மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பா?- அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

By செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை அவர்கள் செல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்ல புதிய பேருந்து இணைப்பு சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மெட்ரோ ரயில் இணைப்பு கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

முதல் முயற்சியாக நந்தனம் ரயில் நிலையத்தில் 12 கார்கள், அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ரயில் பயணிகளுக்கென பிரத்யேகச் செயலியை அறிமுகம் செய்தார். 

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ''மெட்ரோ ரயில் கட்டணம் சரியான அளவிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் விலையைக் குறைக்க வாய்ப்பில்லை. இரண்டாம் கட்ட செயல்திட்டப் பணிகள் அனைத்தும் தயாராக உள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இதுகுறித்துப் பேசியுள்ளோம். 

முதல்வரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அடுத்தகட்டப் பணிகள் விரைவில் அடுத்த 6 மாதங்களுக்குள் தொடங்கப்படும். சென்னையில் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜர் வசதிகள் 26 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்துமிடங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE