அன்பாசிரியர் 44: மார்கரெட்- குழந்தையோடு குழந்தையாய் மாறி பாடம் கற்பிக்கும் தாயுமானவர்!

By க.சே.ரமணி பிரபா தேவி

ஒரு நல்ல ஆசிரியர் கற்பித்தலோடு நிற்பதில்லை; கண்டுபிடிக்கும் கலையையும் நிகழ்த்துகிறார்.

மத்தாப்பில் மெக்னீசியம் ஆக்ஸைடு, க்ளுக்கோஸ் பாட்டிலில் நுரையீரல், சிவப்பு இங்க் மூலம் ரத்த ஓட்டம் ஆகியவற்றைச் சொல்லிக்கொடுக்கிறார் அன்பாசிரியர் மார்கரெட். குழந்தைகள் அத்தனை ஆர்வத்துடன் அறிவியலைக் கற்றுக் கொள்கின்றனர். அறிவியல் ஆசிரியராகக் கற்பித்தலிலும் தலைமை ஆசிரியராக பள்ளி மேலாண்மையிலும் குழந்தைகளுடனான நட்புறவில் தோழியாகவும் ஒருசேர மிளிர்கிறார்.

தன்னுடைய 29 ஆண்டுகால ஆசிரியப் பயணம் குறித்து அன்பாசிரியர் தொடரில் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் மார்கரெட்.

''கல்வியால்தான் சமூகத்தை மாற்ற முடியும் என்பது சிறு வயதிலேயே எனக்கு போதிக்கப்பட்டது. ஆசிரியப் பணியே அறப்பணி என்பதை உணர்ந்தேன். படிக்கும்போதே வீட்டில் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பேன். 80 குழந்தைகள் என்னிடம் படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆசிரியப் பயிற்சியை முடித்ததும் அரசு வேலை கிடைத்தது.

1990-ல் கந்தர்வகோட்டையில் உள்ள புனித மரியம்மை நடுநிலைப்பள்ளியில் பணிக்குச் சேர்ந்தேன். காலையில் 8 மணிக்கு பள்ளிக்குச் சென்றால், வீடு திரும்ப மாலை 7 மணிக்கு மேல் ஆகிவிடும். மெல்லக் கற்போருக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பேன். அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிப்பேன்.

இப்போது மாணவர்களை சத்தம் போட்டு வாசிக்க வைப்பது குறைந்துவிட்டது. அவர்களின் மனசுக்குள் வார்த்தைகள் ஓடினாலும், வாய்விட்டு வெளியே சொல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். வாசிக்க வாசிக்கத்தான் எழுத்துப் பயிற்சியும் படிக்கும் திறனும் அதிகரிக்கும். இதைப் பள்ளியில் செயல்படுத்தியதன் மூலம் மெல்ல மெல்ல, தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. இதனால் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது.

1997-ல் முதுகுளம் தொடக்கப்பள்ளிக்கு மாறுதல் ஆனேன். எல்லாப் பாடங்களுக்கும் சார்ட்டுகள், செயல் மாதிரிகளை (Model) வைத்துக் கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். சின்ன காகிதத்தைச் சுற்றிக்கொண்டு போனால்கூடப் போதும். மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். அது நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்திப் படிக்கத் தூண்டும். இதை நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.

அன்றாடப் பொருட்களைக் கொண்டு அறிவியல்

இதனால் அறிவியல் பாடங்களை உதாரணங்களுடனேயே சொல்லிக் கொடுப்பதை வழக்கமாக்கி விட்டேன். மெக்னீசியம் ஆக்ஸைடு குறித்துச் சொல்லிக் கொடுக்க, கம்பி மத்தாப்பையும் தீப்பெட்டியையும் எடுத்துச் செல்வேன். அதைப் பற்றவைத்தால், எரிந்து முடித்த பின் வெள்ளையாகக் கொட்டும். மெக்னீசியம் காற்றில் ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து மெக்னீசியம் ஆக்ஸைடாக மாறுகிறது என்று பாடமாகப் படிப்பதைவிட இது எளிதாக மனதில் பதியும்.

அதேபோல மனித உடலுக்கு எலும்புக் கூடை வைத்துப் பாடம் நடத்துவேன். நுரையீரலின் செயல்பாட்டை விளக்க குளுக்கோஸ் ஏற்றும் குழாய்கள், இதயத்துக்கு சிவப்பு இங்கை நிரப்பிய ட்யூப்கள் என உதாரணங்கள் நீளும். எவ்வளவு நேரமென்றாலும் நின்றுகொண்டேதான் வகுப்பு எடுப்பேன். இதனால் மாணவர்களின் கவனம் சிதறாது என்று நம்புகிறேன்.

அக்காவான ஆசிரியர்

ஒருமுறை பள்ளியில் பெற்றோரை இழந்த லிட்டில் ஃப்ளவர் என்னும் சிறுமி, அண்ணனின் ஆதரவில் படித்துக் கொண்டிருந்தாள். வேலைக்குப் போகும் சகோதரனுக்குச் சமைத்து விட்டுத்தான் பள்ளிக்கு வருவாள். தாமதமாக பள்ளிக்கு வரும் அவளுக்குத் தனியாக அறிவியல் வகுப்பெடுப்பேன். படிப்பில் சுட்டியாக இருந்த அவள், என்னை அக்கா என்றுதான் கூப்பிடுவாள். இன்று அந்த லிட்டில் ஃப்ளவர் செவிலியராக வெளிநாட்டில் பணிபுரிகிறார். இன்னும் தொடர்பில் இருக்கிறார்.

ஆறாம் வகுப்பில் ஜெபாஸ்டின் என்னும் மாணவன் மெல்லக் கற்றோர் வகைமையில் இருந்தான். படிப்பில் பின்தங்கி இருந்தாலும் ஓவியம் நன்றாக வரைவான். இந்தத் துறையில் நீ வந்தால் சிறப்பாக முன்னேறலாம் என்று ஆலோசனை கொடுத்தேன். சிரமப்பட்டு +2 முடித்தவன், டிசைனிங் துறையின் சேர்ந்தான். இப்போது ஸ்விட்சர்லாந்தில் நல்ல ஊதியத்தில் பணிபுரிகிறார்'' என்று மகிழ்கிறார் அன்பாசிரியர் மார்கரெட்.

மாணவனின் திறமையைக் கண்டுபிடித்துக் கூர்தீட்டிவிட வேண்டியதுதான் ஓர் ஆசிரியரின் பணியாக இருக்கமுடியும். அதைத்தான் செய்தேன், செய்து கொண்டிருக்கிறேன் என்னும் ஆசிரியர் மார்கரெட் மீண்டும் தொடர்கிறார். ''1998-ல் பழைய கந்தர்வகோட்டையில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாறுதல் கிடைத்தது. அங்கே இருந்த தலைமை ஆசிரியர் அனைத்து விவகாரங்களிலும் முழு சுதந்திரம் கொடுத்தார். பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த முடிவெடுத்தோம். துண்டுச்சீட்டில் ஆசிரியர்களே கைப்பட, 'குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு தயவுசெய்து வரவும்' என்று பெற்றோருக்குக் குறிப்பு எழுதி அனுப்பினோம். நாங்களே எதிர்பார்க்காத கூட்டம் வந்தது. கலந்து பேசினோம். அவர்கள் கேட்டதைச் செய்து கொடுத்தோம்.

அடுத்ததாக நடைபெறாமலே இருந்த ஆண்டு விழாவை நடத்த முடிவுசெய்தோம். ஆண்டு விழாக்களில்தான் மாணவர்களின் தனித்திறமை வெளிப்படும், தன்னம்பிக்கை உயரும். எந்தத் துறை நமக்கு சரிவரும் என்ற தெளிவு கிடைக்கும். பெற்றோர்களுடன் கலந்துபேசி ஆளுக்கொரு பொறுப்பைக் கொடுத்தோம். ஒருவர் மேடை அலங்காரம், இன்னொருவர் உணவு, மற்றொருவர் ஸ்பான்சர் என்று பிரித்துக்கொண்டு, ஆர்வத்துடன் வேலை பார்த்தனர். மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டது.

எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு போட்டியிலாவது கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் அணி சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு பேசினேன். முந்திரி தொழிற்சாலை அதிபர், குழந்தைகளுக்கு 120 நாற்காலிகளை வாங்கிக்கொடுத்தார். பெற்றோர்களே டம்ளர், பிளேட், தலைவர்கள் புகைப்படங்கள், மின் விசிறி, தண்ணீர் ட்ரம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வாங்கித் தந்தனர். 2001-ல் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள பொக்கன் விடுதி என்ற ஊருக்குப் பணி மாறுதல் கிடைத்தது.

ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆடைகள்

நெகிழ்ந்து நின்ற தருணம்

அப்போது பழைய பள்ளியில் இருந்து ஆண்டு விழாவில் பேச என்னை அழைத்திருந்தனர். பஸ் தாமதத்தால் அங்கு செல்ல நேரமாகிவிட்டது. அப்போது ஆண்டுவிழா நடந்துகொண்டிருந்தது. என்னைப் பார்த்த மாணவர்கள் சிலர், டீச்சர் என்று ஓடிவந்து கட்டியணைத்துக்கொண்டனர். எல்லோரும் பிரமிப்புடன் எதுவும் பேசாமல் நின்றனர். கண்ணீர் உகுத்து, செய்வதறியாமல் நெகிழ்ந்து நின்ற தருணம் அது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மாணவர்கள் என்னிடம் தயங்காமல் பேசுவர். பொறுமையாக சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோரிடம் பேசி அதைத் தீர்த்துவைப்பேன். தேவைப்படும் பட்சத்தில், அவர்களின் வீட்டுக்கே நேரில் சென்று பிரச்சினையை முடித்துள்ளோம். இதனால் பள்ளியில் எந்தப் பிரச்சினை என்றாலும் ஆசிரியர்கள் என்னிடம் வந்து சொல்வர்.

2012-ல் வாட்டாத்தி கோட்டை தொடக்கப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. குறைந்துவந்த மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவெடுத்தோம். தினக் கூலிகளின் குழந்தைகள்தான் பெரும்பாலும் இங்கே படிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணீர்க் கதை இருக்கும். பெற்றோர் சண்டையிட்டு, பிள்ளையை எங்காவது அழைத்துக்கொண்டு சென்றுவிடுவர். இதனால் இடை நிற்றல் அதிகமாக இருக்கும்.

குறைந்த இடைநிற்றல்

அப்போதெல்லாம் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே போய்ப் பேசி, மீண்டும் பள்ளிக்கு அழைத்துவருவேன். இந்த ஆண்டும் 2 மாணவர்களின் இடைநிற்றல் தடுக்கப்பட்டது. இப்போது 1 - 5 வரை 105 மாணவர்கள் படிக்கின்றனர். அதேபோல மாணவர்களின் அப்பா குடிகாரர் என்றால் வீட்டுக்கே சென்று பேசுவேன். குடிப்பழக்கத்தின் தீங்கை குழந்தை முன்னால் எடுத்துச்சொல்லும்போது ஏராளமான தந்தைகள் மனம் மாறினர்.

வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கை

பள்ளியைச் சுற்றிலும் ஏராளமான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அவர்களுடன் போட்டி போட்டுத்தான் பள்ளியை நடத்துகிறோம். கூட்டல், கழித்தல் உள்ளிட்ட கணக்குகளை சீட்டுகள், புளியங்கொட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு கற்பிக்கிறோம். அதேபோல உயிரியல் வகுப்புக்கு முந்தைய நாளே விதையைத் தூவி முளைக்க வைத்துப் பாடம் நடத்துவோம். மெல்லக் கற்போருக்கு அட்டைகளை வெட்டி, அவற்றில் எழுத்துகளை எழுதி, ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும். அதில் பெற்றோர் சொல்லும் ஆலோசனைகளையும் தேவைகளையும் உடனே நிறைவேற்றுவோம். அதேபோல ஒவ்வோர் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 25 மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குப் புத்தாடை எடுத்துக் கொடுப்போம். பொதுமக்களும் ஆசிரியர்களும் அளிக்கும் நிதி போக மீதத்தொகையை நானே அளித்துவிடுவேன்.

இயற்கை மீதான நேசம்

கஜா புயலின்போது எங்கள் ஊரில் ஏராளமான மரங்கள் அழிந்தன. அப்போது தொண்டு நிறுவனங்களிடம் பேசி, 100 மாமரங்களை வாங்கி மாணவர்களிடம் கொடுத்தோம். இதை நன்றாக வளர்ப்பவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தோம். இப்போது அம்மரங்கள் அனைத்தும் தழைத்து வளர்ந்திருக்கின்றன.

அரசு கொடுப்பதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு ஷூ, பெல்ட், டை, சீருடை ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறோம். மெல்லக் கற்போருக்கென தனியாக ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கான மாத ஊதியம் ரூ.2,000. அதை நானே தருகிறேன். ஊர் மக்களின் உதவியோடு, பள்ளிக்கு முன்னால் திருவள்ளுவர் சிலை அமைத்திருக்கிறோம். ப்ரஜெக்டர் ஒன்றும் பள்ளிக்கு வாங்கப்பட்டிருக்கிறது.

தேவைகள் என்னென்ன?

பள்ளியின் முன்புறம் மட்டுமே சுற்றுச்சுவர் உள்ளது. சுற்றிலும் சுவர் தேவைப்படுகிறது. பல்வேறு வழிகளில் முயற்சித்தும் போதுமான நிதி கிடைக்கவில்லை. அதேபோல தொடக்கப் பள்ளி என்பதால் விளையாட்டு மைதானம் அவசியத் தேவை. அதுவும் இங்கே இல்லை. இவை இரண்டும் இப்போதைய முக்கியத் தேவையாக உள்ளது.

என் மடி மீது குழந்தைகள் அமர்ந்து, உரிமையாகப் பாடம் கற்கும் தருணங்களுக்குக் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. என்னுடைய அடையாளமே மாணவர்கள்தான். என் வாழ்க்கை அவர்களுடனேயே முடிந்துவிட வேண்டும் என்பதுதான் எனது ஆசை'' என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் மார்கரெட்.

அன்பாசிரியரைத் தொடர்பு கொள்ள: மார்கரெட்- 9047919611

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 43: கிறிஸ்து ஞான வள்ளுவன்- ஊர் மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான இயற்கை நேசர்

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்