மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன, அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம், சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது:

''தென் மேற்குப் பருவ மழை வலுவடைந்துள்ளதால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன, அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ. மழையும் கீழ் பவானியில் 30 செ.மீ. மழையும் பெய்தது. கூடலூரில் 26 செ.மீ., தேவலாவில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது. அவலாஞ்சியில் 82 செ.மீ. மழைப்பொழிவு குறித்து சந்தேகம் உள்ளது. எனினும் முன்னெப்போதும் பெய்யாத அளவுக்கு மழை பெய்தது குறித்து ஆய்வு செய்யப்படும்.

மத்திய மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். அந்தமான் கடல் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்குச் செல்ல வேண்டாம்''.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE