கழிவுநீரை எளிய தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து தினமும் 40,000 லிட்டர் சேகரிப்பு: அசத்தும் ஆண்டிபட்டி பேரூராட்சியின் மேலாண்மை திட்டம்

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் கழிவுநீர் எளிய தொழில்நுட்பம் மூலம் தினமும் 40 ஆயிரம் லிட்டர் அளவிற்கு சுத்திகரிக்கப்படுகிறது. இவை மரக்கன்று வளர்ப்பு, உரப்படுகை போன்றவற்றிற்கும் பூமிக்குள் செலுத்தி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டிபட்டி பேரூராட்சியின் 18வார்டுகளில் 8ஆயிரத்து 498 குடியிருப்புகள் உள்ளன. சுமார் 32ஆயிரம் பேர் இங்கு வசித்து வருகின்றனர். தவிர கிராமங்களில் இருந்து ஆண்டிபட்டிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இவர்களின் குடிநீர் தேவைக்காக சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 13 லட்சம் லிட்டர் அரப்படித்தேவன்பட்டியில் 6.50 லட்சம் லிட்டர் என மொத்தம் 19.50 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் பெறப்படுகிறது. இதில் 70 சதவீதம் கழிவுநீராக வெளியேறி விரயமாகி வருகிறது.
நிலத்தடிநீர் மட்டத்தைப் பொறுத்தளவில் பல பகுதிகளிலும் 400 அடிக்கும் கீழ் சென்று விட்டது. 

எனவே திரவக்கழிவு மேலாண்மைத்திட்டம் நிலத்தடிநீர்மட்டத்தை உயர்த்தவும், விரயமாகும் நீரை முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரமில்லாமல் எளிய தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 5வது வார்டுகளில் உள்ள 420 வீடுகளின் கழிவுநீர் ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு வாய்க்கால்களில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் 4 இடங்களில் ஆகாயத்தாமரை, கூழாங்கற்கள், 40 மிமீ.ஜல்லி, 20மிமீ.ஜல்லி, மரக்கரி போன்ற படுகைகள் அமைக்கப்பட்டு கழிவுநீரின் திடக்கழிவுகள் வடிகட்டப்படுகின்றன. 

சுத்திகரிக்கப்பட்ட நீரை சேகரிக்க இரண்டு தொட்டிகள் உள்ளன. அங்கிருந்து நீர் பம்ப் செய்யப்பட்டு மண்புழுஉரம், இயற்கை உரப்படுகைக்கு தேவையான நீர் பெறப்படுகிறது. 

மேலும் 300-க்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு இது நீராதாரமாகவும் விளங்குகிறது. இதர நீர் நிலத்திற்குள் செலுத்தப்படுகிறது. இவ்வாறு தினமும் 40ஆயிரம் லிட்டர் நீர் மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மழைகாலங்களில் பெருகி வரும் நீர் இந்தஅமைப்பை சிதைக்காமல் இருக்க புறவழிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. நீர்பெருக்கின் போது இந்தபாதை வழியே அதிகப்படியான நீர் திருப்பிவிடப்படும்.

இது குறித்து சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் கூறுகையில், கழிவுநீர்  வாய்க்காலின் முதல் தடுப்பாக ஆகாயத்தாமரை குப்பைகளை தேக்கி நிறுத்துகிறது. சோப்பு உள்ளிட்ட வேதியியல் நீரை தடுக்கிறது. கற்கள், கரித்துண்டு படுகைகள் கிருமிநாசினியாக செயல்பட்டு நுண்ணுயிர் உள்ளிட்டவற்றை தடுக்கிறது. இவ்வாறு படிப்படியாக செல்லும் நீர் இறுதியில் கழிவுத்தன்மையில் இருந்து வெகுவாய் மாற்றம் பெறுகிறது. 
இந்த நீரை உரக்கிடங்கிற்கும், கன்று வளர்ப்பிற்கும் பயன்படுத்துகிறோம். இதனால் ஆழ்குழாய் நீரின் தேவை வெகுவாய் குறைந்து நிலத்தடிநீர்மட்டமும் உயர்ந்துள்ளது என்றார்.

இத்திட்டத்தை தங்கள் பகுதிகளிலும் செயல்படுத்திட மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான மதுரை மாவட்ட செயல் அலுவலர்கள் குழு சில தினங்களுக்கு முன்பு பார்வையிட்டது.

இதுவரை இப்பகுதி கழிவுநீர் ராஜவாய்க்கால் வழியே சென்று விரயமாகி வந்தது. தற்போது இத்திட்டத்தினால் துர்நாற்றம் தடுக்கப்பட்டு கழிவுநீரும் பயன்பாட்டிற்கு உரியதாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்