அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்: கண்ணீர் கடலில் மிதந்த ராமேசுவரம்

By எஸ்.ஸ்ரீனிவாசகன், கே.கே.மகேஷ்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.

டெல்லியிலிருந்து அப்துல் கலாம் உடலை ஏற்றிவந்த ராணுவ விமானம் மதுரை விமான நிலையத்தில் நேற்று மதியம் இறங்கியது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசய்யா உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, மனோஜ் பாரிக்கர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

மண்டபம் முகாமில் மரியாதை

மதுரை விமான நிலையத்திலிருந்து அப்துல் கலாமின் உடலுடன் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் மண்டபம் முகாமிலுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு 2.20 மணிக்கு வந்தது. அங்கும் மத்திய அமைச்சர்கள் 3 பேர், மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 7 பேர் மரியாதை செலுத்தினர். அங்கிருந்து மதியம் 2.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கலாமின் உடல் ஏற்றப்பட்டது.

இந்த வாகனம் அக்காள்மடம், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே கிழக்காடு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மைதானத்துக்கு மதியம் 3.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. மண்டபத்திலிருந்து வழிநெடுக உள்ள கிராமங்களில் ஏராளமான மக்கள் சாலைகளில் திரண்டு மலர்களை தூவி கண்ணீர்மல்க அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி திடலில் காலை 8 மணிமுதலே ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த குவிந்திருந்தனர். கலாமின் உடல் ஏற்றிவந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தபோது பல்லாயிரக்கணக் கானோர் உணர்ச்சிப்பூர்வமாக கையெடுத்து கும்பிட்டும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர், கட்சியினர் அஞ்சலி

அஞ்சலி மைதானத்திலுள்ள சிறப்பு மேடையில் அப்துல் கலாமின் உடல் இறக்கி வைக்கப்பட்டது. அங்கும் வெங்கைய நாயுடு தலைமையில் மத்திய அமைச்சர்கள், மற்றும் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.சுந்தர்ராஜ், பழநியப்பன், ஆர்.பி.உதயகுமார், அப்துல்ரஹீம் ஆகிய 8 பேர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சாரை, சாரையாய் அஞ்சலி செலுத்தினர். அப்போது பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ராமேசுவரம் மட்டுமின்றி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், அக்காள்மடம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஒரு கிலோமீட்டருக்கும் நீண்ட வரிசையில் கடும் வெயிலில் 5 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இதற்காக ராமேசுவரத்தில் குவிந்த வாகனங்களால் 5 கிலோமீட்டருக்கும் மேல் கடும் நெரிசல் ஏற்பட்டது.

சொந்த இல்லத்தில்..

இரவு 8 மணிக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்துல் கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரா லெப்பை மரைக்காயர் உட்பட பலரும் பெற்றுக்கொண்டனர். அங்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

இன்று காலையில் அப்துல் கலாமின் உடல் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு தொழுகைக்கு பின் மீண்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கி.மீ. தொலைவுள்ள பேக்கரும்பு என்ற இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்டு, அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்