மின் இணைப்புக் கட்டண உயர்வு: மனிதாபிமானமற்ற செயல்; இரா.முத்தரசன்

By செய்திப்பிரிவு

சென்னை

மின் இணைப்புக் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செப்.26) வெளியிட்ட அறிக்கையில், "மின் இணைப்புக் கட்டணம், பிணை வைப்புத் தொகை, மின் அளவீட்டு கருவியின் வாடகை, மறு இணைப்புக் கட்டணம் மற்றும் மேம்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

கட்டண உயர்வு ரூ.1600 முதல் ரூ.6000 வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய கட்டண விலை உயர்வு பொதுமக்களை மிகப்பெருமளவு பாதிக்கும்.

பொருளாதார மந்த நிலை, தொழில்கள் மூடல், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு, அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் பொதுமக்களுக்கு, மேலும் சுமையை அதிகரிக்கும் வண்ணம் மின் கட்டணங்களை உயர்த்துவது மனிதாபிமானமற்ற செயலாகும்.

ஆகவே, மின் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திட உத்தேசித்துள்ளதை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE