ஆசிரியர் இல்லாதபோது குழந்தைகள் எப்படி இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே ஆசிரியரின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது - மரியா மாண்டிசோரி
அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோரும் கிராமமும் சேர்ந்து வழங்கும் கல்விச் சீர், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சத்தான காலை உணவு, கணினி அதிகம் அறிமுகமாகாத காலகட்டத்திலேயே ஸ்மார்ட் வகுப்பறைகள் என தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் நிகழ்ந்துள்ள ஆச்சர்ய மாற்றங்கள் அனைத்துக்கும் முன்னோடியாக இருப்பவர் அன்பாசிரியர் கருப்பையன்.
அரசுத் திட்டங்களையும் நிதியையும் முழுமையாக வாங்கி அதை முறையாகப் பயன்படுத்தினாலே நமது அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்கிறார் அன்பாசிரியர் கருப்பையன்.
ஓர் ஆசிரியராக தனது நீள் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், ''நன்றாகப் படித்த ஒரே காரணத்தால் வறுமையில் உழன்ற எனக்கு, ஆசிரியர்கள் சிதம்பரம், சண்முகம் ஆகியோர் உதவினர். சிறப்பாகப் படித்து முடித்து ஆசிரியப் பணிக்கும் தேர்வானேன். விவசாயக் கூலியான அப்பா, அம்மா இருவரும் நான் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதன்படி இடைநிற்றல், குழந்தைத் திருமணம் அதிகமாக இருந்த, குறைவான சாலை, குடிநீர் வசதிகள், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் அதிகம் இருந்த புதுக்கோட்டை, நெடுவாசல் வடக்குப் பள்ளியில் பணியாற்ற ஆசைப்பட்டேன்.
ஆனால் 1988-ல் புதுக்கோட்டை மாவட்டம் எல்லன்புரம் தொடக்கப்பள்ளியில் வேலை கிடைத்து, 1-ம் வகுப்பு ஆசிரியர் ஆனேன். வாசித்துக் கற்பிப்பதைவிட காண்பித்துக் கற்பிப்பதே சிறந்தது என்பதைக் கடைபிடித்தேன். ஒருமுறை 5-ம் வகுப்புக்கு பாடம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்துக்கே பாடமெடுக்க வாய்ப்பு கிடைத்தது போல மகிழ்ந்தேன். இதயத்தின் பணிகள் குறித்து வகுப்பெடுக்க வேண்டும். அருகில் இருந்த குளத்தில் இருந்து தவளையைப் பிடித்துவரச் சொன்னேன். மாணவர்களும் தவளையுடன் வர, அதை அறுத்து, இதயத்தின் பாகங்களை விளக்கினேன். மாணவர்களும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர். கோபத்துடன் அங்கே வந்த தம்பதியர், அப்படியே நின்றனர்.
பாடத்தை முடித்துவிட்டு, என்ன என்று கேட்டபோது, 'நாங்க கூலி வேலை செய்யறவங்க சார். 1,500 செங்கல்லை குளத்துக் கரையில அறுத்துக் காய வச்சுருந்தோம். பசங்க அதைக் கலைச்சிட்டாங்க. கோபமா வந்தோம். படிக்கத்தான் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சதும் மனசு சமாதானம் ஆயிட்டுது. பசங்க படிப்புக்காக எதையும் இழக்கத் தயாரா இருக்கோம்!' என்றனர் அந்தக் கணவனும் மனைவியும். உழைத்துப் பிழைக்கும் இருவருக்கும் கல்வியின் முக்கியத்துவம் குறித்துத் தெரிந்திருந்தது கண்டு கலங்கி நின்றேன். தவளையைப் பிடித்துவந்த சிறுவர்களில் ஒருவரான டிட்டோ இன்று ஆசிரியராகி விட்டார்.
உட்காராத ஒட்டுத்திண்ணைகளே கிடையாது
ஓர் ஆசிரியர், சமூகம் என்ன விரும்புகிறது என்று யோசிக்கவேண்டும். இதற்காகவே தினந்தோறும் பள்ளி முடிந்ததும் சாலை வழியாகச் செல்லாமல், கிராமத்தின் வழியாகச் செல்வேன். அங்கே நான் உட்காராத ஒட்டுத்திண்ணைகளே கிடையாது. படிக்கும் காலங்களில் நான் பட்ட சிரமங்களை என் மாணவர்கள் படக்கூடாது என்று ஆசைப்பட்டதால், குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோராக நானும் சக ஆசிரியர்களும் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம். சோப், பேஸ்ட், சீப்பு, எண்ணெய் என அந்தப் பட்டியல் நீளும்.
2004-ல் வல்லத்திரா கோட்டைக்குத் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. பணியில் சேராமல், மாவட்டக் கல்வி அலுவலரைச் சந்தித்தேன். 'நெடுவாசல் பள்ளிக்கு மாறுதல் வேண்டும், முன்மாதிரிப் பள்ளியாக மாற்றிக் காட்டுவேன்' என்று சொன்னேன். அதற்கு, 'நீங்கள் என்ன மந்திரவாதியா?' என்று சிரித்துக்கொண்டே ஆணையை ரத்துசெய்தார்.
நெடுவாசல் சென்றேன். கிராம மக்கள் அனைவரும் தினக்கூலிகளாக இருந்தனர். 32% பேர் குழந்தைத் தொழிலாளிகள், 16% பேருக்கு குழந்தைத் திருமணம் நடந்திருந்தது. 6% பேர் மாற்றுத் திறனாளிகளாக இருந்தனர். சமூகப் பங்களிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் குறித்து கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி கிடைக்க வகை செய்தோம்.
என்னுடைய பெண் குழந்தைகள் மூவரும் என் பள்ளியிலேயே படித்தனர். 3 பேரையும் என் வண்டியில் ஊரைச் சுற்றி அழைத்துவருவேன். என் குழந்தைகளைப் பார்த்து, ஊரில் இருப்பவர்களும் தங்களின் குழந்தைகளைக் கொண்டு வந்து சேர்த்தனர்.
இலவச விளம்பரத் தூதர்கள்
தொகுதி எம்எல்ஏ, எம்.பி. நிதி மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (CSIDS), ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிசார் நிதிகள் ஆகியவற்றின் மூலம் பள்ளிக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றிக்கொண்டோம். போர்வெல், குடிநீர்த் தொட்டி, டைல்ஸ், வண்ணம் பூசுவது, சுற்றுச்சுவர் என அனைத்தும் இவற்றின் மூலமே பூர்த்தி செய்யப்பட்டன. 3 ஆண்டுகளில் ரூ.6.5 கோடி நிதியுதவி பெற்றோம். பள்ளியில் மேற்கொள்ளும் புதிய வசதிகளையும் கற்பித்தல் முறைகளையும் பெற்றோர்களையும் இளைஞர்களையும் வந்து பார்க்கச் சொல்வேன். அவர்களே பள்ளியின் இலவச விளம்பரத் தூதர்களாக மாறிவிடுவர்.
2004-லேயே கிராம சபைக் கூட்டங்களில் ஆசிரியர்கள் கலந்து கொள்வோம். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கண்காணித்துப் பின்தொடர்ந்தோம். தேவைப்படும் பட்சத்தில் மனுக்களைத் தொடர்ந்து கொடுப்போம். எங்கள் பள்ளி விழாக்களில் ஆண்டறிக்கைகள் வாசிக்கப்படும். ஒவ்வொரு விழாவுக்கும் ஆட்சியர், எஸ்பி, நீதிபதி, வட்டாட்சி அலுவலர் என அனைவரையும் தனித்தனியாக அழைப்போம். புள்ளிவிவரங்களுடன் எங்களின் சாதனைகளையும் தேவைகளையும் விளக்கும்போது அந்த இடத்திலேயே அரசுத் தரப்பிலிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது.
படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் ஆசிரியர் பணியிடமும் தானாக அதிகரித்தது. புதிதாகக் கட்டிடமும் கழிப்பறையும் கட்டினோம். குழந்தைகளுக்கான மைதானத்தை விரிவாக்க முடிவு செய்தோம். 3 ஏக்கர் நிலம் வாங்க முடிவுசெய்தோம். நிலம் பெற கிராம மக்கள் வந்து மனு அளிக்க வேண்டும். அனைவரும் தினக்கூலிகள் என்பதால், பிரயாணச் செலவையும் ஊதியத்தையும் நானே தருகிறேன் என்றுகூறி கிராம மக்கள் அனைவரையும் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றேன். மனுநீதி முகாமில் ஆட்சியர் சுகந்தியைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தோம். சில வாரங்களுக்குப் பிறகு, நிலம் எங்களுக்குச் சொந்தமானது.
2005-ல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'திரும்பும் திசையெங்கும் கணினி' என்ற பாடம் இருந்தது. நிஜமாகவே அவர்களுக்குக் கணினியைக் காண்பிக்க 11 மாணவர்களையும் 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குடிக்கு அழைத்துச் சென்றேன். ஊரே வியந்து வேடிக்கை பார்த்தது. மாணவர்கள் அத்தனை ஆர்வமாக கணினியைப் பார்த்தனர். நானும் அன்றுதான் கணினியைத் தொட்டேன்.
2005-ல் எங்கள் பள்ளியில் சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வேண்டும் என்று தஞ்சை மாவட்ட பிஎஸ்என்எல் மூத்த பொறியாளரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன். ஆர்வம் அதிகமில்லாமல் வந்தவர், பள்ளியின் வசதிகளைப் பார்த்து அசந்துபோனார். என்ன வேண்டும் சொல்லுங்கள்? என்று கேட்டார். அவரிடமிருந்து வில்போன் வசதியையும் இணைய வசதியையும் பெற்றுக்கொண்டோம்.
10 நாட்களில் ரூ.3 லட்சம்
2006-ல் திறந்தவெளி மலம் கழித்தலை முழுமையாக ஒழிக்க 10 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தோம். வெறும் பத்தே நாட்கள் தலையில் டார்ச் கட்டி, பாத்திரத்தை தட்டி, ஒலி எழுப்பினர். திறந்தவெளி மலம் கழித்தல் முழுமையாக நின்றுபோனது. முழு ஊரக சுகாதார இயக்கம் சார்பில் 10 நாள் உழைப்புக்கு ரூ.3 லட்சம் கிடைத்தது. அதைக்கொண்டு பள்ளிக்கு குடிநீர் இணைப்பு, சிறிய பாலம், கழிப்பறை ஆகியவற்றையும் கிராமத்துக்கு தண்ணீர்த் தொட்டியையும் கட்டிக்கொண்டோம். அத்துடன் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் சுகாதாரப் பழக்கங்களுக்கான கழிப்பறையில் சிறந்த கழிப்பறையாக 2018-ம் எங்கள் பள்ளிக் கழிப்பறை தேர்வானது.
2006-ல் தமிழ்நாடு அறக்கட்டளையைச் சேர்ந்த சந்திரசேகரன் 4 கணினிகளை வழங்கினார். 'நமக்கு நாமே' திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு பணத்தைச் செலுத்தினால் மீதி இரண்டு பங்கை அரசே அளித்துவிடும். அந்தவகையில் சந்திரசேகரன் மூலம் ரூ.2.15 லட்சம் தொகையைப் பெற்று, அரசிடம் இருந்து ரூ.6.75 லட்சம் பெற்றோம். அதைக் கொண்டு, இணையம், தொலைபேசி, ஆடியோ வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கிக் கொண்டோம். அத்தோடு அவர், கிராமத்தில் இருந்த 600 குடும்பங்களுக்கும் புகை வராத ஸ்டவ்களை வழங்கினார்.
2007-ல் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினோம். 3 மாணவர்களைத் தவிர மற்ற அனைவரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவருக்கும் 6, 7 என்ற வீதத்திலேயே ஹீமோகுளோபின் இருப்பதாகவும் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தார். போதுமான ஊட்டச்சத்துடன் இருந்த அந்த 3 பேரும் என் குழந்தைகள்! அந்தப் பொழுதில் மற்ற குழந்தைகளின் நிலையை நினைக்கையில் அத்தனை வலி தருவதாக இருந்தது. மாணவர்களுக்கு சத்துமிக்க காலை உணவு அளிக்க முடிவெடுத்தோம்.
800 மி.லி. சத்துமாவுக் கஞ்சி
24 வகை தானியங்களை அரைத்து, பால் கலந்து, பனைவெல்லம் சேர்த்து சத்துமாவுக் கஞ்சி தயாரிக்கப்பட்டது. தினந்தோறும் 800 மி.லி. கஞ்சி, காலை உணவாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், 207 நாட்கள் கழித்துப் பரிசோதித்தபோது, சராசரியாக 16 என்ற அளவில் மாணவர்களுக்கு ஹீமோகுளோபின் இருந்தது. ஷ்யாம் அனந்தராமன் உள்ளிட்ட வெளிநாட்டில் வசிக்கும் பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் இருந்து நிதியுதவி பெற்று, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். பல்வேறு நண்பர்களின் உதவியுடன் வகுப்பறைக்குள்ளேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணினி ஆகியவை அமைக்கப்பட்டன.
சிஎஸ்ஆர் (சமூக பொறுப்புணர்வு) நிதியை 10 ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று, அதைப் பயன்படுத்தியது நமது பள்ளியாகத்தான் இருக்கும். BHEL நிறுவனத்தின் திருமயம் செயல் இயக்குநர் கோபிநாத்திடம் நேரில் சென்று மொழி ஆய்வகம் அமைக்க உதவி கேட்டேன். வியப்புடன் பார்த்தவர் சில நாட்களில் பள்ளிக்கு வந்தார். என்னுடைய பெயரை எழுதிக் காட்டுங்கள் என்று ஒரு மாணவியிடம் கேட்டார். திரு.கோபிநாத் என்று அந்த மாணவி எழுத, நாங்கள் கேட்ட ரூ.10 லட்சத்துடன் கூடுதலாக ரூ.7 லட்சத்தைக் கொடுத்தார். 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்தவர், அவர் பயன்படுத்தாமல் வைத்திருந்த லேப்டாப், ஆடியோ சிஸ்டம், டேபிள் ஆகியவற்றையும் பள்ளிக்குப் பரிசாக வழங்கினார்.
கல்விச்சீர் பிறந்த கதை
உடன் பணிபுரியும் ஆசிரியர், நாம் பள்ளியில் இருந்து மாறுதலாகிச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார். அதேபோல அரசுப் பள்ளிகளில் கிராம மக்கள் மற்றும் பெற்றோரின் கண்காணிப்பை ஏற்படுத்த, அவர்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று எண்ணினோம். அப்போதுதான் கல்விச் சீர் குறித்த யோசனை பிறந்தது. பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று, அதைப் பள்ளி மேம்பாட்டுக்கு உதவத் திட்டமிட்டோம். முதல் ஆளாக ஒருவர் 50 ரூபாய் கொடுத்தார். அதைக் கொண்டு 3 ஃபினாயில் பாட்டில்களை பள்ளிக்காக வாங்கினோம். அப்படியே 1.8 லட்ச ரூபாய் சேர்ந்தது. சீர்வரிசைகளை மாட்டு வண்டியில் வைத்து, மேள தாளம் முழங்க, அரசுத்துறை அதிகாரிகள் சூழ பள்ளிக்கு எடுத்து வந்தனர். இதனால் பள்ளி, சமூகத்தின் சொத்தாக மாறியது.
கொண்ட நோக்கம் நிறைவேறிவிட்டதாக உணர்ந்து, 2018 ஜூனில் பனங்குளம் நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகச் சென்றேன். அப்போது 42 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். எல்ஐசி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் கழிப்பறையைக் கட்டினோம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். சுய தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் பல்திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. கிராம மக்கள் 1 மணி நேரத்தில் 1.42 லட்சம் ரூபாயை அளித்தனர்.
பள்ளிகளின் முன்னாள் மாணவர்களிடம், தங்களின் பிறந்த நாள், மணநாள் கொண்டாட்டங்களை பள்ளிகளில் நடத்துமாறு கூறியிருக்கிறோம். அவர்களுக்கு மாணவர்கள் வாழ்த்து சொல்வார்கள். விருப்பப்பட்ட உபகரணங்களை அவர்கள் பள்ளிக்கு அளிக்கலாம். இதுவரை 6 பேர் கொண்டாடியதில் ரூ.48 ஆயிரம் சேர்ந்துள்ளது. இதைக்கொண்டு விளையாட்டுக் கருவிகளை வாங்கியுள்ளோம். சிறப்பாகச் செயலாற்றும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்குகிறோம். இதற்காகவே ராம்கோ சிமெண்ட் நிறுவனம் மூலம் 3 ஆயிரம் பேனாக்களை வாங்கி வைத்திருக்கிறோம்.
சக பள்ளிகளுக்கும் உதவி
கஜா புயலால் பள்ளி முழுமையாக பாதிக்கப்பட்டபோது முருகவேல், குமரேசன், தாமரைக் கண்ணன், ’தாரகை’ முகமது இக்பால், நிமல் ராகவன் ஆகிய நண்பர்கள், ரூ.4.25 லட்சம் மதிப்பிலான எழுதுபொருட்களை வழங்கினர். தெற்காசியாவின் சிறந்த பள்ளி என்று ஐ.நா. எங்கள் பள்ளிக்கு 10 நட்சத்திர விருது கொடுத்துள்ளது. இப்போது பள்ளியில் 120 பேர் படிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெயக்குமார் ரூ.3.5 லட்சத்தை அளித்தார். இத்தொகை எங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரமாக அளிக்கப்பட்டது. இதன்மூலம் அவை தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக மாறிவருகின்றன'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் கருப்பையன்.
எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்துவதில் முன்னோடி ஆசிரியராக, என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ''ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக்கென சமூகத் தணிக்கை அவசியம். அதன்மூலம் மக்கள் மற்றும் அதிகாரிகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற முடியும். பள்ளி வளர்ச்சிக்காக குறுகிய கால, நீண்டகால பள்ளி மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்து அதன் பாதையில் பயணித்தால் திட்டமிட்ட இலக்கை அடையலாம். இதில் சக ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்'' என்று முடிக்கிறார் அன்பாசிரியர் கருப்பையன்.
தொடர்புக்கு: ஆசிரியர் கருப்பையன் - 9597011890
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 44: மார்கரெட்- குழந்தையோடு குழந்தையாய் மாறி பாடம் கற்பிக்கும் தாயுமானவர்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago