வீட்டில் கழிவறை கட்டுவதே ஒரு பெண்ணின் அடிப்படை சுதந்திரம்: 5000 கழிவறைகளை அமைக்க விழிப்புணர்வு; விருது வென்ற செல்வி பேட்டி

By பாரதி ஆனந்த்

அக்.11- தேசிய பெண் குழந்தைகள் தினம்

தேசிய பெண் குழந்தைகள் தினத்துக்கான வாழ்த்துகளும் உருக்கமான சினிமா பாடல்களும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் குவிந்த கொண்டிருந்தபோதுதான் ஒரு பெண் குழந்தைக்கான மிக முக்கியமான அடிப்படை சுதந்திரம் எது என்ற யோசனை நீண்டது.

பெண்ணுரிமை சார்ந்த பல கதைகள், திரைப்படங்கள் மனதில் ஓட, படம் முழுக்க சமூக அக்கறையைப் பேசினாலும் ஒரு பெண்ணின் ஆசையே வீட்டில் கழிவறை அமைப்பதுதான் என்பதை மையமாகக் கொண்ட 'ஜோக்கர்' படம் நினைவுக்கு வந்தது. கூடவே மதுரையைச் சேர்ந்த செல்வியும் நினைவுக்கு வந்தார்.

ஜோக்கருக்கும் செல்விக்கும் என்ன தொடர்பு என்றால்? கழிவறைதான் முக்கியத் தொடர்பு.

அண்மையில்தான் செல்விக்கு விருது கிடைத்திருக்கிறது. எதற்காகத் தெரியுமா? கழிவறையின் அவசியத்தை உணர்த்தி மன மாற்றத்தை ஏற்படுத்தி 7 கிராமங்களில் சுமார் 5000 வீடுகளில் கழிவறைகள் கட்டவைத்தமைக்காக ஸ்வச் பாரத் விருது கிடைத்திருக்கிறது.

'இந்து தமிழ்' இணையதளம் சார்பாக செல்வியைத் தொடர்புகொண்டோம். பல ஆண்டுகள் பார்த்துப் பழகியதுபோல் முதல் அழைப்பிலேயே இனிமையாகப் பேசினார்.

செல்வியின் அனுபவப் பகிர்வு அவரின் வார்த்தைகளிலேயே..

''என் பேரு செல்வி. பொறந்தது ஒத்தக்கடை. படிச்சத்து திருநகர் சார்லஸ் பள்ளியில். 11-வது படிக்கும்போதே வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. ஆனா எனக்கோ நிறைய படிக்க ஆசை இருந்துச்சு.

ஆனா திருமணம் அடுத்தடுத்து மூன்று பிரசவம்னு காலம் போயிடுச்சு. மகளிர் குழுவில் சேர்ந்தேன். அப்பத்தான் ஊர்க்காரங்களுக்கு சின்ன சின்ன உதவி செய்ய ஆரம்பிச்சேன். ரேஷன் கார்டு வாங்க உதவுவது, அரசாங்க விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதுன்னு சின்ன சின்ன வேலைதான். ஆனா ஊர்ப் பிரச்சினைக்கு பொது ஆளா துணிச்சலா நிப்பேன்.

அதனால சக்கிமங்கலத்துல எனக்கு மரியாதை. நாங்க குடியிருந்த வாடகை வீட்டில் கழிவறை செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டது. அதனால் கழிவறையைப் பயன்படுத்த முடியலை. வீட்டு ஓனர்கிட்ட சொன்னோம். ஆனால் அதை சுத்தம் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு காலையில வெளிய போவதற்காக ஒதுக்குப்புறத்துக்குப் போனேன். ஆனால் ஊர்தெருக்களத் தாண்டிதான் மந்தைக்குப் போக முடியும். நான் அடுத்த தெருவுல போகும்போது அங்கிருந்தவுங்க வணக்கம் செல்வி என்ன இங்கிட்டுன்னு கேட்டாங்க. நான் காரணத்த சொல்ல முடியாம வெட்கப்பட்டு அடக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அன்னிக்கு ஒரு பொண்ணுக்கு கழிவறை எவ்வளவு முக்கியம்னு தோணுச்சு. சில நாள் பொதுவெளியைப் பயன்படுத்துற வேதனையை அனுபவிச்சிட்டு வீடு மாறினோம்.

அந்த நேரத்துலதான், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துல கிராமங்களில் கழிவறைகள் கட்டுவது பத்தி பிரச்சாரம் செஞ்சாங்க. கலெக்டர் அலுவலகத்தில ஒரு கூட்டம் நடந்துச்சு. ஊர்ல நல்லா பொதுவேலை செய்றவங்கள் கூட்டியாரச் சொன்னதால எங்க பஞ்சாயத்து தலைவர் என்னையும் இன்னும் கொஞ்ச பேரையும் கூட்டிட்டுப் போனாங்க. அப்ப மதுர கூடுதல் கலெக்டரா ரோகிணி இருந்தாங்க.
அவுங்கதான் கழிவறையின் அவசியத்தைப் பத்தி பேசுனாங்க. ரொம்ப வெளிப்படையா நிறைய நேரம் ஒரு பெண் அதிகாரி கழிவறை பத்தி பேசுனது எனக்கு ஊக்கமா இருந்துச்சு. ஏற்கெனவே கழிவறையால் நான் பட்ட கஷ்டம் கூடுதலா ஊக்கம் தந்துச்சு. ஊருக்குப் போனவுடனேயே பிரச்சாரத்தை ஆரம்பிச்சிட்டேன்.

முதல்ல எங்க சக்கிமங்கலத்துலதான் பேச்சு. ஆரம்பத்துல யாரும் பெருசா ஒத்துழைக்கல. அந்தா இந்தான்னு 55 வீட்டுக்காரங்க சம்மதிச்சாங்க. கழிவறை கட்டி ஒரே வாரத்துல அவுங்க அவுங்க கணக்குக்கு மானியம் வந்துச்சு. கலெக்டரே நேரா வந்து கொடுத்தாரு. அப்புறம் எல்லாருக்கும் நம்பிக்கை வந்துச்சு. அப்புறம் எல்லோருமே கழிவறை கட்டினாங்க. இப்ப எங்க ஊர்ல இருந்த திறந்தவெளிக் கழிப்பிடம் ஆயிரம் மரம் இருக்கும் எடமா இருக்கு. திருவிழா மாதிரி கழிவறை அமைப்பதை எங்க ஊர்க்காரங்க சிரத்தையோட செஞ்சாங்க''... என்று சொல்லும்போதே செல்வியின் குரலில் விருதைவிட சமூக மாற்றம் செய்ததே சாதனை என அவர் நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

தொடர்ந்து விருதைப் பற்றி பேசிய அவர், "நான் வறுமை ஒழிப்பு செயலரா இருந்தேன். அப்புறம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். கொஞ்ச நாள்லேயே திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி, மதுரை கிழக்கு 6 ஒன்றியங்களில் கிட்டத்தட்ட 7 கிராமங்களில் சுமார் 5000 கழிவறைகள் கட்டவச்சேன். அந்த சேவைக்காகத்தான் மத்திய அரசு எனக்கு ஸ்வச் பாரத் விருது கொடுத்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எனக்கு விருதைக் கொடுத்தார். என்னோட சேர்த்து நாடு முழுக்க இருந்து நிறைய சமூக சேவகர்கள் இந்த விருதை வாங்கினாங்க.

அப்ப ஒரு நிமிஷம் நம்ம போலத்தான் இவுங்க எல்லோரும் கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சேன். சமூக சேவையும் அவ்வளவு ஈஸியில்ல. மக்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வருவதுதான் இதில் சவால். நான் போற கிராமங்களில் சில நேரம் மக்கள் சொல்ல வருவத கேட்க தயாராவே இருக்க மாட்டாங்க.

அப்படி அவுங்க பிடிவாதம் காட்டுறப்ப நான் பதிலுக்கு அன்பத்தான் காட்டுவேன். ரெண்டு நாள் ஆனாலும் அந்த கிராமத்திலேயே தங்கிடுவேன். உங்கள் நலனுக்காகத்தான் வந்திருக்கேன்னு பேசிப்பேசி அவுங்க நம்பிக்கையைப் பெறுவேன். அம்மா, அக்கா, அப்பா, அண்ணா, தம்பின்னு உறவுமுறை வச்சுதான் பேசுவேன்.

மக்களுக்கான நல்லதை அவர்கள் வழியில் சென்றுதான் செய்யணும். கழிவறைகள் அமைக்குற விழிப்புணர்வுடன் சேர்த்தே முழு சுகாதாரத்துக்காக குப்பை மேலாண்மை பத்தியும் பேசுவேன். மரக்கன்று நடுறது, மழை நீர் சேகரிப்பது பற்றியும் பேசுவேன்.

என் சேவைக்கு என் கணவரும், குழந்தைகளும், உறவினர்களும்தான் மிகப்பெரிய ஆதரவு. நான் செய்ற சேவையால காசு கிடைக்காது என்று தெரிந்தாலும் திட்டமாட்டாங்க. வீட்டில் தையல் தொழில் செய்றேன். என் கணவர் தள்ளுவண்டியில் சாப்பாட்டுக் கடை நடத்துறார். இப்போதுதான் தமிழக அரசு என்னை வட்டார ஒருங்கிணைப்பாளராக தற்காலிகப் பணி நியமனம் செய்திருக்கு. குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இந்த விருதை வாங்கியிருக்க முடியாது. அதே வேளையில் எங்கள் உயரதிகாரிகள் குறிப்பா ஊரக வளர்ச்சித்துறை செயலர் லக்‌ஷ்மிபதி சார் பேருதவியாக இருக்கார். அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய சாதனை நடந்திருக்காது. இன்னிக்கு நான் நிறைய பணம் சம்பாதிக்காட்டாலும் மக்களோட மனச சம்பாதிச்சிருக்கேன்" என்று பெருமிதம் கொண்டார் செல்வி.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் நீங்கள் கூற விரும்பும் கருத்து..

எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு போராட்ட குணம் வேண்டும். சமூக அக்கறை வேண்டும். கழிவறை இல்லாத சங்கடத்தை உணர்ந்தே மாற்றத்தை நோக்கி நான் பயணித்தேன். என்னைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் அடிப்படை சுதந்திரம் சுகாதாரமான பாதுகாப்பான கழிவறையே.

அதேபோல் பிரச்சினைகளால் பெண் பிள்ளைகள் சோர்வடைந்துவிடக் கூடாது. துணிச்சல் அவசியம். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவள் நான். 17 வயதில் திருமணம் அடுத்தடுத்து குழந்தைகள். ஒருவேளை நான் படித்திருந்தால் இன்னும் பெரிய இலக்குகளை அடைந்திருக்கலாம். அதனால் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கவும்.

இவ்வாறு மிடுக்காகப் பேசினார் செல்வி.

பெண் கல்வி, ஆணுக்கும் பெண்ணுக்கு சமவேலையில் சம ஊதியம், பெண்ணின் பாலியல் சுதந்திரம் இதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் ஒரு பெண்ணுக்கு கழிவறை எவ்வளவு முக்கியம் என்பதற்கு செல்வி வாழ்க்கையும் ஒரு சாட்சிதான்.

தொடர்புக்கு- bharathi.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்