அதானி குழுமத்துக்கு சலுகைகள் ஏன்?- ஜெ. விளக்கம் அளிக்க வைகோ வலியுறுத்தல்

"மோடியை பின்பற்றி ஜெயலலிதா அரசும் அதானி குழுமத்துக்கு சலுகைகள் காட்டுவதற்காக காரணம் குறித்து உரிய விளக்கத்தை, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 4530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக, குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத்துடன் ஜூலை 4 ஆம் தேதி தமிழக மின்சாரவாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த திட்டம்தான் உலகிலேயே ஒரே இடத்தில் அமையவுள்ள மிகப்பெரிய சூரிய மின்சக்தித் திட்டம் என்று அதானி குழுமம் கூறி இருக்கிறது. அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சரம் ஒரு யூனிட், 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்திட, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் போல, மத்தியப் பிரதேச மாநில அரசும், 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியதையடுத்து, பல நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளன. ஜூலை 17 ஆம் தேதி இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டபோது, மொரீசியஸ் நாட்டின் ஸ்கை பவர் சௌத் ஈஸ்ட் ஆசியா கோல்டிங் லிமிடெட் நிறுவனம் ஒரு யூனிட் 5 ரூபாய் 5 காசுகள் என்று 25 ஆண்டுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க ஒப்புக்கொண்டது. அதானி குழுமம், 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஒப்பந்தப்புள்ளி அளித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில், சூரிய மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு, ஒரு யூனிட் 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்திட ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ள அதானி குழுமத்திடமிருந்து, தமிழக அரசு 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுகிறது.

தமிழக அரசு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்திற்கு ஒரு நாளைக்கு 7.76 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு ஆண்டுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் தமிழக மின்சார வாரியம் நட்டத்தை சந்திக்கும் நிலைமை உருவாகும்.

தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே ஏற்பட்டுள்ள 58,000 கோடி ரூபாய் நட்டத்தை ஈடு கட்ட முடியாமல், மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்கள் மீது சுமையை ஏற்றி இருக்கிறது. இந்நிலையில், அதானி குழுமத்திடம் அதிக விலை கொடுத்து சூரிய மின்சாரம் கொள்முதல் செய்ய ஜெயலலிதா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது ஏன்?

அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் மோடி அரசு உறுதுணையாக இருந்தது. 2002 இல் மோடி, குஜராத் மாநில முதல்வர் பொறுப்பை ஏற்றபோது, அதானி குழுமத்தின் வணிக மதிப்பு 3741 கோடி ரூபாய். 2014 இல் 75,659 கோடி ரூபாய் அளவுக்கு 20 மடங்கு வளர்ச்சி அடைந்தது. மோடி பிரதமராக பொறுப்புக்கு வந்த பிறகும் அதானி குழுமத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறார் என்பதற்கு மோடியின் ஆஸ்திரேலியா பயணம் உணர்த்தியது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியையும் உடன் அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானி குழுமத்திற்கு வாங்கி தருவதற்கு பிரதமர் மோடி, தாமே முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதுமட்டுமின்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் 6200 கோடி ரூபாய், அதானி குழுமத்திற்கு கடன் வழங்கவும் மோடி அரசு நிர்பந்தம் கொடுத்தது என்று செய்திகள் வந்தன.

மோடியை பின்பற்றி ஜெயலலிதா அரசும் அதானி குழுமத்திற்கு சலுகைகள் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதாதான் இதற்கு உரிய விளக்கத்தை, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்