தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு தாக்கம் குறித்து கண்காணித்து வருகின்றது. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த லோகித் என்ற 8 மாதக் குழந்தையும், முகப்பேரைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற 6 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.
சரியான நேரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லையென்றால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
டெங்கு எதனால் ஏற்படுகிறது, அதனைத் தடுப்பது எப்படி, அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி கூறியவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.
டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகின்றது?
டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒருவகை காய்ச்சல் ஆகும்.
டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?
டயர், பயன்படுத்தப்படாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரஸுடன் உருவாகிறது. இந்தக் கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சல் உள்ளவரைக் கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் எப்படி பரவாது?
தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல், மற்றும் தொடுதல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது.
ஏடிஸ் கொசு குறித்த தகவல்கள்:
ஏடிஸ் கொசு மூன்று வாரங்கள் உயிர் வாழும். இந்த மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இவ்வாறு குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகின்றன. ஏடிஸ் கொசு பட்டப்பகலில் மனிதர்களைக் கடிக்கும் தன்மையுடையது.
ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள்:
சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர்த்தொட்டி, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயர்கள், திறந்த கிணறு
டெங்கு காய்ச்சலைத் தடுக்க:
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இது முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாட்களில் கொசுவாக உற்பத்தியாகிறது. ஏடிஸ் கொசு உருவாகும் இடங்களை அழித்து வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியும்.
ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிட வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலையில் தூங்க வைக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி, வயிற்று வலி ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும். ரத்தத்தட்டு அணுக்கள் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியக் காரணியாகும். டெங்கு வைரஸ் ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும் தன்மையுடையது. ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி கவனித்துக்கொள்வது?
உரிய சிகிச்சையும் முறையான கவனிப்பும் கொடுத்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம். காய்ச்சலுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர், மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர் காக்கும் ஓஆர்எஸ் போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும்.
காய்ச்சல் குறையவில்லையென்றால் பருத்தியால் நெய்யப்பட்ட சிறிய துண்டை சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் நனைத்து பிழிந்து ஈரத்துண்டின் மூலம் நெற்றி, கழுத்து, அக்குள், நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் துடைத்துவிட்டால் காய்ச்சல் குறையும். இதற்கு ஐஸ்கட்டியோ மிகவும் குளிர்ந்த நீரையோ பயன்படுத்தக் கூடாது.
மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க மருத்துவ ஆலோசனை வழங்கினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சல் நின்ற பிறகு மூன்று நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லையென்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு மருத்துவர் குழந்தைசாமி தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செய்ய வேண்டியது என்ன?
மருத்துவமனைகளில் சுத்தமான குடிநீரைப் பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும். தண்ணீர் ஏற்றும் டேங்குகள், பைப்புகள் உள்ளிட்டவற்றையும், கழிவறை உள்ளிட்டவற்றையும் சுத்தமான முறையில் வைத்திருத்தல் அவசியம். மருத்துவமனையில் எங்கும் தண்ணீர் தேங்காதவாறு கண்காணிக்க வேண்டும். குப்பைகள், உணவுக் கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, மருத்துவமனையின் சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் எப்போதும் இருப்பில் இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவை எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குழந்தைகளை டெங்கு காய்ச்சலில் இருந்து காப்பது எப்படி?
குழந்தைகளே டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு மிக விரைவில் ஆட்படுவர் என்பதால், அவர்களை எப்படி அதிலிருந்து தற்காக்கலாம் என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ஜனனி சங்கர் கூறியதாவது:
"குழந்தைகளுக்கு வீடு, பள்ளி இரண்டு இடங்களிலும் கொசு கடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், வீட்டை எப்போதும் கொசு உற்பத்தியாகாதவாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதையும் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது கூட கொசு தடுப்புக் க்ரீமை தடவி அனுப்பலாம். வீட்டில் குழந்தைகள் பகலில் உறங்கினாலும் கொசு வலையில் படுக்க வைக்கலாம்.
ஒரு வயதுக்குக் குறைவான பச்சிளம் குழந்தைகள், 12-13 வயதுள்ள குழந்தைகளுக்குத் தான் இவை தாக்குவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றவுடன் பயப்படத் தேவையில்லை. மூன்று நாட்களுக்கு காய்ச்சல் என்றால் வீட்டிலேயே கவனித்துக்கொள்ளலாம். ஆனால், மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுதான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது மாத்திரைகளை தொடர்ந்து கொடுப்பர். அது தவறு. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தாலோ, சோர்வாக இருந்தாலோ மருத்துவர் ஆலோசனையை நிச்சயம் பெற வேண்டும்.
டெங்கு இருந்தால் அதற்கு முக்கியமான சிகிச்சையே நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். நீர்ச்சத்து இல்லாத சாதாரண உணவுப் பொருட்களை பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. டைஃபாய்டு, மலேரியா போன்று டெங்குவுக்கு மருந்து கிடையாது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இதற்குத் தடுப்பு மருந்தும் கிடையாது. ரத்தத் தட்டணுக்கள் குறைவது குறித்தும் கவலைப்பட வேண்டாம். அது தானாகவே சரியாகிவிடும்.
ஆரம்பத்திலேயே கவனிக்காமல், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வரும்போது தான் மரணநிலை ஏற்படுகின்றது. ரத்த அழுத்தம் அதிகமாகி, ரத்தக்கசிவு ஏற்பட்டு அதன்பிறகு வரும் குழந்தைகளைக் காப்பாற்றுவது சிரமம். ஆபத்தான நிலையில், குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுவதும் உண்டு. அவர்கள் கோமா நிலைக்குச் செல்லும் நிலைமையும் ஏற்படலாம். ஆனால், இவை அரிதுதான். டெங்கு என்றால் பீதியடையாமல், விழிப்புணர்வுடன் முன்பே சிகிச்சை எடுத்துக்கொண்டால், காய்ச்சல் தொடங்கிய நாளிலிருந்து 6 நாட்களில் டெங்கு சாரியாகிவிடும்," என்றார்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago