ராமதாஸ் தான் மதுவை ஒழிக்க வந்த காந்தி: திமுகவுக்கு பாமக பதில்

"நாங்கள் காந்தியடிகளை பார்த்ததில்லை. எங்களைப் பொறுத்தவரை, மதுவை ஒழிக்க வந்த காந்தி, ராமதாஸ் தான். கருணாநிதி ஆட்சியிலிருந்து மூடிய மதுக்கடைகளைவிட, ஆட்சியில் இல்லாமல் அறப்போராட்டம் நடத்தியும், சட்டப்பேராட்டம் நடத்தியும் ராமதாஸ் மூடிய கடைகள் அதிகம்" என்று பாமக தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாததை சுட்டிக்காட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக வாக்குறுதியை மக்கள் நம்பமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுகவால் பதில் கூற முடியவில்லை. ஆனால், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரான துரைமுருகன், ‘ராமதாஸுக்கு கோபம் கொப்பளிப்பதேன்?’ என்று கேட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கோபம் அவருக்கு ஆகாது என்பதை மறந்து அறிக்கையின் பல இடங்களில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். மது விலக்கு குறித்த கருணாநிதியின் அறிவிப்பை பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ராமதாஸுக்கு எதிராக துரைமுருகன் சிலம்பம் ஆடுவதைப் பார்க்கும் போது மதுவிலக்கு பிரச்சினையில் பாமகவைக் கண்டு திமுக எந்த அளவுக்கு பயந்து போயிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

“கருணாநிதி பாவ மன்னிப்பு கோருகிறார்”, “ராஜாஜியை எள்ளி நகையாடினார்”, “ஏமாற்றுகிறவர்”. “கருணாநிதிக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது”, “மதுவிலக்கைக் கொண்டு வர கருணாநிதி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை”, “கருணாநிதியின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்”, “கருணாநிதியை, மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்” இப்படிப்பட்ட அர்ச்சனைகளையெல்லாம் ராமதாஸ் அறிக்கையில் பயன்படுத்தியிருப்பதாக துரைமுருகன் கொதித்துள்ளார்.உண்மையைத் தானே ராமதாஸ் கூறியிருக்கிறார். இதற்காக ஏன் துரைமுருகன் கோபமடைய வேண்டும்?

கருணாநிதிக்காக களமிறங்கி வாதாடும் துரைமுருகனிடம் நான் கேட்கவிரும்புவது ஒரே ஒரு கேள்வியைத் தான். மதுவிலக்கு தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை திமுக ஒருமுறையாவது நிறைவேற்றியிருக்கிறதா? என்பது தான்.

அந்தக் கேள்வி. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பார்த்தால்...

1. 08.04.1996 அன்று சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, திமுக ஆட்சியில் மதுவிலக்கு மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி வாக்குறுதி அளித்தார்.

2. 22.12.2008 அன்று ராமதாஸ் தலைமையிலான குழு கருணாநிதியை கோட்டையில் சந்தித்து மதுவிலக்கு கோரியது. அதைக்கேட்ட கருணாநிதி படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என அறிவித்தார்.

3. 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. 29.07.2010 அன்று கேள்வி -பதில் வடிவில் வெளியிட்ட அறிக்கையில், ராமதாஸ் கோரிக்கையை ஏற்று மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்.

5. 08.08.2010 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என கருணாநிதி வாக்குறுதி அளித்தார்.

இவ்வாறு 5 முறை மதுவிலக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி அவற்றில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? என்பதை துரைமுருகன் தான் கூற வேண்டும்.

இவ்வாறு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவரை ‘ஏமாற்றுகிறவர்’ என்று கூறாமல் எப்படி அழைப்பது? என்பதையும் அவர் தான் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு 5 முறை ஏமாற்றியவர் ஆறாவது முறையாக இப்போது வாக்குறுதி அளிக்கிறார். கருணாநிதியின் வார்த்தைகளை நம்பி ஏமாற இனியும் மக்கள் தயாராக இல்லை.

1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதி, அதன்பின் 1974 ஆம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை நடைமுறை செய்ததும், 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபின் சில மதுக்கடைகளை மூடியதும் சாதனைகள் இல்லையா? என்றும், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மதுவை வளர்த்ததை மறைத்துவிட்டு கருணாநிதி மீது மட்டும் ராமதாஸ் பழிசுமத்துகிறார் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் பாமக வேண்டுகோளை ஏற்று சில மதுக்கடைகளை மூடியதையும், விற்பனை நேரத்தை கருணாநிதி குறைத்ததையும் ராமதாஸ் மறைத்தது இல்லை. பல நேரங்களில் அதை அவர் பாராட்டியுள்ளார். ஆனால், அந்நடவடிக்கைகள் போதுமானவையா? என்பது தான் வினா.

கடைசி நேரத்தில் துறை பறிக்கப்பட்டாலும் துரைமுருகன் நீண்டகாலம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கு புரியும். ஓமந்தூரார் காலத்தில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு என்பது மதுவை அணை கட்டி தடுத்து வைத்ததைப் போன்றது. அதை 1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து மூலம் உடைத்து ஊர்முழுவதும் மதுவை பாயவிட்டு விட்டு 1974ஆம் ஆண்டில் மது அணையை தடுத்தார் என்பதும், 2006 ஆம் ஆண்டில் இன்னும் சில செங்கற்களை எடுத்து வைத்தார் என்பதும் எந்த அளவுக்கு பயன் தரும்?

மேலும் மதுவை பாயவிட்டதற்காக எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; ஜெயலலிதா ஆட்சியில் மதுவிலக்கு கோரி எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, சிறைசென்றிருக்கிறார். இதை துரைமுருகன் மறந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

கடைசியாக ஒன்று! துரைமுருகன் கேட்டதால் சொல்கிறேன். நாங்கள் காந்தியடிகளை பார்த்ததில்லை. எங்களைப் பொறுத்தவரை மதுவை ஒழிக்க வந்த காந்தி, ராமதாஸ் தான். கருணாநிதி ஆட்சியிலிருந்து மூடிய மதுக்கடைகளைவிட, ஆட்சியில் இல்லாமல் அறப்போராட்டம் நடத்தியும், சட்டப்பேராட்டம் நடத்தியும் ராமதாஸ் மூடிய கடைகள் அதிகம்.

மதுவிலக்கு கொள்கையை பிடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற நப்பாசை எங்களுக்கு இல்லை; ஒருவேளை திமுகவுக்கு இருக்கலாம். அதனால் தான் தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு வலையை விரித்திருக்கிறார்கள்.

கருணாநிதியைப் போல ராமதாஸ் தேர்தலுக்காக மதுவிலக்கு கோருபவர் அல்ல... தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே பலனை எதிர்பாராமல் வலியுறுத்தி வருபவர். இப்போதும் மதுவிலக்கை ராமதாஸ் வலியுறுத்துவது அரசியலுக்காக அல்ல, சமூக நலனுக்காகத் தான்.

அப்புறம்...அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராகி மதுவிலக்கு ஆணையில் முதல் கையெழுத்து போடுவார் என்பது கனவு அல்ல... காலத்தின் கட்டாயம். மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் இருக்கும் வரை அதை கருணாநிதி அல்ல... வேறு எவராலும் தடுக்க முடியாது என்பது உறுதி'' என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்