தொடர் விருதுகளை குவிக்கும் கூனிச்சம்பட்டு அரசு பள்ளி: நாளை நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்

புதுச்சேரி

தேசிய அளவில் தொடர் விருதுகளை குவிக்கிறது கூனிச்சம்பட்டு அரசு பள்ளி. கடந்தாண்டு தூய்மைப் பள்ளிக்கான தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இப்பள்ளி ஆசிரியர் நாளை நல்லாசிரியர் விருதை டெல்லியில் பெறுகிறார்.

புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தில் இயங்கி வருகிறது பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி. பாவேந்தர் பாரதிதாசன் ஆரம்ப காலத்தில் இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு, இப்பள்ளிக்கு, 'பாவேந்தர் பாரதிதாசன் தொடக்கப் பள்ளி' என பெயர் சூட்டியிருக்கிறது.

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து 'தூய்மைப் பள்ளி' என்ற விருதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (ஸ்வச் வித்யாலயா) வழங்குகிறது. கடந்தாண்டு 100 சத புள்ளி பெற்று முதலிடம் பிடித்து இப்பள்ளியானது தூய்மைப் பள்ளிக்கான தேசிய விருதை பெற்றது.

இப்பள்ளியில் மழலையர் வகுப்பு (எல்கேஜி) முதல் 5 ஆம் வகுப்பு வரை 490 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 16 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.

நடப்பாண்டு புதுச்சேரி கூனிச்சம்பட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியராகவும் உள்ளார். அவருக்கு நாளை (செப்.5) டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரின் பெயரை இன்று சட்டப்பேரவையில் தெரிவித்து கூறுகையில், "மத்திய அரசு 2018-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளது.

அதன்படி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்வித்துறை, புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருதுக்கான பரிந்துரையை ஏற்று, புதுச்சேரி கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் சசிகுமார் தேசிய விருதைப் பெறுகிறார்.

இவர் கடந்த 12 ஆண்டுகள் ஆசிரியர் பணியை சிறப்பாக பணியாற்றிய அடிப்படையில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. இவருக்கு ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருதினை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.அதில் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் சான்றிதழும் வெள்ளிப்பதக்கமும் வழங்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

செ.ஞானபிரகாஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE