கடன் வழங்கப்பட்டது. பாஜக ஆட்சி வந்த பின்னர் அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.
மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளனர். பணத்தை வசூலித்து, 45 சதவீதத்தை அனில் அம்பானி நிறுவனம் எடுத்துக்கொள்லாம், மீதி 55 சதவீதத்தை வங்கிகளுக்கு கட்டினால்போதும் என்று சொல்லி உள்ளனர்.
இந்த சலுகையை மாணவர்களுக்கே கொடுத்தால் மகிழ்ச்சியாக பணத்தை கொடுத்துவிடுவார்கள். மோடி, மத்திய நிதியமைச்சருக்கு அந்த அளவுக்கு விசாலமான சிந்தை இல்லை. சிதம்பரத்தை எவ்வளவு காலத்துக்கு நீதிமன்ற காவலில் வைக்க முடியுமோ அவ்வளவு காலம் காவலில் வைக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும் தான் அவர்களுக்கு உள்ளது.
முதல்வரின் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையில் 3,500 கோடி ரூபாய் பணிகளுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்த புகார்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அதன்படி சிபிஐயிடம் அந்த வழக்கு உள்ளது. சிதம்பரம் வழக்கில் சிபிஐ காட்டும் தீவிரத்தை இதில் காட்டவில்லை.
முதல்வர் பழனிசாமி அடிபணிகிறார். எனவே அவருக்கு சிபிஐ புன்சிரிப்பு காட்டுகிறது. சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அது எங்கிருந்து வந்தது என்பது மூடி மறைக்கப்படுகிறது. சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து வருமானவரித் துறை கைப்பற்றிய டைரியில் நந்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு 646 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு நடைபெறவில்லை. இவர்களெல்லாம் சுதந்திரமாக சுற்றி வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. செய்யாத்துறை நிறுவனத்தில் 230 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றியது. அதன் பங்குதாரராக அமைச்சர் வேலுமணி உள்ளார். இப்போதும் வேலுமணி அமைச்சராக உள்ளார். செய்யாத்துறையும் வெளியில் இருக்கிறார்.
நீதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அரசு இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றிலும் அத்துமீற முடியுமா?. நேரு ஆட்சிக் காலத்தில் அரியலூரில் ரயில் கவிழ்ந்தபோது லால்பகதூர் சாஸ்திரியும், அழகேசனும் ராஜினாமா செய்தார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோது முதல்வராகவும், அமைச்சராகவும் பதவியில் நீடிப்பது எப்படி நியாயம்?.
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. ரேஷன் கார்டு கேட்டு வந்தவரை அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டாய். காங்கிரஸ், திமுககாரர்களைப் போய் பார் என்று கூறியுள்ளார். இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக முதலீட்டாளர் மாநாடு அதிமுக ஆட்சியில் 2 முறை நடந்துள்ளது. எவ்வளவு முதலீடு வந்தது, எவ்வளவு தொழிற்சாலைகள் வந்துள்ளன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் சென்றதாகக் கூறினார்கள். இப்போதும் எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பதை சொல்லவில்லை. அதிமுக அரசால் ஒரு தொழிற்சாலையைக் கூட கொண்டுவர முடியவில்லை.
இருக்கும் தொழிற்சாலைகள் மூலம் இன்னொரு அலகை தமிழகத்தில் தொடங்கினாலே ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் தொந்தரவு செய்வதால் வெளி மாநிலங்களில் இரண்டாவது அலகை தொடங்குகின்றனர். இதனால் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வெளி மாநிலத்துக்கு சென்றுள்ளன. 1.20 லட்சம் கோடி ரூபாய் புயல் நிவாரண நிதி கேட்டார்கள். ஆனால் மத்திய அரசு 3700 கோடி ரூபாய் மட்டுமே காலம்தாழ்த்தி வழங்கியது.
நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்றது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் அதிமுக அரசு இதில் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.
நாங்குநேரி தொகுதியில் அதிமுகவினர் ஏராளமான பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளனர். எம்எல்ஏ கையில் 2 லட்சம் ரூபாய் வைத்திருந்தது பெரிய குற்றமல்ல. முதல்வர், அமைச்சர்கள் அறைகளில் சோதனை நடத்தி, பணம் பறிமுதல் செய்தார்களா?. திமுக எம்எல்ஏ மீது பண பட்டுவாடா புகார் கூறுவது ஆளுங்கட்சியின் சூழ்ச்சியாக இருக்கலாம்.
நீட், ஜிஎஸ்டி காங்கிரஸ் அரசின் திட்டம் தான். ஜிஎஸ்டியில் 18 சதவீதத்துக்கு கீழ் ஒரே வரிவிதிப்பு இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. பாஜக கொண்டுவந்த மசோதாவை பாஜக எதிர்த்தது. இருப்பினும் பாஜக ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது நாங்கள் ஆதரித்தோம். ஆனால், 48 சதவீதம் வரை வரி விதித்தார்கள். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் பாஜக அவ்வாறு செய்யவில்லை. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் வேலையில்லாத் திண்டாட்டம் 2.2 சதவீதத்தில் இருந்து இப்போது 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நீட் தேர்வை விரும்பும் மாநிலங்கள் நடைமுறைப்படுத்தலாம், விரும்பாத மாநிலங்கள் நடைமுறைப்படுத்த வேண்டாம் என்பது தான் காங்கிரஸ் அரசின் கொள்கையாக இருந்தது. 2016 வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தவில்லை. மோடி சொன்னதற்காக நீட் தேர்வை தமிழகத்தில் அதிமுக அரசு நடைமுறைப்படுத்திவிட்டது.
இலங்கை யுத்தத்தில் அந்நாட்டு அரசுக்கு இந்தியா எவ்வித ஆயுத உதவியும் செய்வில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக சீமான் செய்த உதவிகளை விட காங்கிரஸ் அரசு செய்த உதவிகள் அதிகம். பிரபாகரன் படத்தை வைத்து அரசியல் செய்யும் சீமானுக்கு விளம்பர நோக்கம் மட்டுமே உள்ளது.
தமிழக சிறைகளில் 200 மேற்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் விடுதலை கேட்காமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயம்?. குற்றவாளிகளுடன் சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது கேவலமாக இல்லையா?. 7 பேர் மட்டும் தமிழர்கள், மற்றவர்கள் சீனாவில் இருந்து வந்தவர்களா?. 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதையும், விடுதலை செய்வதையும் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ராகுல் காந்தி துரோகம் செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பேசியதாகக் கூறும் கருத்தை ஓ.பன்னீர்செல்வம் நிரூபித்தால் நான் ராஜினாமா செய்யத் தயார். நிரூபிக்க முடியாவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யத் தயாரா?”
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago