கோவை
தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்துவரும் கோவையைச் சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டிக்கு உதவிகள் வரத் தொடங்கியுள்ளன.
30 ஆண்டுகளாக விறகு அடுப்புப் புகையில் வாடி, இட்லி சமைத்து விற்பனை செய்த கமலாத்தாள் பாட்டிக்கு எல்பிஜி சமையல் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதானவர் கமலாத்தாள் பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். வடிவேலம்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் மிகவும் பிரபலம்.
25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
அதிகாலை 4 மணிக்கு எழும் கமலாத்தாள் பாட்டி தனது கூன்விழுந்த கழுத்துடன் தள்ளாத வயதிலும் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு இட்லி, சாம்பார், சட்னி வைக்கும் பணியையும் தொடங்குகிறார். நாள் ஒன்றுக்கு கமலாத்தாள் பாட்டி குறைந்தபட்சம் 600 இட்லிகள் வரை விற்பனை செய்து தனது காலத்தை ஓட்டி வருகிறார்.
இட்லிக்கு மாவு அரைக்க மட்டுமே கிரைண்டர் பயன்படுத்தும் கமலாத்தாள் பாட்டி, சட்னி அரைப்பதற்கு இன்னும் கல் உரலையே பயன்படுத்தி வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் சாம்பார், சட்னிக்காகவே காலை முதலே ஏராளமானோர் வந்துவிடுகின்றனர்.
மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், அரசு அலுவலகத்தில் பணி செய்வோர், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் என பலரும் கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் இட்லி, சட்னி, சாம்பாருக்காக காலை முதலே காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் கமலாத்தாள் பாட்டியின் தள்ளாத வயதிலும் தனி ஆளாக உழைத்து பிழைப்பு நடத்தி வரும் செய்தி தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் வந்தது. சமூக ஊடகங்களிலும் கமலாத்தாள் பாட்டி குறித்து செய்தி வைரலானது.
இதைப் பார்த்த கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கமலாத்தாள் பாட்டியை அழைத்து உதவிகள் குறித்துக் கேட்டறிந்தார். ஆனால், பாட்டி உதவிகள் ஏதும் வேண்டாம் என்று மறுத்த நிலையில், விரைவில் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் விரைவில் வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பாட்டியிடம் உறுதியளித்தார்.
பாரத் கேஸ் சார்பில் பாட்டிக்கு சமையல் சிலிண்டர், அடுப்பு வழங்கப்பட்ட காட்சி : படம் உதவி ட்விட்டர்
சமூக ஊடகம் வழியாக கமலாத்தாள் பாட்டி குறித்து அறிந்த, மகிந்திரா அண்ட் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, பாட்டியின் தொழிலில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.
மேலும், இன்னும் விறகு அடுப்பில் சமையல் செய்துவரும் கமலாத்தாள் பாட்டிக்கு எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர் அடுப்பு வழங்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உதவ வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்டைப் பார்த்த கோவையில் உள்ள பாரத் கேஸ் நிறுவனத்தார் கமலாத்தாள் பாட்டிக்கு எல்பிஜி சமையல் சிலிண்டர் வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக கோவை பாரத் கேஸ் நிறுவனமும் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
இந்தச் செய்தியை அறிந்த ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் பாரத் கேஸ் நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், " சூப்பர், கமலாத்தாள் பாட்டியின் உடல் நலன் கருதி கேஸ் சிலிண்டர் அடுப்பு வழங்கிய கோவை பாரத் கேஸுக்கு நன்றி. நான் ஏற்கெனவே சொன்னதுபோல, நான் பாட்டிக்கு ஆதரவாக இருந்து எல்பிஜிக்கான செலவை ஏற்கிறேன். தர்மேந்திர பிரதான் அக்கறை எடுத்து கவனித்தமைக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதில அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் " கமலாத்தாள் பாட்டிக்கு உதவ வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தை மதிக்கிறேன். கமலாத்தாள் பாட்டிக்கு எல்பிஜி கிடைக்க உதவியது பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற கடின உழைப்பாளிகளை சமூகம் அங்கீகரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago