ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு வாசன் வேண்டுகோள்

ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பலில் பணியாற்றி வருகின்ற இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க இந்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பலில், சென்னையைச் சேர்ந்த ஆதித்யா உட்பட இந்தியர்கள் 18 பேர் சிக்கியுள்ளார்கள். ஈரான் கப்பலில் சிக்கித் தவிக்கின்ற இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு தாய் நாட்டிற்குக் கொண்டுவர வேண்டியது மத்திய அரசின் கடமை.

சென்னையைச் சேர்ந்த ஆதித்யா என்பவரும் கப்பலில் சிக்கிக்கொண்டதால் அவரின் பெற்றோர் தங்களது பிள்ளையை விரைவில் மீட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் கப்பலில் சிக்கிக்கொண்டவர்களின் பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளைப் பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

மத்திய அரசும் கப்பலில் பயணம் செய்த இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருப்பினும் ஈரான் கப்பலில் சென்ற இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகள் தொடர்ந்து கிடைப்பதற்கும், காலம் தாழ்த்தாமல் அவர்களை மீட்பதற்கும் மத்திய அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.

இந்திய அரசு, வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பணிப் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதற்காக இந்திய அரசு அந்நாடுகளுடன் தொடர்பில் இருந்து இந்தியர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE