1999-ம் ஆண்டு பிப்ரவரி. ஒன்றரை வயது சிறுவன் சுபாஷ், புளியந்தோப்பில் உள்ள தங்களின் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான். திடீரென மின்சாரம் தடைபடுகிறது. சுபாஷின் பெற்றோரானநாகேஸ்வர ராவும் சிவகாமியும் வீட்டுக்குள் இருக்கின்றனர். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்ததும் பார்க்கிறார்கள்; சுபாஷைக் காணவில்லை.
எல்லா இடங்களிலும் தேடிச் சலிக்கிறார்கள்; கிடைக்கவில்லை. காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர். காலம் கடந்தது, சுபாஷ் குறித்து எந்தத் தகவலும் இல்லை. தெரிந்த நண்பர் மூலமாக மோகனவடிவேலன் என்னும் வழக்கறிஞரின் அறிமுகம் கிடைக்கிறது. 2006-ல் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடுக்கின்றனர். 2009-ல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு வழக்கு விசாரணை சூடுபிடிக்கிறது.
சுபாஷை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடத்திக்கொண்டு சென்றதும் மலேசிய சமூக சேவை (MSS) எனப்படும் முறைகேடான அனாதை இல்லத்துக்கு சிறுவனை விற்றதும் தெரிய வருகிறது. அங்கிருந்து அமெரிக்காவுக்கு சுபாஷ் தத்து கொடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
20 ஆண்டுகள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு சுபாஷ் அமெரிக்காவில் இருந்து, 22 வயது இளைஞர் அவினாஷாக சென்னை வந்திருக்கிறார். இந்தத் தருணம் குறித்து உடைந்த குரலுடன் பேசத் தொடங்குகிறார் பெயிண்டிங் காண்டிராக்டரான தந்தை நாகேஸ்வர ராவ். ''20 வருஷம் கழிச்சு எம்புள்ளைய பார்த்தேன். அப்போ சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசமா இருந்தது. என்னிக்காவது நம்ம பையன் வருவானா? அவனைப் பார்க்க முடியுமான்னு ஏங்கிருக்கேன். ஆனா இன்னிக்கு கையால தொட்டு, கட்டிப் பிடிச்சுப் பேசறேன். சாப்பாட்டை ஊட்டி விட்டேன்.
தமிழ் தெரியாத சுபாஷ்
இத்தனை வருசமா திருவிழா, பண்டிகைன்னா முழு சந்தோசமா இருக்க முடியாது. பையன் நெனப்புதான் முன்னாடி வரும். இன்னிக்கு ரொம்ப நிறைவா இருக்கு. பையனால தமிழ் பேச முடியலைங்கறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்க வீட்டுலயும் யாருக்கும் இங்லீசு தெரியாது. அட்வகேட்தான் எல்லாத்தையும் சொல்லிப் புரிய வைக்கறாரு.
சுபாஷ் பேசறதைப் பார்த்தாலே பெருமையா இருக்கு. இனி வேலைக்குப் போகப் போறான். சொந்தக் கால்ல நின்னு, உங்கள அமெரிக்கா கூட்டிட்டுப் போவேன். அங்க போய் வேண்டியதை செய்யறேன்னு சொன்னான். ஆனா அது முறையில்லை, உன்னைக் கவனிச்சுக்கிட்டவங்களை விட்றாமப் பாத்துக்கன்னு சொல்லி இருக்கேன். நம்மால அவனோட வாழ்க்கை வீணாகிடக் கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன். நம்ம பசங்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பற மாதிரி நெனச்சுக்க வேண்டியதுதான்'' என்று சொல்லி நெகிழ வைக்கிறார்.
விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்து சுபாஷையும் பெற்றோரையும் சேர்த்து வைத்த வழக்கறிஞர் மோகன வடிவேலனும் நம்மிடையே பேசுகிறார். ''2009-ல் பையன் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது. சுபாஷ் இவர்களின் மகன் என்று நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இண்டர்போல் உதவியுடன் ரத்த மாதிரி கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் நாகேஸ்வர ராவின் மகன் என்று நிரூபித்தோம். சட்ட நடைமுறைகள் முடிந்துவிட்டன.
இந்தியா வர விருப்பம்
சிறுவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்தோம். விஸ்கான்சின்னில் உள்ள அவரின் தத்து பெற்றோரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்களுக்கு விருப்பமில்லை. மெல்ல மெல்ல நெருங்கி, சிறுவனிடம் பேசினோம். அவனுக்கு இந்தியா வர விருப்பம் இருந்தது. நாளடைவில் மனம் மாறிய பெற்றோர், சுபாஷை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இப்போது சுபாஷ் பெற்றோருடன் சென்னையில் இருக்கிறார்.
ஆரம்பத்தில் அமெரிக்கா சென்ற சுபாஷுக்கு அவி என்று பெயர் சூட்டப்பட்டது. தத்தெடுத்த பெற்றோரின் நெருங்கிய நண்பரான அவினாஷ் விபத்தில் இறந்துவிட, அவரின் நினைவாக அவினாஷ் என்று பெயர் சூட்டப்பட்டது'' என்கிறார் மோகன வடிவேலன்.
அமெரிக்க ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் சுபாஷிடம் இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள் என்றபோது, ''மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். பதற்றமாகவும் படபடப்பாகவும் இருக்கிறது. சுற்றிலும் மீடியாக்கள், கேமராக்கள் என ஒரே நாளில் பிரபலமாகி விட்டேன். உற்சாகமாக இருக்கிறது.
பீறிட்ட உற்சாகம்
அம்மாவைப் பார்த்தவும் இவர் என்னுடையவர் என்று உணர்ந்தேன். மகிழ்ச்சி, உற்சாகம் எல்லாம் ஒரு சேர ஏற்பட்டது. என் பெற்றோரை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வேன்'' என்கிறார் சுபாஷ்.
திருமணம், செட்டிலாவது குறித்து முடிவெடுத்துவிட்டீர்களா என்று கேட்டதற்கு முதிர்ச்சியான பதிலைச் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார். ''அதைப்பற்றி இன்னும் யோசிக்கவில்லை. நான் என்ன சொன்னாலும் ஒரு தரப்பு பெற்றோர் வேதனைப்படுவர். காலம் சிலவற்றுக்குப் பதில் சொல்லும். அப்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்'' என்கிறார் சுபாஷ்.
நம்மிடம் வளர்ந்திருந்தால் இருப்பதைவிட இன்று நன்றாக இருக்கிறான் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? என்று தந்தை நாகேஸ்வர ராவிடம் கேட்டு முடிப்பதற்குள், பதில் உறுதியுடன் வந்து விழுகிறது. ''இல்லை, என் மகன் காணாம போனதுல இருந்து இன்னிக்கு வரை செலவு பண்ண பணத்தை வச்சிருந்தாலே, அவன நல்லபடியா வளர்த்திருக்க முடியும்.
’நான் பட்ட கஷ்டத்தை என் பிள்ளைகள் படக்கூடாது..’
இந்த 20 வருசத்துல ஆன செலவைக் கணக்கே பண்ண முடியாது. நான் பட்ட கஷ்டத்தை என் புள்ளைங்க படக்கூடாதுன்னு ஆசைப்பட்டேன். என்னோட பசங்கள நல்லபடியா வளர்க்கணும்ங்கற வைராக்கியம் எப்பவுமே இருந்தது. அதுதான் இத்தனை வருசம் என்னைப் போராட வச்சது'' என்கிறார் நாகேஸ்வர ராவ்.
சுபாஷின் தாய் சிவகாமியிடம், நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருப்பீர்கள். எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, துயரம் கவ்விய குரலில் பேசத் தொடங்குகிறார். ''சந்தோசமாவும் இருக்கு, வருத்தமாவும் இருக்குங்க.
சிக்கனும் சாம்பாரும்
நாளைக்குப் பையன் கெளம்புறான், என்னால எதுவும் பேச முடியலை. அவங்க அப்பாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. ஞாயித்துக் கெழம வந்தான். மூணு நாளா கூடவே இருந்தேன், அவனுக்குப் பிடிச்சதை சமைச்சுப் போட்டேன். ஓட்டல்லயும் சாப்டோம். அவனுக்குச் சிக்கன் பிடிக்குமாம். சிக்கன், சாம்பார், மட்டன்னு தினமும் ஒவ்வொரு ஐட்டத்தையும் செஞ்சு கொடுத்தேன். நாளைக்கு அவன் கிளம்புறானாம். நேத்தே அழுதுட்டேன். பையனும் அழுதான்'' என்கிறார் சிவகாமி.
சுபாஷ் என்ன செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு, நீண்ட பெருமூச்சும் விம்மலுமே பதிலாக வருகிறது. 'அத அவராண்டயே கேளுங்க' என்று திரும்பிச் செல்கிறார் தாய் சிவகாமி. அதில் வெளியில் சொல்ல முடியாத எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் இருக்கின்றன.
அந்தத் தாயின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 secs ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago