150 ஏக்கர் குளம், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், துரிதமாக நடக்கும் தூர்வாரல்: ஆச்சரியப்படுத்தும் பட்டுக்கோட்டை கிராமம்! 

By க.சே.ரமணி பிரபா தேவி

நீ உலகில் பார்க்க விரும்பும் மாற்றம், முதலில் உன்னிடம் நிகழ வேண்டும் - காந்தி

பட்டுக்கோட்டையில் உள்ள ஒட்டங்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து அங்குள்ள 150 ஏக்கர் கொண்ட பெரியகுளம் குளத்தைத் தாங்களாகவே தூர்வாரி வருகின்றனர்.

அரசிடம் இருந்து அனுமதியை மட்டும் பெற்ற தன்னார்வலர்கள், மக்களின் உதவியுடன் குளத்தைச் சீரமைத்து வருகின்றனர். இந்தத் திட்டத்தைத் தொடங்கக் காரணமாக இருந்தவரும் திருநெல்வேலி சார் ஆட்சியருமான சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ், தங்களின் செயல்பாடுகள் குறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்.

''நம்முடைய கிராமத்துக்கு நாம்தான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டர் அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக் குழுவைத் தொடங்கினோம். இதில் 10 ஒருங்கிணைப்பாளர்கள், 50 உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளனர். குழுவின் மூலம் நீர் மேலாண்மைத் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்து, அண்மையில் வலசக்காட்டில் இருந்து ஒட்டங்காடு வரை 5 கி.மீ. பேரணி சென்றோம். அப்போது பெரியகுளம் ஏரியைத் தூர்வார முடிவு செய்தோம்.

9 கிராமங்கள் சேர்ந்து இந்தப் பணியை முன்னெடுத்திருக்கிறோம். ஊர்த் தலைவர்கள், முக்கியமான ஆட்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் ஆகியோருடன் இதுகுறித்துக் கலந்து பேசி, குளத்தைத் தூர்வார ஆரம்பித்தோம்'' என்கிறார் சிவகுரு .

குளத்தில் எந்த மாதிரியான சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது? என்று கேட்டதற்கு, ''சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது பெரியகுளம். 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்துக்கு இதுவே பாசன வசதி அளிக்கிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெரியகுளத்தில் சீரமைப்புப் பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

ஆரம்பத்தில் கரைக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான காட்டாமணக்குச் செடிகள் வளர்ந்திருந்தன. இருக்கும் நீரையெல்லாம் அதுவே உறிஞ்சிக் கொண்டது. இதனால் நீரின் கொள்ளளவு குறைந்துகொண்டே சென்றது. அதேபோல ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளக்கரையின் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டியிருந்தது. நீர் வடிகாலைச் சீரமைப்பதும் முக்கியத் தேவையாக இருந்தது.

ஊர் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருமே குளத்தை மீட்டெடுக்க, ஆர்வத்துடன் வேலை செய்கின்றனர். உடல் உழைப்பைத் தருபவர்களோடு பொருளாக அளிப்பவர்களும் அதிகம். இன்னும் சிலர் தங்களின் சொந்த டிராக்டர், புல்டோசர்களைக் கொண்டுவந்து இலவசமாக வேலை செய்து கொடுப்பார்கள். வேறு சிலர் சாப்பாடு போடுவார்கள்.

முந்தைய நாளே திட்டமிடல்
வேலை செய்யும் நபர்களில் யாருக்காவது சொந்த வேலை இருக்கும்போது, முந்தைய நாளே கூட்டத்தில் சொல்லிவிடுவோம். இதன்மூலம் அந்த வேலையை இன்னொரு ஆள் பார்த்துக்கொள்வார். நிதியளித்து விட்டு, நேரில் வர முடியாதவர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனைத்துத் தகவல்களையும் அனுப்பி விடுவோம். இதற்கெனவே தொழில்நுட்பக் குழுவினர் 3 பேர் உள்ளனர். பெண்கள் அணி மட்டும் இதுவரை ரூ.45 ஆயிரம் அளித்துள்ளனர். பண விவகாரத்தில் சரியாக இருப்போம். முந்தைய நாள் இரவே அடுத்த நாளுக்கான அனைத்து வேலைகளையும் திட்டமிட்டுவிடுவோம். இதுவரை கிட்டத்தட்ட 50 சதவீதம் தூர்வாரி முடித்து விட்டோம்'' என்கிறார் சிவகுரு.

சாதி, அரசியல், பொருளாதார ரீதியாகப் பிரச்சினைகள் வந்திருக்குமே, அதை எப்படிச் சமாளித்தீர்கள் என்று கேட்டதற்கு, ''ஆம். எந்தவொரு செயலை ஆரம்பிக்கும்போதும், ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும். அது எங்களுக்கும் ஏற்பட்டது. ஆனால், பேசியே எல்லாவற்றையும் சமாளித்துவிடுவேன். பொறுமையாக, தெளிவாக, உறுதியாகப் பேசும்போது எதிர்த்தரப்பினர் அதைப் புரிந்து கொள்வர். ஐஏஎஸ் என்ற தகுதி கூடுதல் பலத்தை, நம்பிக்கையைக் கொடுத்தது.

குழுவாகச் சேர்ந்து வேலை செய்யும்போது, எங்களுக்குள்ளேயே சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். குறிப்பாக நாம் சொன்ன தகவல்கள் இன்னொருவருக்குச் சரியாகச் சென்றடையாமல் இருக்கும். அதை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். அதுதவிர டிராக்டர், ஜேசிபி என இயந்திரங்கள் வருவதில் தாமதம், பிரச்சினை ஏற்படும். அதையும் சமாளிக்க வேண்டும்.

நாங்கள் குளம் தூர் வாருவதைப் பள்ளி மாணவர்களும் வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களின் பாக்கெட் மணியை குளத்துக்காக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகம் என அனைத்துத் தரப்பினரும் குளத்தை மீட்டெடுக்க உறுதுணையாக இருக்கின்றனர்.

மற்ற கிராமங்களுக்கும் பரவ வேண்டும்

எங்களைப் போல மற்ற கிராமத்து இளைஞர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் நீங்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மாற்றத்தை முன்னெடுக்க வேண்டுமெனில் தனியாகச் செல்லாதீர்கள். குறை சொல்வார்கள்; குறி வைப்பார்கள். கூட்டமாகச் சென்று பேசுங்கள். கவனம் கிடைக்கும்; புரிந்து கொள்வார்கள்.

நாம் பிறந்த இடத்துக்குத் தேவையானதை நாம்தான் செய்ய வேண்டும். நீங்கள் தொடங்கினால் போதும்; மற்றவர்கள் அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்'' என்கிறார் சிவகுரு ஐஏஎஸ்.

மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்