மதுக்கொள்கை வகுக்கும் பொறுப்பில் இருந்து தலைமை வழக்கறிஞரை நீக்க வேண்டும்: ராமதாஸ்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்து கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்பிலிருந்து தலைமை வழக்கறிஞர் ரோகத்கியை உடனடியாக நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கேரளத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் மதுக்கடை உரிமையாளர்கள் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி நேர்நின்று வாதிட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய தலைமை வழக்கறிஞராக இருக்கும் ஒருவர் மதுக் கடைகளின் உரிமையாளர்களுக்காக வாதிட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய அரசிலோ, மாநில அரசிலோ தலைமை வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் தனிநபர்களுக்காக வாதிடுவதற்கு சட்டப்படி தடையில்லை. ஆனால், அவ்வாறு வாதிடுவது தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அரசு வழக்கறிஞர்கள் தனிநபர்களுக்காக நேர்நிற்பதில்லை என்ற மரபு கடந்த 50 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற லாட்டரி ஊழல் வழக்கின் விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில், அப்போதைய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நேர் நின்றார். அதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இதில் தலையிட்டு, அந்த வழக்கில் ராமன் நேர்நிற்க மாட்டார் என அறிவித்ததையடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருக்கும் முகுல் ரோகத்கிக்கு இவையெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டிய இடத்தில் உள்ள முகுல் ரோகத்கி எப்படி பொதுநலனுக்கு எதிராக நேர்நின்று வாதிட்டார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒருவேளை பொதுநலனைக் காப்பதற்கான வழக்கில் அவர் நேர்நின்றிருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தைக் கெடுக்கும் மதுக்கடைகளுக்காக ரோகத்கி நேர் நின்றதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதுவும், மதுக்கடைகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்பை அவரிடம் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில் இப்படி ஒரு செயலை செய்திருப்பது அவர் மீதான நம்பகத்தன்மையை குறைத்திருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கெகர் தலைமையிலான அமர்வு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளையும் மூடும்படி கருத்து தெரிவித்ததுடன், இதுகுறித்து மத்திய, மாநில அரசு பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, புதிய கொள்கையை வகுத்து தரும்படி கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரோகத்கிக்கு ஆணையிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்றுவது குறித்த கொள்கையை உச்ச நீதிமன்றத்தில் ரோகத்கி தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 6 மாதங்களான பிறகும் புதிய கொள்கையை ரோகத்கி தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், இந்த வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதேநேரத்தில் மது ஆலைகளின் அதிபர்கள் பலரும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். இது முரண்பாடுகளின் உச்சமாகும். மேலும், அக்கூட்டத்திற்குப் பிறகு இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதெல்லாம் ஏதேனும் காரணத்தைக் கூறி நேர் நிற்பதைத் தவிர்த்து வருகிறார். இதனால், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்த வழக்கு விசாரணையில் மதுக்கடைகளுக்கு ஆதரவாகவே அவர் வாதிட்டு வருகிறார். நெடுஞ்சாலை ஓரங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

ஆனால், மதுக்கடைகள் அமைந்துள்ள சந்தைப் பகுதிகள் வழியாக நெடுஞ்சாலைகள் செல்வதாகவும், அதனால் மதுக்கடைகளை மூடுவது சாத்தியமில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார். இவர் எப்படிப்பட்டவர் என்பது இதிலிருந்தே தெளிவாகி விட்டது. இத்தகைய சூழலில், கேரளத்தின் மதுக்குடிப்பகங்களுக்கு ஆதரவாக ரோகத்கி வாதிட்டிருப்பது அவர் மீதான ஐயங்களையும், அச்சங்களையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதன்பிறகும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்து கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்பில் அவரை வைத்திருப்பது பாலுக்கு பூனையை காவல் வைப்பது போன்றதாகும். எனவே, அவரை இப்பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

மத்திய அரசின் பிரதிநிதியாகத் தான் அவரை இப்பொறுப்பில் உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதனால், இம்மாத இறுதியில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்போது ரோகத்கிக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கும்படி மத்திய அரசு கோர வேண்டும். அத்துடன் இந்த விஷயத்தில் உடனடியாக முடிவெடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்