வேலூர் மக்களவைத் தேர்தலில் கடுமையான போட்டியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது. தாங்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தும் கேட்கவில்லை அதிமுகவின் தோல்விக்கு தாங்களும் ஒரு காரணம் என்று அதன் நிர்வாகி பேட்டி அளித்தார்.
மக்களவைத் தேர்தலில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதியான வேலூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஆக.5 அன்று நடந்தது. திமுக, அதிமுகவில் மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 7 ரவுண்டு வரை முன்னணியில் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பின்னர் பின் தங்கினார்.
பின்னர் இழுபறி நீடித்து வந்த நிலையில் நீண்ட போரட்டத்திற்குப்பின் 8141 என்கிற சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றார். நாம் தமிழர் கட்சி 26995 வாக்குகள் பெற்றது, நோட்டாவுக்கு 9417 வாக்குகள் கிடைத்தது. இதில் சுவாரஸ்யமான விஷயமாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது.
இதுகுறித்து மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் பேசியபோது அவர் கூறியது:
இந்தத்தேர்தலில் நீங்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்?
பாட்டில் சின்னத்தில்தான்
அவர்களே ஒதுக்கினார்களா?
இல்லை, கேட்டு வாங்கினோம்.
என்ன கோரிக்கை வைத்து போட்டியிட்டீர்கள்?
இது மக்களவைத்தேர்தல், அதனால் மதுபான ஆலைகள் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது, கடல் நீரிலிருந்துத்தான் மதுபானம் தயாரிக்கணும். இந்த கோரிக்கைக்காக யாரும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.
பார்களில் போலி மது பானம் அதிகமாக இருக்கிறது, பாட்டிலுக்குமேல் எம்.ஆர்.பி விலையைவிட அதிகம் விற்கிறார்கள். இதையெல்லாம் தடுக்கவேண்டும் என்றால் தமிழ்நாடு அரசால் எதுவும் செய்ய முடியாது.
இதை உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் மதுபான வகைகளை கொண்டுவந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு பிரச்சினையை கொண்டுபோக முடியும்.
இந்தச் சட்டத்தில் இந்தியாவில் உள்ள மக்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் அதில்பாதிப்பு ஏற்பட்டால் புகார் அளிக்கலாம் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் சொல்லணும்.
தற்போது அந்தச் சட்டத்தில் மது இல்லையா?
இல்லை, அதைச் சேர்க்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முயற்சித்தபோது மதுபான அதிபர்கள் வழக்குப்போட்டு தடுத்துவிட்டனர். ஆகவே அதை உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்திற்குள் மதுபானங்களை கொண்டுவரவேண்டும்.
அதனால் என்ன லாபம்?
போலி மதுபானங்களுக்கு எதிராக வழக்கு போடலாம், ஆல்கஹால் அளவு மாற்றினால் சிக்கிக் கொள்வார்கள், அதிக விலைக்கு விற்க முடியாது இப்படி பல விஷயங்கள் உண்டு.
அடுத்த கோரிக்கை என்ன?
மது பான ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது மத்திய அரசு. ஆகவே மதுபோதை மறுவாழ்வு மையங்களை மாநில அரசுடன் இணைந்து ஆரம்பிக்கவேண்டும்.
வேறு முக்கிய கோரிக்கை தேர்தலில் வைத்தீர்களா?
ஆமாம், மதுவிலக்கு அமலில் இல்லாத மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகளை அரசு அமைக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பிரச்சாரம் செய்தேன்.
இது எதிர்மறை கோரிக்கையாக உள்ளதே?
ஆமாம், மதுகுடிப்பதால் ஏற்படும் சமூக பிரச்சினைகளில், குற்றச்செயல்களில் முக்கியமானது பாலியல் பலாத்காரம், சின்னஞ்சிறு குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கும் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கிறது. இதற்கு மதுபோதை முக்கிய காரணம். ஆகவேதான் இந்தப்பிரச்சினைக்கு மாற்றாக சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க கோரிக்கை வைக்கிறோம்.
மேற்குவங்கம், டெல்லி, மும்பையில் இதுபோன்று உள்ளது. மதுவிற்பனை செய்யும் மாநிலங்களில் இந்த கோரிக்கையை பரிசீலிக்க கோரிக்கை வைத்தேன், மதுவால்தான் பாலியல் வன்கொடுமைகளும், விபத்துகளும் அதிகம் நடக்கிறது. மதுவிலக்கு அணைக்கப்படும்வரை சிகப்பு விளக்கை கொண்டுவர நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைப்பேன் என்று பிரச்சாரம் செய்தேன்.
மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆதரவாக கோரிக்கை இல்லையா?
மதுபானம் அருந்துகிறவர் வாழ்நாள் முழுதும் வீட்டுக்கும், சுற்றத்தாருக்கும் தொல்லை கொடுக்கிறார், வருமானத்தை அழிக்கிறார். வயோதிகத்தில் குடும்பத்துக்கு பாரமாகிவிடுகிறார். தமிழ்நாட்டில் 61.4 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். அதில் 8 சதவீதத்தினர் பெண்கள்.
ஆகவே இதுபோன்று மதுவால் வரும் வருமானத்தில் அரசு, அதே மதுவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உதவி நிதி வழங்கவேண்டும், மதுவால் விதவையான பெண்களின் மறுவாழ்வுக்கு வாழ்வுரிமைத்தொகை மாதம் 5000 வாங்கித்தருவேன் என்று பிரச்சாரத்தில் கோரிக்கை வைத்திருந்தேன்.
பிரச்சாரத்தில் அதற்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததா?
நல்ல வரவேற்பு இருந்தது. வேலூர் தொகுதியில் எனக்கு வாக்கு கிடையாது. என்னை யாருக்கும் தெரியாது, ஆனாலும் வரவேற்பு அளித்துள்ளார்கள். அதற்கு 2530 வாக்குகள் கிடைத்ததே சாட்சி. இதற்குமுன் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டேன் அங்கு கிடைத்தது, 88 வாக்குகள் மட்டுமே.
பிரச்சாரம் எப்படி செய்தீர்கள்?
தனி மனிதனாக பிரச்சாரம் செய்தேன், நல்ல வரவேற்பு இருந்தது. அதைத்தான் வாக்குகளாக பார்த்தீர்கள். ஏ.சி.சண்முகம் தோல்விக்கு நாங்களும் ஒரு காரணமாக இருந்தோம் காரணம் 8 ஆயிரம் வாக்குகள்தானே வித்தியாசம். நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று சொன்னபோது அவர்கள் அலட்சியம் செய்தார்கள்.
பிரச்சாரத்தில் எங்காவது உங்களுக்கு பிரச்சினை வந்ததா?
நாங்கள்தான் தமிழ்நாடு முழுதும் குடிமகன்கள் இருக்கிறோமே எப்படி பிரச்சினை வரும், நாங்களே ஏழரை எங்ககிட்ட எப்படி இன்னொரு ஏழரை வரும்?
உள்ளாட்சித்தேர்தலிலும் உங்கள் சங்க ஆட்கள் போட்டியிடுவீர்களா?
அதற்குமுன் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றிப்பயணம் தொடரும்.
முடிவாக என்ன சொல்கிறீர்கள்?
கட்சிக்கொடி இல்லாத கிராமம் இருக்கும், கட்டிங் போடாத கிராமங்கள் எங்கும் இல்லை.
நாங்கள் கோப்பையில் கை வைத்தால்தான் யாரும் கோட்டையில் கொடியேற்ற முடியும்.
இனி குவார்ட்டர், பிரியாணிக்கு ஏமாறமாட்டோம், கோட்டையில் கொடியேற்றாமல் விடமாட்டோம். இதுவே எங்கள் தாரக மந்திரம்.
இவ்வாறு செல்லப்பண்டியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago