ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர்;  30 பவுன் நகைகள் பத்திரமாக ஒப்படைப்பு: உறவினர்கள் நெகிழ்ச்சி 

By செந்தில்குமார்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே நள்ளிரவில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஊர் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய பெண் அணிந்திருந்த 30 பவுன் தங்க நகைகளைப் பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இன்றைய காலத்தில் மனிதநேயம் மரித்துப் போகாமல் இருப்பதை அரிதான சில நிகழ்வுகளில் பார்க்க முடியும். எரிகின்ற தீயில் கிடைப்பது வரை லாபம் என்று பிடுங்க நினைப்பவர்கள் மத்தியில் சிலர் மாறுபட்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது. 

பெங்களூருவைச் சேர்ந்த உமாதேவி என்பவர் கடந்த வாரம் சென்னையில் நடந்த சுப நிகழ்ச்சியில் உறவினர்களுடன் பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அனைவரும் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காவேரி விரைவு ரயிலில் சனிக்கிழமை இரவு புறப்பட்டனர். இந்த ரயில் நள்ளிரவு 12.50 மணியளவில் ஆம்பூர் அருகே கன்னடிகுப்பம் கிராமம் வழியாகச் சென்று கொண்டிருந்தது.

தூக்கக் கலக்கத்தில் இருந்த உமாதேவி, கழிப்பறை செல்வதற்காக மெதுவாக நடந்து சென்றவர் பயணிகள் ஏறி, இறங்கும் கதவைத் தவறுதலாக திறந்துவிட்டார். நள்ளிரவில் ரயிலில் இருந்து தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தவரால் எழுந்திருக்க முடியவில்லை. கால்கள், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் நகர முடியாமல் காப்பாற்றும்படி கத்தியுள்ளார். இரவு நேரம் என்பதால் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை.  

உமாதேவி தவறி விழுந்தது உடன் சென்ற உறவினர்களுக்கும் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்ற பிறகே உமாதேவி தங்களுடன் இல்லாததை அவரது உறவினர்கள் தெரிந்துகொண்டனர். அதேநேரம், ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் விழுந்த உமாதேவி, 5 மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 5.30  மணியளவில் கன்னடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன் என்பவர் உமாதேவி மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தவர், நண்பர்கள் சிலருக்குத் தகவல் தெரிவித்தார். 

இந்தத் தகவலால் திரண்ட பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட உமாதேவி, பாதுகாப்பாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உமாதேவியின் கையில், கழுத்தில், காதில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உமாதேவி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆம்பூர் அருகே படுகாயங்களுடன் உமாதேவி மீட்கப்பட்ட தகவல் அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் உமாதேவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவத்தில் உமாதேவி அணிந்திருந்த 30 பவுன் தங்க நகைகள் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதால் அவரது உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் படையின் உதவி ஆய்வாளர் சிவக்குமார் கூறும்போது, "விபத்தில் சிக்கிய உமாதேவியின் நிலையைப் பார்த்த பிறகு அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்படாமல் அதைப் பத்திரமாக மீட்டுக் கொடுத்த நபர்களை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும். இது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும்" என்றார். 

உமாதேவியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன் கூறும்போது, "ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணியளவில் எனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள ரயில் நிலையப் பகுதியில் இருந்து பெண்ணின் குரல் கேட்டது. ஓடிச் சென்று பார்த்தபோது கை, கால்களை அசைக்க முடியாமல் உமாதேவி பேச்சுக் கொடுத்தார். அவரைப் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தோம். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டதில் ஒரு திருப்தி கிடைத்தது" என்றார்.   

இம்மாதிரியான மனிதர்களை சமூகமும், அரசும் பாராட்டுவது, இத்தகைய நற்செயல்களை செய்பவர்களை ஊக்குவிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்