நாங்குநேரி இடைத்தேர்தல்: வேட்பாளரை டெல்லி தலைமைதான் அறிவிக்க வேண்டும்; திருநாவுக்கரசர்

சென்னை

நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளரை டெல்லி தலைமைதான் அறிவிக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செப்.24) திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"தமிழ்நாடு மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சாதாரண வேலைகளுக்கு உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலத்தவர்களை நிரப்பினால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பவர்களுக்கு எங்கே வேலை கொடுப்பது? நிச்சயமாக இதற்கு வரைமுறை வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகள் தவிர்த்து, மற்றவர்களுக்குத் தமிழகத்திலுள்ள வேலைகள், தமிழகத்தில் உள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.

இதனை, மொழிவாரியாக, மாநில வாரியாகப் பேசுகிறோம் என நினைக்கக் கூடாது. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். இங்குள்ள வேலைகளை வெளிமாநிலத்தவர்களைக் கொண்டு நிரப்புவது கண்டனத்திற்குரியது.

ரயில்வே உள்ளிட்ட எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் இருக்கும் உயரதிகாரிகள் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையை முதல்வர், பிரதமர் அளவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசுடன் பேசி, இதுபோன்று மேலும் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

அப்போது நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என்ற கேள்விக்குப் பதிலளித்த திருநாவுக்கரசர், "அத்தொகுதிக்கு விருப்ப மனு பெற்று வருகிறோம். அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழுவில் ஆய்வு செய்து மூன்று பேர் அடங்கிய பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்ப வேண்டும். எம்எல்ஏ, எம்.பி. வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் அறிவிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களை தமிழக காங்கிரஸே அறிவிக்கலாம். விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்," எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE