"ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!" என்றான் பாரதி. அதில் ஓய்வெடுக்கக்கூடாது என்பதை மட்டும் கருத்தில் கொண்டுவிட்டோமோ எனத் தோன்றுகிறது.
குழந்தைகள், பரந்துபட்ட இடத்தில் அசைவு, நுகர்தல், தொடல், பார்வை, விளையாட்டு என்றிருக்க வேண்டிய காலத்தில், ப்ளே ஸ்கூல் என்றழைக்கப்படும் விளையாட்டுப் பள்ளிக்குப் போகச் சொல்கிறோம். குழந்தைப் பருவ வளர்ச்சியின் முக்கிய காலகட்டத்தை, ஒற்றையறையில் வைத்துப் பூட்டிவிடுகிறோம் என்கிறார்கள் குழந்தை நலன் ஆர்வலர்கள்.
முன்னெல்லாம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கான வயது ஐந்தாக இருந்தது. "உயரம் பத்தலை; தலையைச் சுற்றி காதைத் தொட முடியவில்லை" என்ற காரணங்களால் 6, 7 -ம் வயதில் பள்ளிக்குப் போனவர்களும் உண்டு. கால மாற்றத்தில் ஐந்து வயது மூன்றாய் மாறி, கே.ஜி. (கிண்டர் கார்டன்) கற்றல் முறை அறிமுகமானது.
மூன்று வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கே யோசித்த காலம் போய், இப்போது ஒன்றரை வயதிலேயே ப்ளே ஸ்கூல் எனக் கூறப்படும் விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்கும் காலம் இது. பக்குவமாய்ப் பேணிப் பாதுகாக்க வேண்டிய நம் குழந்தைகளை, வேலையின் பொருட்டும், சம்பாத்தியத்தின் பொருட்டும், விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்கிறோம்.
அரசின் திருத்தப்பட்ட நெறிமுறைகள்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்கம், விளையாட்டுப் பள்ளிகளுக்கென தனி வரைமுறை, கட்டுப்பாடுகள், வரம்புகளை வகுத்து, புதிய திருத்தப்பட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்; ஒவ்வொரு மணி நேரத்துக்குப் பிறகும், 15 நிமிட இடைவெளி விடப்பட வேண்டும்; குழந்தைகள்- ஆசிரியர் விகிதம் 15:1 ஆக இருக்க வேண்டும்; பள்ளியில் சேர குழந்தைகளின் வயது வரம்பு பதினெட்டு மாதங்கள் முதல் ஐந்து வயது வரை இருக்க வேண்டும்; குழந்தைகளின் சேர்க்கைக்கு, எழுத்துபூர்வமாகவோ, வாய் வழித்தேர்வோ நடத்தப்படக்கூடாது; ஏற்கெனவே செயல்படும் பள்ளிகள், மறு அனுமதிக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்; நெறிமுறை வெளியிடப்பட்டு ஆறு மாதங்கள் கழித்தும் விண்ணப்பிக்காத பள்ளிகள் மூடப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது திருத்தப்பட்ட நெறிமுறைகள்.
இந்த நெறிமுறைகள், குழந்தைகளுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது? விளையாட்டுப் பள்ளிகள் விளையாட்டையே சொல்லித் தருகின்றனவா? - இது குறித்துப் பள்ளிக் கல்வி, குழந்தைகள் நலம் சார்ந்தவர்களிடம் கேட்டேன்.
டி.விஜயலட்சுமி,அரசுப் பள்ளி ஆசிரியை:
விளையாட்டுப் பள்ளி என்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்படக் கூடியது. தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத சிறார்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களின் அரவணைப்பு கண்டிப்பாகத் தேவை. குழந்தைகளுக்கு என்று எந்த வரையறையுமே இருக்கக்கூடாது. விளையாட்டுப் பள்ளிகளில் வரைமுறை எதுவும் இருக்காது என்பார்கள். ஆனால் இருக்கிறது. உடல் மற்றும் மன வளர்ச்சி துரிதமாக நடைபெறும் காலகட்டம் அது. அப்போது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் குழந்தைகளை அடைத்து வைப்பது என்பது மிகப் பெரிய தவறு. அங்கே குழந்தைகள் விளையாட முடியும். ஆனால் அது என்ன விளையாட வேண்டும் என்பதை ஆசிரியரே முடிவு செய்வார். இயல்பாய், அழகாய் வளரும் பக்குவம் அங்கே இருக்காது.
வீட்டிலிருக்கும் குழந்தைகள் எதையாவது எடுக்கும், கடிக்கும், தொட்டுப் பார்க்கும். அந்த இயல்புத் தன்மை பள்ளிகளில் இருக்காது. குறிப்பிட்ட வயது வரை குழந்தை, எதையும் தானாகக் கற்றுக் கொள்ள வேண்டும். எல்லைகளை நாம் வரையறுக்கக்கூடாது; திணிக்கவும் கூடாது. என்னைப் பொருத்தவரையில் 4 வயதுக்குப் பின்னரே, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம்.
அப்போதுதான் குழந்தைகளின் எலும்புகள் நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கும். எதைக் கற்றுக்கொடுத்தாலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கும். ஃபின்லாந்து, ரஷியா மற்றும் பல வெளிநாடுகளில், குழந்தைகள் 7 வயதுக்குப் பின்னரே பள்ளிக்குச் செல்லத் தொடங்குகின்றனர். ஆனால் அங்கே கல்வி முறை சிறந்திருக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழும்போதுதான் குழந்தைகள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். இப்போதுள்ள கல்விமுறை விதிமுறைகளுக்குட்பட்டே இருக்கிறது. நெருக்கமான இக்கல்வி முறையில் படித்தவர்களில் சொல்லிக்கொள்ளும்படியான கல்வியாளர்களோ, அறிஞர்களோ வரவில்லை என்றே நினைக்கிறேன்.
பிரியா சக்திவேல், ப்ளே ஸ்கூல் உரிமையாளர்:
நான் வேலைக்குப் போன சமயத்தில், என் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. இந்த நிலைமை மற்ற குழந்தைகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நானும், என் கணவரும் சேர்ந்து இப்பள்ளியை ஆரம்பித்தோம். பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள், மற்றவர்களைப் பார்த்து, ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். வரிசையாக நிற்பது, ஒருவருக்கொருவர் உதவுவது, பங்கிட்டுக் கொள்வது போன்ற குணங்கள், பள்ளிகளில்தான் வளர்க்கப்படுகின்றன.
என்னைப் பொருத்த வரையில் ஒன்றைரை வயதிலேயே, குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது நல்லதுதான். விளையாட, மற்ற குழந்தைகளுடன் இணக்கமாக இருக்க, நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள, குழந்தைகள் இளம் வயதிலேயே கற்றுக் கொள்கின்றன.
குழந்தைகளுக்கு மாதம் ஒரு தலைப்பில், குடும்பம், பழம், மரம் என அவற்றைப்பற்றி பேசி, நடித்துக் காட்டுவோம். நாடகங்கள் போடுவது, மிக மிக எளிய அறிவியல் சோதனைகளைச் செய்து காண்பிப்பது, பாடல்கள் பாடச்சொல்லிக் கொடுப்பது போன்றவை கற்றுத்தரப்படும். இதனிடையே, வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் நொறுக்குத் தீனிகளை உண்ண வைப்பது, விளையாட வைப்பது போன்றவையும் நடக்கும். 12 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர், கூடவே உதவிக்கு ஒரு உதவியாளர் என்ற விகிதத்தில்தான் இருக்கின்றனர்.
தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமே விளையாட்டுப் பள்ளிகள், 'க்ரச்'களை நாடுகின்றனர் என்ற பொதுவான எண்ணம் தவறானது. முழுதும் நகரமயமாகிவிட்ட இச்சூழலில், அடுத்த, எதிர் வீட்டுக் கதவுகள் கூட எப்போழுதும் பூட்டித்தான் இருக்கின்றன. வீட்டில் இருக்கும் பெரும்பாலான தாயார்கள், தங்கள் குழந்தைகளை என்ன மாதிரியான வேலைகளில் ஈடுபடுத்தச் செய்வது என்று தெரியாமல்தான் விளையாட்டுப் பள்ளிகளை நாடுகின்றனர்.
ஆசிரியை விஜயலட்சுமி, எழுத்தாளார் உமாநாத் செல்வன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
ரெக்ஸ் சண்முகம்,மருத்துவர்:
நமது நாட்டில்தான் குழந்தைகளை சீக்கிரத்திலேயே பள்ளிக்கு அனுப்புகிறோம். இத்தகைய கற்பித்தல், மாணவர் சேர்க்கை, பள்ளி ஆகியவை தவறானது. அதிலும் விளையாட்டுப் பள்ளிகள் முறை அறவே தவிர்க்கப்படவேண்டும். வீட்டிலும், வெளியிலும் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது அவசியம். இளம் வயதில், குழந்தைகளுக்கு விட்டமின்- டி மிகவும் அவசியம். அது சூரிய ஒளியில் இருந்துதான் கிடைக்கிறது. அது போக, உளவியல் ரீதியாகவும் பெற்றோர்களிடம் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், இயல்பாகவே புத்திக்கூர்மையுடன் வளர்கின்றனர். படிப்பு தவிர மற்ற துறைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
உமாநாத் செல்வன், சிறார் இலக்கிய எழுத்தாளர்:
விளையாட்டுப் பள்ளிகள் குழந்தைகளின் மற்றோர் இருப்பிடமாக மாறிக் கொண்டிருக்கின்றன. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் பகலில் குழந்தை இருக்கும் இடமாக இதனைப் பார்க்கின்றார்கள். 4 வயது வரையில் குழந்தைகள், பெற்றோரின் அதிகபட்ச அரவணைப்பிலும் கண் பார்வையிலும் இருக்க வேண்டும்.
முதலாம் வகுப்பில் (அதாவது குழந்தையின் ஆறாம் வயதில்) பள்ளி என்ற கட்டமைப்பிற்குள் நுழைந்தால் போதுமானது. அந்த வயதில் தான் எழுதுவதற்கு கைகள் முழுமையாக உருவாகி இருக்கும். பள்ளிகளுக்கான முன்னேற்பாடாக கே.ஜி.கள் உருவெடுத்தன. ஆனால் இன்று இந்த கே.ஜிகளுக்கு ஒரு ப்ரீ.கே.ஜி., அடுத்து ஒருபடி முன்னேறி நர்ஸரிகள் வந்துள்ளன.
ப்ரீகேஜிகள் மற்றும் நர்ஸரிகள், பெரும்பாலும் முறையான சான்றிதழ் பெறாத நிறுவனங்களாக இருக்கின்றன. என்ன கற்பிக்கப் போகிறோம், எப்படிக் கற்பிக்கப் போகிறோம், குழந்தைகளின் மனநிலை என்ன என்பது குறித்து ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி இருப்பதில்லை. குழந்தைகள் களிமண்கள். அவற்றை ஆரம்பத்திலேயே சரியாகப் பிடிக்கவில்லை என்றால் இடியாப்பச் சிக்கல்தான்.
காலத்தின் கட்டாயத்தில் குருத்துகளை விளையாட்டுப் பள்ளிகளில் சேர்த்தாக வேண்டும் என்றால் அந்த விளையாட்டுப் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். ஒரே இடத்தில் பல குழந்தைகள் கூடி விளையாட, மகிழ்ந்து ஓடி ஆட முடிகிற இடமாக இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம், காற்று வசதி நிறைய இருக்க வேண்டும். ஆடல், பாடல்கள் இருக்க வேண்டும். குழந்தை தூங்க விரும்பினால் தூங்க வசதி இருத்தல் வேண்டும். மிக முக்கியமாக அங்கே கதைகளுக்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தும் ஒருங்கே கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பள்ளிகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்:
பள்ளி என்பதற்கான அர்த்தமே முறையான கல்வியைக் கற்றுத்தரும் இடம்தான். கே.ஜி. மற்றும் ஒன்றாம், இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு விளையாட்டு முறையில் கற்றுத்தருவதுதான், நெறிப்படுத்தப்பட்ட கல்வியாக இருக்கும். வேலைக்குப் போகும் பெற்றோர்களின் குழந்தைகளை காலை முதல் மாலை வரை பார்த்துக் கொள்ள 'டே கேர்', 'க்ரச்'கள் இருக்கின்றன. இதில் விளையாட்டுப் பள்ளிகள் எதற்காக வந்தன? முறையான அனுமதி பெறாமல் புற்றீசல் போல முளைத்தெழும் விளையாட்டுப் பள்ளிகளின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, தமிழக அரசிடம் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள, ஏற்பாட்டின்படி, ஒன்றரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளிகளின் நிர்ணயிக்கப்பட்ட அலுவல் நேரம் காலை 9 30 மணியில் இருந்து மதியம் 12 30 மணி. 2 வயது கூட நிரம்பாத குழந்தை எவ்வாறு, காலையில் எழுந்து, கிளம்பி பள்ளிக்கு வரமுடியும். இரவு முழுக்க விழித்திருந்து பகலில் தூங்கும் குழந்தைகளின் நிலை என்ன. இதையெல்லாம் யோசித்தே அரசு செயல்பட்டிருக்க வேண்டும்.
ஏழைக் குழந்தைகளுக்கு பால்வாடி, அங்கன்வாடி, பணக்காரக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பள்ளி என்னும் நிலை மாற வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டிய நேரத்தை அரசு உட்பட யாரும் முன்நிர்ணயம் செய்யக்கூடாது.
விளையாட்டுப் பள்ளிகள், 'டே கேர்', 'க்ரச்' ஆகியவற்றின் செயல்பாடு, தேவை, காரணம், சேர்க்கை ஆகியவற்றை அரசு முறையாக வகைப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago