தருமபுரி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தொங்கும் பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 11-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பின்னர், அன்று முற்பகலில் விநாடிக்கு 1.20 லட்சமாகவும், பகலில் 1.40 லட்சமாகவும், மாலை 4 மணியளவில் 1.60 லட்சமாகவும், இரவு 7 மணியளவில் 1.75 லட்சம் கன அடியாகவும் வேகமாக நீர்வரத்து அளவு உயர்ந்தது.
இன்று (12-ம் தேதி) காலை இந்த அளவில் மேலும் உயர்வு ஏற்பட்டு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி என்ற நிலையில் தண்ணீர் வந்தது. முற்பகலில் அது 2.40 லட்சம் கனஅடி என்ற நிலைக்கு அதிகரித்துள்ளது. மிகையான இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் இருபுறங்களில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாதுகாப்பு வேலி புரட்டிப் போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளையும் வெள்ளம் முறித்துப் போட்டுள்ளது.
மூழ்கிய தொங்கும் பாலம்
தொங்கும் பாலத்துக்குச் செல்லும் வழியில் இருந்த கதவுகள், இரும்புத் தடுப்புகள் போன்றவையும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதுதவிர, வெள்ளப்பெருக்கின் அளவு படிப்படியாக அதிகரிப்பதால் தண்ணீர் தொங்கும் பாலத்தின் நடைமேடையை மூழ்கடித்துச் செல்லத் தொடங்கியுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
தொங்கும் பாலத்தின் மீது ஏறும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஒகேனக்கல்லைப் பொறுத்தவரை அதை அசாதாரண சூழலாக அரசு நிர்வாகம் கருதுவது வழக்கம். இருப்பினும் கர்நாடகாவின் நீர்த்திறப்பு நிலவரத்துக்கு ஏற்ப தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் மற்றும் காவிரிக்கரையோர பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள், பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
அஞ்செட்டி சாலை
ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் ஒகேனக்கல் அடுத்த நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தால் சாலை மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசியப் போக்குவரத்துகள் மட்டுமே மிகுந்த பாதுகாப்புடன் இந்தச் சாலையில் அனுமதிக்கப்படுகிறது.
குறைக்கப்பட்ட நீர்திறப்பு
இதற்கிடையில், இன்று காலை முதல் கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நேற்று விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை இன்னும் அடையவில்லை. இன்று மாலைக்குள் இந்த நீர்வரத்து இந்த அளவை எட்டியபின் படிப்படியாகச் சரியத் தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தொடரும் தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக பரிசல் இயக்கவும், அருவி, ஆறு உள்ளிட்ட இடங்களில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை ஒகேனக்கல்லில் தொடர்ந்து அமலில் உள்ளது. வெள்ள நிலவரம் இயல்பாகும் வரை சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago