அன்பாசிரியர் 43: கிறிஸ்து ஞான வள்ளுவன்- ஊர் மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான இயற்கை நேசர்

By க.சே.ரமணி பிரபா தேவி

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

ஓர் அன்பான ஆசிரியரின் தாக்கத்தை யாராலும் அழிக்க முடியாது!

பனை ஓலையில் காற்றாடிகளும் கடிகாரங்களும் அழகுற மிளிர்கின்றன. பறவை மேடையில் குருவிகள் சந்தோஷக் கீச்சிடுகின்றன. பள்ளியைச் சுற்றியுள்ள மரங்கள் சுகந்தமான காற்றை அள்ளித் தருகின்றன. குளிர்ச்சியான நிழலில் அமர்ந்து உணவுக்குப் பிறகான பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் ராமநாதபுரத்தில் உள்ள நரசிங்கக்கூட்டம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்.

தன்னுடைய ஆசிரியப் பயணம் குறித்தும் கடந்து வந்த பாதை குறித்தும் எளிமையாகப் பேசுகிறார் அப்பள்ளியின் தலைமையாசிரியரும் அன்பாசிரியருமான கிறிஸ்து ஞான வள்ளுவன். ''அப்பா ஆசிரியராக இருந்து பெயர் வாங்கியவர். ஆசிரியரின் மகன் என்பதால் சிறுவனாக இருக்கும்போதே என்னை, 'வாத்தியார்' என்று அழைப்பர்.

எனக்கும் ஆசிரியப் பணி மீது ஆர்வம் பிறந்தது. பி.எட்.முடித்தேன். போலியோ காரணமாக ஒரு காலில் ஊனம் ஏற்பட்டிருந்தது. இதனால் மாற்றுத் திறனாளிக்கான ஒதுக்கீட்டில் காஞ்சிபுரம், கூனங்கரணை தொடக்கப்பள்ளியில் வேலை கிடைத்தது. நகரத்தில் இருந்து தள்ளி, உள்ளே தொலைவில் இருந்த பள்ளிக்குச் செல்லவே மாலையாகி விட்டது. தினந்தோறும் 7 கி.மீ. சைக்கிளில் பள்ளிக்குச் செல்வேன்.

சைக்கிள் ஓட்ட சிரமமாக இருந்தால் விரைவிலேயே பைக் வாங்கினேன். இதனால் சீக்கிரம் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை அறிமுகப்படுத்தியதற்கு நல்ல பலன் இருந்தது. முதல்முறையாக மாணவர்களை வெளியில் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றோம். இதனால் ஊர் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினர். 

தங்க மோதிர வழியனுப்பல்

மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். அங்கு படித்த மாணவர்கள் இன்றும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மாற்றலாகி வரும்போது ஊர் மக்கள் தங்க மோதிரம் அணிவித்து வழியனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம், எக்கக்குடி நடுநிலைப்பள்ளிக்குச் சென்றேன். அது முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர். அந்தப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் ஆசிரியர்களே பணியாற்றவில்லை. நீங்கள் வந்தால் பிரச்சினைதான் என்று பயமுறுத்தினர். ஆனால், எங்கள் செயல்பாடுகளைப் பார்த்த பொதுமக்கள் அன்பு செலுத்த ஆரம்பித்தனர்.

அப்போது பருவமடைந்துவிட்டால் முஸ்லிம் மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். நபிகள் நாயகத்தின் மனைவி கூட கடை நடத்தியவர்தான் என்று பேசிப்பேசி, அவர்களின் மனதை மாற்றினேன். முதல்முறையாக பீர்ஜஹான் என்னும் மாணவி படிக்க வந்தார். அவரைத் தொடர்ந்து பெரும்பாலான மாணவிகள் வயதுவந்த பிறகும் படிப்பைத் தொடர்ந்தனர். 

அடுத்ததாக கூடாங்கோட்டை தொடக்கப் பள்ளிக்கு மாறுதல் கிடைத்தது. அங்கே கற்பித்தல் உபகரணங்களைச் சொந்தமாகவே உருவாக்கி மாணவர்களுக்குக் கற்பித்தேன். ஆடல், பாடல்களுடன் வகுப்புகள் நடந்தன. நானே பாடல்களை எழுதிக் கற்பிப்பேன். மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தினோம். நீராதாரம் எதுவும் பள்ளிக்கு அருகில் இல்லை என்பதால், வீட்டில் இருந்தே மாணவர்கள் 5 லிட்டர் பாட்டில்களில் தண்ணீர் எடுத்துவருவர். 

தண்ணீர் ஊற்றினால் பரிசு

ஒவ்வொரு மரத்துக்கும் ஒருவர் பொறுப்பு. தண்ணீர் ஊற்றும் மாணவர்களுக்கு மாதாமாதம் பரிசுகள் வழங்கப்படும். அதேபோல கோடை விடுமுறையில் தண்ணீர் ஊற்றுவோருக்கு, பேக், நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் சொந்த செலவில் வாங்கிக் கொடுப்பேன்.

6-ம் வகுப்பு மாணவர்களை, வெளியூர்ப் பள்ளியில் சேர்த்துவிடுவேன். படித்து 10,12-ம் வகுப்புகளில் முதலிடம், இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவேன். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. ஒருமுறை மாறுதல் கிடைத்தும் மக்கள் போகவிடவில்லை. 10 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினேன்.

கடைசியாக நரசிங்கக்கூட்டம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்ததால் பொதுமக்கள் போகவிட்டனர்'' என்கிறார் அன்பாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன்.

தலைமை ஆசிரியராக இருப்பதால், கற்பித்தலுக்கு நேரம் இருக்கிறதா? என்று கேட்டபோது, ''2016-ல் இங்கு வந்தேன். அப்போது 7 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது 22 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக இருப்பதால் நினைத்ததை எல்லாம் தடையில்லாமல் செய்யமுடிகிறது.

பனை ஓலை பொருட்கள்

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பனை ஓலையில் கடிகாரம், விசிறி, காற்றாடிகள், பாய், பெட்டி, முறம் உள்ளிட்ட பொருட்களைச் செய்து காண்பிப்போம். அட்டையில் எழுதுவதைப் போல எண்கள், எழுத்துகள், குறள், கோடிட்ட இடங்களை நிரப்புதல் ஆகியவற்றை சிடி மார்க்கரில் எழுதி மாணவர்களிடம் கொடுப்பேன்.

இதற்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதேபோல நேர்மை அங்காடியும் பள்ளியில் உள்ளது. இதற்கு யாரும் காவல் இருக்கமாட்டார்கள். கடலை மிட்டாயோ, எழுதுகோலோ மாணவர்களே எடுத்துக்கொண்டு, காசை பாக்ஸில் போட்டுவிட வேண்டும்.

மாதம் ஒரு பழம்

அதேபோல மாதாமாதம் முதல் புதன்கிழமை மாணவர்களுக்குப் பழம் வழங்கப்படுகிறது. ஆப்பிள், மாதுளை, கொய்யா என ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பழங்களைக் கொடுக்கிறோம். மதிய உணவுக்குப் பிறகு பழத்தைக் கொடுத்து, அதன் பயன்கள் குறித்தும் விளக்குகிறோம். அதற்கான செலவை முதல் 3 மாதங்கள் நான் கொடுத்துவிட்டேன். இப்போது நண்பர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைபெறுகிறது.

பறவை மேடையும் மைக் செட்டும்

சுமார் 3.5 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்ட இரும்பு மேடையைப் பள்ளி மைதானத்தில் வைத்துள்ளோம். மீதமாகும் உணவுகளை மாணவர்கள் இதில் போட்டுவிடுவர். தண்ணீரும் வைப்பர். பறவை மேடையில் அமர்ந்து குருவிகள் இளைப்பாறும். அதேபோல ஒவ்வொரு வெள்ளியும் மாலை 3 மணிக்கு மைக்செட்டில் மாணவர்கள் பேசலாம்.

