ஆர்.கிருஷ்ணகுமார்
வெள்ளிமலை உதித்து விளை நிலங்கள் செழிக்கச் செய்தாய்! துள்ளி நடைபயின்று தூரெடுத்த குளம் நிறைத்தாய்! சிறுதுளிக்கு பாலூட்டி தேசமெல்லாம் பேசவைத்தாய்! கருணைமிகு நொய்யல் தாயே வளமனைத்தும் அருள்வாயே! - சிறுதுளி அலுவலகத்தின் நுழைவுவாயிலில் எழுதப்பட்டிருக்கும் கவிதை இது.
“ஓடற தண்ணீரை நடக்க வை; நடக்கற தண்ணீரை நிக்க வை; நிக்கற தண்ணீரை பூமித்தாய் மடியில் உட்கார வை’ என்று அந்தக்
காலத்திலேயே நீர் மேலாண்மையை முன்னோர் அழகாக சொல்லியிருக்கிறார்கள். இதுவே சிறுதுளியின் தாரக மந்திரம். நொய்யல் நதியை மீட்டெடுப்பதே எங்கள் பயணத்தின் இலக்கு” என்கிறார் கோவை சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்.
`தண்ணீரால்தான் மூன்றாம் உலகப்போர் நிகழும்’ என்று சூழல் ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சென்னையில் தண்ணீருக்கு மக்கள் தவியாய் தவித்தபோதுதான், தண்ணீரின் முக்கியத்துவத்தை, அதை சேமிக்க வேண்டிய தேவையை, நீர்மேலாண்மையின் அவசியத்தை ஒட்டுமொத்த தமிழகமும் முழுமையாய் உணர்ந்துள்ளது. பல அமைப்புகளும் நீர்நிலைகளை மீட்போம் என கிளம்பியிருக்கின்றன.
16 ஆண்டுகளுக்கு முன்...
ஆனால், ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்தவர்களால் தொடங்கப்பட்டது சிறுதுளி அமைப்பு. அப்போது பல பகுதிகளில் நீர்மட்டம் 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டதையறிந்து வேதனைக்குள்ளானவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் முயற்சியால், கோவையில் வறண்டுகிடந்த பல நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. தண்ணீரின் மகத்துவத்தை மக்கள் அறியச் செய்ததுடன், களப்பணியிலும் கலக்கி வரும் `சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் அவ்வமைப்பின் தூண்களான ஆர்.கிருஷ்ணசாமி (நீர்நிலைகள்மேலாண்மை), பி.பி.சுப்பிரமணியன் (மக்கள்தொடர்பு), சந்திரசேகரன் (வனம் சார்ந்தகளப்பணி), ஆர்.பிரபுசேகர் (நொய்யல் ஆய்வு), பி.சரவணன் (முதன்மைஒருங்கிணைப்பாளர்), ஆகியோரை சந்தித்தோம்.“ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நீர்நிலைகளின் நிலை மிக மோசமாக இருந்தது. பல நீர்நிலைகள் விளையாட்டு மைதானங்கள்போல காட்சியளித்தன. 15, 20 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைத்தது. நீர்வளம் மிகுந்த வேடப்பட்டி பகுதியிலேயே 1,200 அடிக்கு கீழே நிலத்தடிநீர்மட்டம் சென்றுவிட்டது.
தொடங்கியது களப் பணி...
நாங்கள் எல்லாம் நீர்நிறைந்த குளங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அந்த தண்ணீரெல்லாம் எங்கு போயிற்று என்ற கேள்வி எழுந்தது. நீரைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆவல் உருவானது. ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டுமென்ற எண்ணமே `சிறுதுளி’ அமைப்புக்கு வித்திட்டது. ஆரம்பத்தில் 7 அறங்காவலர்களுடன் சிறுதுளி உருவானது. அமைப்பு தொடங்கிய உடனடியாக களத்தில் இறங்கினோம்.
கிருஷ்ணம்பதி குளம் முழுக்க குப்பை கொட்டப்பட்டுக் கிடந்தது. ஏறத்தாழ 75 ஏக்கரில் குப்பையை அகற்றி, 13 அடிக்கு தூர் வாரி, அந்த மண்ணைக் கொண்டு கரை அமைத்தோம். குளத்துக்கு தண்ணீர் வரும் நீர்வழிப் பாதையையும் சீரமைத்தோம். ஆனாலும், நாங்கள் சரியான பணியைத்தான் செய்கிறோமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்தர சிங்கை கோவைக்கு அழைத்துவந்து, ஆலோசனை கேட்டோம்.
தண்ணீர் மனிதன் கொடுத்த நம்பிக்கை!
கிருஷ்ணம்பதி குளத்தில் நின்றுகொண்டு, அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையைஉற்றுநோக்கிய ராஜேந்திர சிங், “நீங்கள்
சரியான பாதையில்தான் செல்லத் தொடங்கியிருக்கிறீர்கள். தண்ணீரை தேக்கிவைக்கும் பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். மழை வந்தால் இந்தக் குளம் நிறைவது உறுதி” என்று நம்பிக்கையளித்தார்.
ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. `இங்கெல்லாம் நாங்க தண்ணீரையே பார்த்தது கிடையாது’ என்று கூறிவிட்டனர். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெய்த மழையின்போது, இரண்டே நாளிலேயே குளம் நிறைந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறண்டுகிடந்த கிணறு, ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் வரத் தொடங்கியது. சிறுதுளியின் முதல் களப்பணிக்கு கிடைத்த வெற்றி, மிகுந்த உத்வேகத்தை அளித்தது.
உதவிய மாவட்ட ஆட்சியர்...
அடுத்து செல்வம்பதி குளத்தை தூய்மைப்படுத்தினோம். குமாரசாமி குளம் எனப்படும் முத்தண்ணன் குளத்தின் பெருமளவு பகுதி ஆக்கிரமிப்பில் இருந்தது. நாங்கள் குளத்தை தூய்மைப்படுத்தி, மண் எடுத்து, கரையை அமைத்தோம். பின்னரே அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. அப்பகுதியில் மிக மோசமாக இருந்த சாலையையும் அகலப்படுத்தி, சீரமைத்துக் கொடுத்தோம். அப்போது ஆட்சியராக இருந்த முருகானந்தம், மிகப் பெரிய அளவில் உதவினார். சிறுதுளி அமைப்பின் பணிகள் வெளியில் தெரியத் தொடங்கின.
தொடர்ந்து, உக்குளம், செல்வசிந்தாமணி குளம், நரசம்பதி குளம், குறிச்சி குளம், பெரிய குளம், கங்கநாராயண சமுத்திரம், சொட்டையாண்டிக்குட்டை, கோளரம்பதி, புதுக்குளம் என நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்தன. குளங்களைத் தூய்மைப்படுத்தினாலும், சாக்கடை கழிவுநீரை குளத்து நீரில் கொட்டுவதை முழுமையாய் தடுக்க முடியவில்லை.
இதுதவிர, பேரூர் வட்டத்தில் 50-55 குட்டைகளின் பட்டியலைப் பெற்று, விவரங்களை ஆவணப்படுத்தி, அதில், 15 குட்டைகளை
யும் சீரமைத்துள்ளோம். இதன் மூலம் 7.30 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. நொய்யல் ஆற்றுப் பாதையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 24 குளங்கள் உள்ளன. இதில் 12 குளங்களில் நாங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதுபோக, சிறிய குளங்கள், குட்டைகள் என 30-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் களப் பணியாற்றியுள்ளோம். ஏறத்தாழ 324 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய குளத்தில் டன் கணக்கில் குப்பை, கட்டிடக் கழிவுகளை அகற்றினோம்.
தடுப்பணைகளில் கவனம்!
2008-ல் நண்டங்கரையில் அரசு-தனியார் பங்களிப்புடன் தடுப்பணை அமைத்தோம். முண்டந்துறையில் சிதிலமடைந்துகிடந்த தடுப்பணையை சரி செய்ததுடன், நீர்வரத்து வாய்க்காலையும் சீரமைத்தோம். பின்னர், கரடிமடைக்கு தெற்கேயுள்ள குமரன்குட்டை பகுதியிலும் தடுப்பணைகளை சரி செய்து, அங்குள்ள 7 குட்டைகளை சீரமைத்தோம். அதன் பிறகே அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரத் தொடங்கியது.
கரடிமடை பகுதியில் ஒரு விவசாயி இரண்டு ஏக்கரில் மட்டும் 17 ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்திருந்தார். ஆனால், ஒன்றில்கூட தண்ணீர் வரவில்லை. எங்கள் களப் பணிக்குப் பிறகு, ஏறத்தாழ ஒரு லட்சம் க்யூபிக் மீட்டரில் தண்ணீர் தேங்கி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் வந்தது.இதேபோல, செம்மேடு அருகே காஞ்சிமாநதியிலும், மச ஒரம்பு பகுதிகளிலும் தடுப்பணை கட்ட, அரசுக்கு திட்ட வரைவு வழங்கியுள்ளோம்.
மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள்!
சர்வதேச அளவில் பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், மழை பெய்யும் நாட்கள் குறைந்து வருகின்றன. அதேசமயம், சில நாட்களிலேயே அதிக அளவு மழை பெய்துவிடுகிறது. கொட்டும் மழையை சேமிக்க முடியாததால், பெருமளவு வீணாகிவிடுகிறது. எனவே, தண்ணீரைச் சேமிப்பது என்பது மிக அவசியமாகும். இதனால், நிலத்துக்கடியில் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் முனைப்புக் காட்டினோம். கோவை முழுவதும் பள்ளி, சாலையோரங்களில் 750-க்கும் மேற்பட்ட மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தினோம். நிலத்தில் பெய்யும் மழை நீர் அந்தக் கட்டமைப்புக்குள் சென்று, நிலத்தடி நீரை அதிகரிக்கும்.
6 லட்சம் மரக்கன்றுகள்...
இப்படி, நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் ஒருபுறம் இருக்க, சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கினோம். மழையைத் தருவது மட்டுமின்றி, மழை நீரைத் தேக்கிவைத்து சேமிப்பதிலும் மரங்களின் பங்கு இன்றியமையாதது. 2005-ம் ஆண்டில் `பசுமைப் பயணம்’ என்ற மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் தொடங்கிவைத்தார். இதுவரை 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டுவைத்துள்ளோம். குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல அலுவலகத்தில் மட்டும் 80,000 மரக்கன்றுகளை நட்டுவைத்தோம். கடந்த 4 ஆண்டுகளில் அவை வளர்ந்து, வனம்போல காட்சியளிக்கிறது. இதன் விளைவு, அப்பகுதியில் 450 அடிக்கும்கீழே இருந்த நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, தற்போது 100 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல, மத்திய சிறைச் சாலையில் 6,500 மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளோம். அடுத்த கட்டமாக 10,000 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நடத் திட்டமிட்டுள்ளோம்.
இதேபோல, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், வேளாண் மேம்பாடு சார்ந்த செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, பாசன வசதிக்கான ஆலோசனைகள் வழங்குவதுடன், உதவிகளையும் செய்து வருகிறோம். செம்மேடு அருகேயுள்ள உக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணியால், ஏறத்தாழ 1,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. அப்பகுதி விவசாயிகள் எங்களிடம் பேசியபோது, ‘முன்பெல்லாம் தண்ணீருக்காக மிகுந்த சிரமப்பட்டோம்.
சிறுதுளியின் களப்பணி
யால் இப்போது பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதுவே எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். அமைப்பின் உயர்நிலைக் குழுவினர் ஈடுபாடு, களப்பணிகளுக்கு மிகுந்த உதவியாக உள்ளது .
கோவை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புமே எங்களது பயணத்தை வேகமாக்குகின்றன. சிறுதுளியின் தொடர் பயணத்துக்கு இவை மிகுந்த ஊக்கமளித்து வருகின்றன” என்றனர் பெருமிதத்துடன்.
வற்றாத ஜீவநதியாகுமா நொய்யல்?
“கடந்த 16 ஆண்டுகளில் நீர்நிலை மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல் என்று பயணிக்கும் சிறுதுளியின் இலக்குதான் என்ன?” என்று வனிதா மோகனிடம் கேட்டோம்.
“எங்கள் இலக்கு நொய்யல். ஒருகாலத்தில் ஆண்டில் பல மாதங்கள் தண்ணீர் சென்று கொண்டிருந்த நொய்யலில், தற்போது ஒன்று அல்லது இரண்டு மாதங்கள்தான் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஏறத்தாழ 34 ஓடைகள் வழியே பாய்ந்தோடி வரும் தண்ணீர்தான் நொய்யலில் கலந்து பெரும் நதியாகிறது. இந்த ஓடைகளைக் கண்டறிந்து, சீரமைக்க `நொய்யல் ஆராய்ச்சி மையம்’ என்ற பிரிவைத் தொடங்கியுள்ளோம். முதல்கட்டமாக, சாடிவயல், தாணிக்கண்டி பகுதிகளில் மலைவாழ் மக்களிடம் பேசி, அப்பகுதியில் எங்கெல்லாம் ஓடைகள் உள்ளன, அவற்றுக்கு எங்கிருந்து தண்ணீர் வந்தது, ஏன் தற்போது தண்ணீர் வருவதில்லை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைச் சேகரித்து வருகிறோம். அனைத்து விவரங்களையும் திரட்டிய பின்னர், ஒவ்வொரு ஓடையாக மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இப்படி அனைத்து ஓடைகளையும் மீட்டெடுத்து, தண்ணீர் பாய்ந்தோடச் செய்தால், நொய்யல் வற்றாத ஜீவநதியாக மாறிவிடும். நொய்யல் பாயும் பகுதிகளில் நீர்மட்டமும் உயரும். இது தொடர்பாக 5, 6 ஆண்டுகளுக்கு முழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பல்வேறு ஆவணங்களையும் திரட்டி வருகிறோம். இதற்காக பிரத்தியேகமான கம்ப்யூட்டர் அப்ளிகேஷனையும் தயார் செய்துள்ளோம்.
இதேபோல, கழிவுநீரை நீர்நிலைகளில் கலக்கச் செய்வதையும் தடுத்து நிறுத்த வேண்டும். சாக்கடை, சாயக்கழிவு உள்ளிட்ட கழிவுகளின் கலப்பால் நொய்யல் உள்ளிட்ட நீராதாரங்கள் அழியும் சூழலுக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாகவும் பல்வேறு ஆய்வுகளை சிறுதுளி மேற்கொண்டு வருகிறது. குப்பை, கழிவுநீரை, நீராதாரங்களில் கலப்பதை தடுத்துநிறுத்த மத்திய, மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மேலும், மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் மத்திய அரசு வன மேம்பாட்டுக்காக ரூ.47 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. உரிய கண்காணிப்புடன், தன்னார்வ அமைப்புகளுக்கு உதவினால், இந்த திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி, அதிக பரப்பில் மரங்களை நட்டு, வளர்க்கலாம். உண்மையில், மரங்கள் அதிக அளவிலான தண்ணீரைத் தேக்கிவைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யும்.
தண்ணீரைச் சேமிப்பதும், பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் பொறுப்பு. மக்களால் மக்களுக்காக செயல்படும் சிறுதுளி அமைப்பில்
கோவை மக்கள் எல்லாருமே உறுப்பினர்கள்தான். 2005-ல் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிய சூழலில், அக்டோபர் 2-ம் தேதி `நொய்யல் நடைபயணம்’ என்ற நடைபயணத்தை மேற்கொண்டோம். நொய்யல் தொடங்கிய இடத்திலிருந்து கோவை நகரம் வரை 33 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்த இப்பயணத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்குப் பிறகே நொய்யல் நதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தது.
பொருளாதாரமா? சுற்றுச்சூழலா?
`பொருளாதாரமா, சுற்றுச்சூழலா... எது முக்கியம்?’ என்று கேள்வி எழலாம். பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது, காற்று இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், நமக்கு எது முக்கியமாகத் தோன்றும்? இதுதான் இதற்கான பதில். வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, பணத்தை மட்டுமே சேமிப்பதால் என்ன பயன்? எனவேதான், இது தொடர்பாக மக்களிடம், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். வருங்கால தலைமுறையிடம் தண்ணீர், மரங்கள், பாதுகாப்பான சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு விளக்குவதுடன், அவர்களது பங்களிப்பையும் வலியுறுத்துகிறோம்.
அமேசான் வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து உலகையே பதற வைத்துள்ளது. இந்த பதற்றம், நமது வனம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் ஏற்பட வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டும் ஒவ்வொருவரின் கடமை அல்ல. தண்ணீர், காற்றைப் பாதுகாப்பதும்தான் அனைவரின் தலையாய கடமை. எதிர்காலத்துக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்லும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.
சென்னையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினை, மற்ற ஊர்களிலும் ஏற்படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. போதுமான மழைப்பொழிவு இருந்தாலும், மழை நீரை வீணடித்துவிட்டு, பற்றாக்குறை என்று புலம்புவதும், மழையில்லை என்று வருந்துவதும் பயனற்றது. தண்ணீரே இல்லாத இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் நீர்மேலாண்மை மூலம் சாதித்துக் காட்டியுள்ளன. தண்ணீர் சேமிப்பு என்பது நம் ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்தும் வெளிப்பட வேண்டும். தண்ணீர் சிக்கனம், பாதுகாப்பில் அரசும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். இப்படி, சிறு சிறு துளியாக சேமிப்பதே பெருவெள்ளமாக மாறும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago