இந்தியக் குடியுரிமை பிரச்சினை: அமெரிக்காவில் பிறந்த தமிழ் மாணவிக்கு நிபந்தனையுடன் மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியக் குடியுரிமை சான்றை 12 வாரங்களில்  தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்து, ஏழு மாதக் குழந்தையாக 2001-ல் இந்தியா வந்த அபிராமி அன்பழகன், பள்ளிப் படிப்பை தமிழகத்தில் முடித்துள்ளார். 18 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவர், இந்தியக் குடியுரிமை கோரி கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

பள்ளி இறுதி வகுப்பை முடித்த அவர், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தார். ஜூலை 31-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில்,  அபிராமி அன்பழகனுக்கு சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் இந்திய குடியுரிமைச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்க்கையும் வழங்கப்பட்டது. 

குடியுரிமைச் சான்று கிடைக்க தாமதம் ஆகும் என்பதால், குடியுரிமைச் சான்றை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரியும், தன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் அபிராமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் குடியுரிமைச் சான்றை சமர்ப்பிக்காவிட்டால், மனுதாரர் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும், அதன் பின் இடம் காலியாக வைக்கப்படுவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாணவர் சேர்க்கையை விட்டுச் செல்வோர் 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது எனவும் அரசுத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதையடுத்து, 12 வாரங்களில் குடியுரிமைச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், கல்லூரியில் சேர்க்க உத்தரவிட்ட  நீதிபதி, அதற்குப் பிறகும் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாவிட்டால் 10 லட்சம் ரூபாயை செலுத்தி சான்றிதழ்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE