புதுச்சேரி அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல்: 1,100 பேர் மீது வழக்குப் பதிவு; கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி

புதுச்சேரி அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 1,100 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் கிராம மீனவர்களுக்கு இடையே கடலில் மீன்பிடி வலை விரிப்பது, சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன் கடலில் மீன்பிடிக்கும்போது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் கடந்த 1-ம் தேதி நல்லவாடு மீனவரின் வலை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால், இரு கிராம மீனவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே, புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் மோதல் தடுக்கப்பட்டது.

ஆனாலும், பதட்டமான சூழல் நிலவியதால், கடந்த 4-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில், இரு கிராம மீனவர்களுக்கு இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமுக முடிவு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நல்லவாடு மீனவர்களை, வீராம்பட்டினம் மீனவர்கள் தாக்கினர். கரைக்குத் திரும்பிய நல்லவாடு மீனவர்கள் இதுகுறித்து மற்ற மீனவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலமாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கத்தி, சுளுக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், வீராம்பட்டினம் நோக்கி கடற்கரை வழியாக நடந்தும், படகிலும் சென்றனர்.

இதேபோல், வீராம்பட்டினம் மீனவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் நல்லவாடு நோக்கி சென்றனர். இருதரப்பினரும் புதுக்குப்பம் சுண்ணாம்பாறு முகத்துவாரம் அருகே மோதலில் ஈடுபட்டனர். இதில் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், மஞ்சினி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்த சுரேந்தர், பிரபு ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், கும்பலைக் கலைக்க நான்கு முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் வீராம்பட்டினம் சுகுமாறன், ரவிச்சந்திரன் ஆகியோர் கண்ணீர் புகை குண்டு பட்டு காயமடைந்தனர். அதிலும் இருதரப்பினரும் கலைந்து செல்லாததால், போலீஸ் அதிகாரிகள் தங்களது கை துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆர் துப்பாக்கியால் 35 ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டனர். இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.

காயமடைந்த நான்கு பேரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளித்தபின் மஞ்சினி, அய்யப்பன் இருவரும் மேல் சிகிச்சைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து வீராம்பட்டினம், நல்லவாடு மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மோதல் தொடர்பாக, நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவர்கள் 1,100 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலவரம் ஏற்படுத்தியது, பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது, கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் தவளக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய தவளக்குப்பம், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் புதுச்சேரி, தமிழக போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்