இருசக்கர வாகனத்துக்கு ரூ.45, வீடியோ கேமராவிற்கு ரூ.335: கடும் கட்டண உயர்வால் தேக்கடிக்கு நடுத்தர சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

By என்.கணேஷ்ராஜ்

குமுளி,

கேரள வனத்துறையின் கடுமையான விதிமுறைகள், கட்டண வசூல்களால் தேக்கடிக்கு நடுத்தர சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.

தேக்கடி படகு குழாமில் இருந்து வாகனங்களை 4 கிமீ.முன்பே நிறுத்தும் வகையில் கேரள வனத்துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும் நுழைவு, பேருந்து, படகு கட்டணம் என்று ஒருவருக்கு ரூ.320 வசூலிக்கிறது. இதனால் நடுத்தர சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு முற்றிலும் குறைந்தது.

முல்லை பெரியாறு அணைநீர் தேக்கத்தின் ஒருபகுதியாக தேக்கடி படகு குழாம் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர படகுகள் இயக்கப்படுகிறது.

தினமும் காலை 7.30,9.30,11.15,1.45 மற்றும் 3.30 என்று 5 முறை இங்கு படகுகள் தலா ஒன்றரை மணி நேரம் இயக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் ஆமை பார்க் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் எவ்வித நுழைவுக் கட்டணமும் இன்றி படகு குழாம் பகுதிக்கு வர முடிந்தது.

இந்நிலையில் கேரள வனத்துறை இந்த சுற்றுலாப் பகுதியில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. இதன்படி அனைத்து வாகனங்களும் ஆனவச்சால் என்று 4 கிமீ.தூரத்திற்கு அப்பால் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி இங்கு கான்கிரீட் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்வாக உள்ளது. இப்பகுதியில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தலா ரூ.45-ம், கார் போன்ற இலகு ரகவாகனங்களுக்கு ரூ.85-ம், சுற்றுலா பேருந்துகளுக்கு ரூ.335-ம் வாடகை வசூலிக்கப்படுகிறது.

அதே போல் ஸ்டில் கேமராவிற்கு ரூ.45-ம், வீடியோ கேமராவிற்கு ரூ.335-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இங்கிருந்து படகுக்குழாமிற்கு இயக்கப்படும் வனச்சரணாலய மினி பேருந்தில்தான் பயணிக்க முடியும். இதற்காக குழந்தைகளுக்கு ரூ.35, பெரியவர்களுக்கு ரூ.65ம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பின்பு படகு பயணத்திற்கு குழந்தைகளுக்கு ரூ.85, பெரியவர்களுக்கு ரூ.255 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒருவர் சராசரியாக ரூ.320 கட்டணம் செலுத்தினால்தான் படகில் பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் குழுவாக சுற்றுலாவிற்கு வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பேருந்து, வேனில் வரும் பலரும் இந்த கட்டணத்தைக் கேட்டதும் திரும்பிச் செல்லும் நிலையும் உள்ளது. வாகன நிறுத்த கட்டணம் செலுத்திய பிறகே இந்த விபரம் தெரிவதால் பலரும் பண இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

ஆனவச்சால் பகுதியில் குமுளி பகுதி சுற்றுலா ஜீப்களையும் நிறுத்தவும் அனுமதிப்பதில்லை. இதனால் அங்குள்ளவர்கள் கேரள வனத்துறைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வனஉயிரின சரணாலயம் என்பதை முன்னிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளும், நீர்பிடிப்புப்பகுதியான ஆனவச்சால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தும் கேரள வனத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

எனவே பெரியாறு அணையின் நீர்பிடிப்புப்பகுதிகள் இது போன்று ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்