‘பிகில்’ இசை விழாவில் பேசியதை அமைச்சர்கள் விமர்சிப்பதா? எதைக் கண்டாலும் அஞ்சும் அதிமுக; விஜய்க்கு கே.எஸ்.அழகிரி ஆதரவு

By செய்திப்பிரிவு

சென்னை

'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் யாரையும் குறிப்பிட்டுப் பேசாதபோது கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல எதைக் கண்டாலும் அஞ்சுகிற நிலையில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

'பிகில்' பட விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பேசியதை தமிழக அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர், விழாவுக்கு அனுமதி அளித்தது குறித்து உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

"தமிழ் திரைப்பட உலகத்தினரால் இளைய தளபதி என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற நடிகர் விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காக சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அதில் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடைபெற்றிருக்கிறது.

இந்நிலையில் இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துகள் ஆளும் அதிமுகவுக்கு எதிராக கூறியதாக தவறாகப் புரிந்துகொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஏறி விடப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் ‘பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு இரையாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல, கலைத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். எனவே இதைவிட ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த காலங்களில் சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் மாணவர் சங்கத்தின் அழைப்பின்பேரில் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என இன்னும் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்கள். இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் நடைபெறும் விழாக்களில் அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை எதிர்த்து யாரும் குற்றம், குறை கூறியதில்லை. இதை நடத்திய கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த அரசும் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியது கிடையாது. ஜனநாயகத்தில் இத்தகைய நடைமுறைகள் அனுமதிக்கப்பபட்டு வருகின்றன. ‘பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் . எந்த அரசியல் கட்சியும் ஆதரித்தவர் அல்ல .

மாறாக தமிழகத்தில் இருக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு, போற்றப்படுகிற அற்புதமான இளம் கலைஞர். இசை வெளியீட்டு விழாவில் அவரது உரையில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை. பொதுவாக அவர் பேசியதை, ஆளும் அதிமுகவுக்கு எதிராகப் பேசியதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கற்பனையாகப் புரிந்துகொண்டு நடிகர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல எதைக் கண்டாலும் அஞ்சுகிற நிலையில் அதிமுகவினர் இருக்கிறார்கள். கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பாக சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாணவிகளிடையே உரையாற்ற அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக இதே தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அன்று இச்செயலை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன.

அதேபோல இன்றைக்கு நடிகர் விஜய் பங்கேற்ற இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதித்ததற்காக சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறை வழங்கிய நோட்டீஸை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி திரும்பப் பெறவில்லை எனில் கடும் விளைவுகளை தமிழக ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்