கதையோ, கவிதையோ, பாட்டோ அது குழந்தைகளின் தேர்வு. சரியா, தவறோ என்ன வேண்டுமானாலும் குழந்தைகள் பேசலாம், இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். 

கல்விச்சீர்

ஊர்ப் பொதுமக்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் கல்விச்சீர் விழாவை நடத்தினோம். இதில் பள்ளிக்குத் தேவையான பொருட்களை ஏற்கெனவே பட்டியலிட்டு, ஜெராக்ஸ் எடுத்து மக்களிடம் கொடுத்துவிட்டேன். பீரோ, தண்ணீர் ட்ரம், எலெக்ட்ரானிக் மணி, தட்டு, டம்ளர்கள், ஏ4 ஷீட்டுகள் என எக்கச்சக்கமான பொருட்கள் கிடைத்தன.

100 நாள் வேலைக்குப் போகும் கிராம மக்கள், தங்கள் தகுதிக்கு மீறி, மகிழ்ச்சியுடன் கல்விச்சீர் செய்தனர். என்னுடைய பங்காக கம்ப்யூட்டருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கினேன். அதேபோல லாப்டாப் ஒன்றையும் 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தேன்.  ஆண்டுதோறும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் 20 கி.மீ. சுற்றளவில் பிக்னிக் அழைத்துச் செல்கிறேன்.

அதேபோல 3- 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாள் சுற்றுலா உண்டு. இதற்கான போக்குவரத்துக் கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொள்கிறோம். உணவு மற்றும் பிற செலவுகளை நானே பார்த்துக்கொள்வேன். நான் படித்த பள்ளிக்கு எதையாவது செய்ய ஆசைப்பட்டேன். 1 - 5 வரை படித்த பள்ளியில், 10, 12-ம் வகுப்பில் முதல், இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். 6 -8 வரை படித்த பள்ளியில், ஆண்டுவிழாவுக்கு ரூ.5,000 வழங்குகிறேன். 

பெற்றோர் நினைவில்

தாய், தந்தையின் நினைவாக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு சீருடையும் ஒரு ட்ராக் சூட்டும் வாங்கித் தருகிறேன். அனைத்து மாணவர்களுக்கும் வாங்க சுமார் ரூ.20 ஆயிரம் ஆகும். தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரமும் பொறியியல் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கும் பணத்தையும் கொடுத்துவிடுகிறேன். கல்வி சார்ந்த செலவுகளைச் செய்யத் தயங்குவதில்லை. 

நண்பர்களிடம் வாங்கிக் கொடுக்கலாமே என்று எல்லோருமே சொல்வார்கள். அவர்கள் கேட்டால் தருவார்கள்தான். ஆனால் கேட்கத் தயக்கமாக இருப்பதால் கேட்பதில்லை. அவர்களாகத் தந்தால் மட்டும் வாங்கிக் கொள்வேன். ஆசிரியப் பணியில் ஓடிக்கொண்டே இருந்ததால் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை.

கூராங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தர்ம முனீஸ்வரன் கோயிலில் வைத்து ஊர் மக்கள் தங்க மோதிரம் அணிவித்ததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. பள்ளியின் தேவைகளை ஓரளவுக்கு நிறைவேற்றிவிட்டோம். கணினி, மைக் செட், ஸ்பீக்கர்கள் ஆகிய வசதிகள் உள்ளன. ப்ரொஜெக்டர் மட்டும் கிடைத்துவிட்டால், ஸ்மார்ட் வகுப்பறையாக மாறிவிடும்'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன்.

தொடர்புக்கு:  கிறிஸ்து ஞான வள்ளுவன் - 9442055358

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 42: சங்கரதேவி- அரசுத் தொடக்கப் பள்ளியை வண்ணக் கலைக்கூடமாக மாற்றிய வித்தகர்!

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்