இரவு ரோந்தின்போது சாலையில் தவித்த நிறைமாத கர்ப்பிணியை காக்க பிரசவம் பார்த்த பெண் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகிறது.
சென்னை சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா இவருக்கு 12-ம் தேதி இரவு முதல் 13 காலை வரை இரவு ரோந்துப்பணி. தனது ஜீப் ஓட்டுனர் பத்மாவுடன் இரவு ரோந்துப்பணியில் இருந்தார். 13-ம் தேதி விடியற்காலையில் சூளைமேடு, சௌராஷ்ட்ரா நகர் , 8-வது தெரு வழியாக வந்தபோது சாலையில் நிறைமாத கர்ப்பிணியான பானுமதி என்ற பெண் தவிப்புடனும் வலியுடனும் நிற்பதை பார்த்துள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடிக்க கணவர் சென்றிருக்க வலி தாங்க முடியாமல் வெளியில் வந்துள்ளார். அவரிடம் ஆய்வாளர் சித்ரா என்னம்மா இங்கே நிற்கிறீர்கள் எனக்கேட்க அவர் வலியால் துடித்தப்படி நடந்ததைக்கூற அவரை தனது ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆய்வாளர் சித்ரா முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவரது உடல் நிலை அதற்கு இடம் தராத வகையில் உடனடியாக பிரசவம் பார்த்தே ஆகவேண்டிய நிலைக்கு உள்ளாக என்ன செய்வதென்று தெரியாமல் தானே தனது பெண் காவலருடன் நடுச்சாலையில் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார் ஆய்வாளர்.
ஆண்குழந்தையை அப்பெண் பிரசவிக்க 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது பணியை பார்க்கச் சென்றுள்ளார். அவரது பணி வாட்ஸ் அப் வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படுகிறது.
இதுகுறித்து சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ராவிடம் இந்து தமிழ்திசை சார்பில் பேசிய போது:
சத்தமில்லாமல் ஒரு காரியத்தை முடித்துவிட்டு ஒரு புகைப்படம் கூட எடுக்காமல் சாதாரணமாக இருக்கிறீர்கள்?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இரவு ரோந்துப்பணியில் இருந்தபோது அந்தப்பெண்ணுக்கு உதவி தேவைப்பட்டது. அனைத்தையும் முடித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு பணி முடிந்து வீட்டுக்கு போய்விட்டேன். மாலையில் ஸ்டேஷனுக்கு வந்துதான் சொன்னேன், அதைக்கேட்டு ஸ்டேஷனில் உள்ளவர்கள் பாராட்டினார்கள். அப்படித்தான் விஷயம் வெளியே தெரிந்தது.
உங்களை காவல் ஆணையர் நிச்சயம் பாராட்டுவார்?
பாராட்டிவிட்டார் சார், சற்றும்முன் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
அன்று நீங்கள் இரவு ரோந்தா? அந்தப்பெண்ணுக்கு உதவ யாரும் இல்லையா?
ஆமாம் அன்று இரவு ரோந்து, 13-ம் தேதி அதிகாலை நடந்தது. அந்தப்பெண்ணின் கணவர் நெல்சன் மாணிக்கம் சாலையில் ஆட்டோ கூப்பிட சென்றுவிட்டார். அதற்குள் அந்தப்பெண்ணின் கண்டிஷன் சிவியர் ஆகிவிட்டது. ஆட்டோவிலும் ஏற்ற முடியாது எங்கள் வாகனத்திலும் ஏற்ற முடியாத நிலை. அங்கேயே அவருக்கு பிரசவம் ஆகிவிட்டது.
உங்களுடன் யார் உதவி செய்தது?
நான், என் ஜீப் ஓட்டுனர் காவலர் பத்மா மற்றும் ஒரு வயதான பெண்மணி யார் என்று தெரியவில்லை. அதன் பின்னர் அவரை பார்க்கவில்லை. மூன்று பேர் பிரசவம் பார்த்தோம். ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின்னர் உங்கள் வாகனத்தில் மருத்துவமனையில் சேர்த்தீர்களா?
இல்லை, 108 ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வந்துவிட்டது. தாயும் சேயும் நலமாக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தோம்.
உங்களுக்கு இதுபோன்ற பிரசவம் பார்த்த முன் அனுபவம் எதுவும் உண்டா?
அப்படியெல்லாம் எதுவும் கிடையாது, எனக்கு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு பிரசவம் பார்த்த அனுபவம் எதுவும் இல்லை. அது கடவுளின் அருள் மற்றும் அந்த நேரத்தில் இருந்த இக்கட்டான நிலை அப்படி செயல்பட வைத்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காவற்பணி மக்கள் பணி என்பதை நிரூபிக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு, மக்கள் பாதுகாப்பு மட்டுமல்ல தேவைப்பட்டால் மருத்துவராகவும் செயல்படுவோம் என நிரூபித்த காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்தோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago