வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் வட- தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல்:

வளிமண்டல மேலடுக்கில் ஏற்படும் சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 6செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் சிவகங்கை இளையான்குடி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோவை சூளூர் உள்ளிட்ட பகுதிகளில் 5செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தேனி உத்தமபாளையம் 4 செ.மீ மழையும்,கோவை பெரியநாயக்கன்பாளையம் சின்னக்கல்லார் மற்றும் போடிநாயக்கனூர் பகுதிகளில் 3செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்” இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE