பயணங்கள் முடிவதில்லை... புத்தகமானது வடகிழக்கு மாநில சாகசப் பயணம்!

By செய்திப்பிரிவு

ஆர்.கிருஷ்ணகுமார்

தமிழில் சாகசப் பயணங்கள் குறித்த நூல்கள் வெளிவருது அரிது. கோவையைச் சேர்ந்த சுரேந்திரன்(57), அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்ட சாகசப் பயணத்தை புத்தகமாய் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி, ஏறத்தாழ 34 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இவருக்கு, கட்டுமானத் துறையாளர், சிறந்த கோல்ஃப் வீரர், சமூக ஆர்வலர் என பல முகங்கள் உண்டு. ஓர் இனிய காலைப் பொழுதில் சுரேந்திரனை சந்தித்தோம்.

“சொந்த ஊர் ராஜபாளையம். பெற்றோர் அழகப்பராஜா-இந்திரா. கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருந்த அப்பா, வேறு தொழிலில் ஈடுபடலாம் என முடிவெடுத்து 1972-ல் கோவைக்கு இடம் பெயர்ந்தார். கோவையில் பேரிங்குகள் விற்கும் கடையைத் தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை ராஜபாளையத்தில் படித்த நான், வடகோவையில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்ந்தேன். தொடர்ந்து சித்தாபுதூர் அரசுப் பள்ளியிலும், சபர்பன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, பிஎஸ்ஜி கல்லூரியில் பியுசி-யும், பி.எஸ்சி. கணிதமும் படித்தேன். படிக்கும்போதே பாட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். கோவை மாவட்ட பாட்மிண்டன் அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடி, பல போட்டிகளில் வென்றுள்ளேன்.

கல்லூரி முடித்த பின்னர் அண்ணன் ஸ்ரீதருடன் இணைந்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டேன். பின்னர் தனியாக கட்டிடங்களைக் கட்டினேன். 53-வது வயதில் அனைத்து பணிகளில் இருந்தும் ஓய்வுபெற்றுவிட்டேன்” என்றவரிடம், “கட்டுமானத் தொழிலில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் திடீரென ஓய்வுபெற்றது ஏன்?” என்று கேட்டோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே...

“இதே கேள்வியைத் தான் பலரும் கேட்டார்கள். பொதுவாகவே, `எனது சம்பாத்தியத்தில் எனக்கென 50 சதவீதம்
கூட செலவளிக்க இயலவில்லையெனில், சம்பாதிப்பதில் என்ன அர்த்தம்’ என்று கேட்டுக்கொள்வேன். ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. தொழிலில் இருந்து விடைபெற்றுக்கொண்டேன். இன்ஜினீயரிங் உபகரணங்களை என்னிடம் வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்” என்றார் சிரித்துக்கொண்டே. இவரது மனைவி சுபத்ரா. மகன் வருண் அழகர், மகள் இந்து லஷ்மி, பேத்தி ஜெயஸ்ரீ.

“பயண ஆர்வம் தொடங்கியது எப்போது” என்று கேட்டதற்கு, விரிவாகவே பதில் கூறினார். “சிறு வயதில் ஆனந்தவிகடனில் மணியன் எழுதிய ‘இதயம் பேசுகிறது’ கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். இதனால், பயணங்கள் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிக்கும்போதே கோவா, மும்பை, பெங்களூரு என சுற்றுலா செல்வேன். கல்லூரி முடித்த பின்னர் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்கள் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டேன். இது இயற்கை மீதான காதலை அதிகரிக்கச்செய்தது.

34 நாடுகளுக்கு பயணம்...

சிறுவாணி நதி உற்பத்தியாகும் முக்திகுளம்  மலைக்கு, மாநகராட்சி ஆணையர் கே.கணேசன் தலைமையில் சென்ற முதல் பயணக்  குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும்  பயணம் மேற்கொண்டேன். 1996-ல் முதல் முறையாக இங்கிலாந்து சென்றேன். வெளிநாட்டுப் பயணங்கள் மீதும் ஆர்வம் அதிகரித்து, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி, கிரீஸ், கென்யா, தான்சானியா என 34 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். இத்தனை நாடுகளிலும் என்னைக் கவர்ந்தது திபெத் நாட்டில் உள்ள கைலாய மலைதான்.

எனது சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இதனால், பல நாடுகளுக்குச் செல்வோருக்கு வழிகாட்டியுள்ளேன். வெளி நாட்டவரிடம் நான் கண்டு வியந்தது நேரம் தவறாமை, சமூக ஒழுக்கம், சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவைதான். அதேபோல, நமது கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறையை வெளிநாட்டவர் மிகவும் விரும்புகின்றனர். பொதுவாக, ஒரு நாட்டுக்குச் செல்லும்போது, அந்த நாட்டைப் பற்றி ஓரளவு விவரங்களாவது தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். ஆனால், நம்மவர் சிலரது செயல்பாடுகள், வெளிநாட்டவரை முகம் சுளிக்கச் செய்யும் வகையிலேயே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார் சுரேந்திரன்.

தேசிய கோல்ஃப் சாதனையாளர்!

2000-ம் ஆண்டில் கோல்ஃப்  விளையாடத் தொடங்கிய சுரேந்திரன், தேசிய அளவில் இந்த விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். தற்போது, தென்னிந்திய கோல்ஃப் விளையாட்டு சங்கத்தின் நிர்வாகியாகவும் பொறுப்பு வகிக்கிறார். 2004-ல் சுனாமி தாக்குதலின்போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை, தமனாம்பேட்டை ஆகிய இரு கிராமங்களைத் தத்தெடுத்து, அக்கிராம மக்களுக்கு அதிக உதவிகள் செய்துள்ளார். இதற்காக, இங்கிலாந்தில் உள்ள `ரோட்டரி கிளப் ஆஃப் ஆஸ்டன்’ இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதேபோல, பல இயற்கைப் பேரிடர்களின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிதும் உதவியுள்ளார். 

“சரி, திடீரென எழுத்தாளராகி விட்டீர்களே? மிகப் பிரமாதமான படங்களுடன் `சாலையில் ஒரு சாகசப் பயணம்’  நூலை தயாரித்திருக்கிறீர்களே” என்று கேட்டோம். “இந்திய-சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்துக்கு சாகசப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்பது எனது 25 ஆண்டுகள் கனவு. 12 நகரங்களையும், 3,649 கிராமங்களையும் கொண்ட இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், சிறப்பு அனுமதி அவசியம். எனது கோல்ஃப் நண்பர் கேப்டன் ஜெகன் கொட்டேகருடன் சேர்ந்து, 6 மாதங்கள் திட்டமிட்டோம். கர்னல் ஜே.பி.சந்தானம், கேப்டன் பரத் சிங், சிப்பி விக்னேஷ் ஆகியோரும் எங்களுடன் இணைந்தனர். ஓய்வுபெற்ற கர்னல் கே.பி.சந்தானத்தின் அனுபவம், எங்கள் பயணத்துக்கு பெரும் பலமாய் அமைந்தது. ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வருடன் இணைந்து பயணம் மேற்கொண்டது, மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

இந்திய ராணுவத்துக்கு நன்றி!

உண்மையில், இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிய இந்திய ராணுவத்தின் துணையே காரணம். பொதுவாக, அருணாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவார்கள். சாகச ஆர்வம் கொண்டவர்கள் அதிகபட்சம் 5 இடங்களுக்குச் செல்வார்கள். ஆனால், நாங்கள் 12 இடங்களைப் பார்க்கத் திட்டமிட்டோம். இதுவரை யாருமே இத்தனை இடங்களைப் பார்க்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்று, பயண அனுமதியை வழங்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018 செப்டம்பர் மாதம் பயணத்தை தொடங்கினோம். அனைவரும் அசாம் மாநிலத்தின் தலைநகரம் கௌஹாத்திக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலைப் பயணத்தை தொடங்கினோம். இதற்காக மூன்று மோட்டார் சைக்கிள்களும், ஒரு காரும் ஏற்பாடு செய்துகொண்டோம்.

ஒவ்வொரு நாள் பயணத்தின் முடிவிலும் மாலை 7 மணியளவில் ஒன்றாக அமர்ந்து, அன்றைய பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், அடுத்த நாளுக்கான பயணத் திட்டம் குறித்து விவாதிப்போம். பயணத்தின் மூன்றாவது நாள் எங்கள் குழுவினரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தேன்.

‘பல ஆண்டுகளாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் சாகசப் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தப் பயணம் அனைத்திலும் வேறுபட்டது. அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், அசாம் என நான்கு மாநிலங்களில், ஏறத்தாழ 42 நாட்கள் கடினமான பயணம் மேற்கொள்ளப் போகிறோம். இந்தப் பயணக் குறிப்புகளை மக்களுக்குத் தெரிவித்தால், அதைப் பார்த்து பலரும் இத்தகு சாகசப் பயணம் மேற்கொள்வார்கள்” என்றேன். அவர்கள் ஒப்புக்கொண்டதால், பல குறிப்புகளை எடுத்துவைத்து, புத்தகம் வெளியிட்டேன்.

இரவல் கேமராவும், ஒரு மணி நேர பயிற்சியும்...

இந்தப் பயணத்துக்காகவே, எனது மகனிடம் புகைப்படக் கலை கற்றுக்கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம் கேமராவில் படமெடுத்திருந்தபோதும், டிஜிட்டல் கேமராவில் படமெடுக்கத் தெரியாது. இதனால், இரவல் கேமரா வாங்கி, மகனிடம் ஒரு மணி நேரம் படமெடுப்பதன் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்துகொண்டேன். இந்த பயணத்தில் ஏறத்தாழ 6,200 புகைப்படங்கள் எடுத்தேன்.

இந்தப் பயணத்தில் இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் அற்புதமான இடங்களைப் பார்த்தோம். அச்சுறுத்தக்கூடிய பல சாலைகளை, பகுதிகளைக் கடந்துசென்றோம்.

எழில் கொஞ்சும் இந்தியா...

உலகில் அதிகமான காண்டாமிருகங்கள் காணப்படும் போர்பிடோரா வனம், ஷில்லாங்கின் உமியம் ஏரி, பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா நதி, உலகில் அதிக மழை மொழியும் சிரபுஞ்சி பள்ளத்தாக்கு, மரத்தின் வேர்களால் இயற்கையாய் அமைந்த இரண்டடுக்கு பாலம், பிரம்மாண்ட பாறைகளால் ஆன ஆற்றுப்படுகை, டையந்த்லான் அருவி, இருபுறமும் பசுமை நிறைந்த சாலைகள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகள், மெஞ்சுக்கா சியாங் நதியைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் தொங்கும் ஒற்றையடிப்பாலம், சீன எல்லையில் பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள், யிங்கியாங்கிலிருந்து டியூடிங் செல்லும் வழியில் அமைந்துள்ள இரும்புப் பாலம், சாங்கே ஆற்றின் குறுக்கே 600 அடி நீளத்துக்கு, மரப் பலகைகளைக் கொண்டு ராணுவம் அமைத்த பாலம், புத்த மடாலயங்கள், லோஹித் நதியின் குறுக்கே 10 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்ட பாலம், இந்தியாவின் முதல் சூர்யோதயம் நிகழும் கிபித்து, சீனப் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுச் சின்னங்கள், அழகு மிகுந்த பரசுராம் குண்ட் ஆறு என அற்புதம் நிறைய எண்ணற்ற பகுதிகளைக் கடந்தோம்.

கூகுளில்கூட இல்லாத டாம்டெங்...

ஏறத்தாழ 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பூம்லாவில், வெள்ளிப்பனி மலையின் மீது மேகங்களுடன் உலாவி னோம். கூகுள் தேடுதளத்தில்கூட இல்லாத டாம்டெங் என்ற இடம், மிகுந்த பரவசமூட்டியது. அநேகமாய் அந்தப் பகுதியை யாரும் இதுவரை படமெடுத்திருக்க வில்லை என்று கூறினர்.

இந்தப் பயணத்தில் காண்டாமிருகம், வெள்ளை யாக் என அரிய வகை விலங்குகளைக் காண முடிந்தது. அசாதாரணமான சாலை, அபாயகரமான வளைவுகள், கடும் பனிமூட்டம் என பலவற்றையும் கடந்து பயணித்தோம். இந்தப் பயணம் முழுவதுமே இந்திய ராணுவத்தினர் மிகவும் உதவினர். அதுமட்டுமல்ல, உயர்ந்த பதவிகள் வகிக்கும் அதிகாரிகளுடன், விருந்து உண்ணும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களது உதவி இல்லையெனில் இந்தப் பயணமே நிறைவேறியிருக்காது. பயண நிறைவில் மணிப்பூர் தலைநகரமான இம்பால் சென்றோம். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கௌஹாத்தி வந்து, அவரவர் ஊர்களுக்குப் பயணித்தோம்.

மொத்தம் 42 நாட்களில், 4 மாநிலங்களில்  ஏறத்தாழ 5,800 கிலோமீட்டர் தொலைவு பயணித்தோம். இளைய தலைமுறைக்கு ஒரே வார்த்தைதான் சொல்ல விரும்புகிறேன். இயற்கையை,  அதன் பிரம்மாண்டத்தை அதனூடாகவே சென்று ரசிப்பதில் மிகுந்த ஆனந்தம் கிடைக்கும். வாழ்க்கையில் பயணம் மேற்கொண்டு, இந்த ஆனந்தத்தை அடையுங்கள் என்பதுதான் அந்த வார்த்தை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சுரேந்திரன். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்