அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சீரழிய திமுகவும் அதிமுகவும்தான் காரணம்: அன்புமணி

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சீரழிந்து வருவதற்கு காரணம் திமுகவும், அதிமுகவும் தான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சமூக, பொருளாதார சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், வரைவுப் பட்டியலில் இருந்து தமிழகத்தின் நிலையை அறிய முடிகிறது. தமிழகத்தின் நிலை மிக மோசமாகவும், வேதனையளிப்பதாகவும் உள்ளது.

தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் தான் மாற்றி மாற்றி ஆட்சி செய்து வருகின்றன. இதில் அதிமுக 25 ஆண்டுகளும், திமுக 22 ஆண்டுகளும் தமிழகத்தை நிர்வாகம் செய்துள்ளன. மக்களை மானத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வைப்பது தான் மக்கள் நல அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வரும் அதிமுகவும், திமுகவும் அதற்கு நேர் எதிரான ஆட்சியைத் தான் வழங்கியுள்ளன.

ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவது தான் எங்களது குறிக்கோள் என்று இரு கட்சிகளும் முழங்குவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்தக் கட்சிகளின் முழக்கம் ‘‘இன்று கடன்... நாளை ரொக்கம்’’ என்ற அளவில் தான் இருக்கிறதே தவிர, நடைமுறைக்கு வருவதற்கான எந்தவித அறிகுறியும் இன்று வரை தென்படவில்லை. மாறாக, தமிழகத்தை கடைசி நிலைக்கு கொண்டு செல்வதில் தான் இரு கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

சமூக, பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளி விவரங்கள் தமிழகத்தின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. தங்களால் தான் தமிழ்நாடு அதிவேக வளர்ச்சிப் பாதையில் சென்றதாக மார்தட்டிக்கொள்ளும் , ஸ்டாலினும் தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு யார் காரணம்? என்பது குறித்து தமிழக மக்களின் மனதில் எழுந்துள்ள வினாக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

1. தமிழ்நாட்டில் நிலம் இல்லாமல் தினக்கூலி வேலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஊரகக் குடும்பங்களின் எண்ணிக்கை 56% ஆகும். இது தேசிய சராசரியான 38.27 விழுக்காட்டை விட மிகவும் அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி, நிலமில்லாமல் கூலி வேலை செய்தே பிழைக்கும் ஏழைகள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் 22.26 விழுக்காட்டினரும், கேரளத்தில் 40.28 விழுக்காட்டினரும் மட்டுமே நிலமற்றவர்கள். பிகாரில் கூட 54 விழுக்காட்டினர் மட்டுமே நிலமற்றவர்கள். வாழ்வாதாரத்தில் பிகாரை விட தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளியது தான் 50 ஆண்டு கால திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனையா?

2. தமிழகத்தில் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோர் உள்ள குடும்பங்களின் அளவு 78.08% ஆகும். இது தேசிய சராசரியான 74.5 விழுக்காட்டை விட அதிகமாகும். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அதாவது இந்தியாவின் ஐந்தாவது ஏழை மாநிலம் தமிழகம் ஆகும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், ஏழைகளை ஏழைகளாகவே வைத்து அழ வைப்பதற்கு அவரது வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் இருகட்சிகளில் எது காரணம்?

3. வேலைவாய்ப்பிலும் தமிழகம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. ஊரகக் குடும்பத்தினரில் 4.58% அரசு வேலையிலும், 0.88% பொதுத்துறை வேலையிலும், 2.86% தனியார் வேலையிலும் உள்ளனர். இவை அனைத்திலுமே தேசிய சராசரியை விட தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் கூட ஊரக தமிழகத்தில் மாத ஊதியம் பெறுவோரின் அளவு 7.22% மட்டுமே. 92.78% குடும்பங்கள் நிரந்தர வாழ்வாதாரமின்றி தவிக்கின்றன. 50 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் 10% ஊரகக் குடும்பங்களுக்குக் கூட நிரந்தர வாழ்வாதாரம் வழங்க முடியாத திராவிடக் கட்சிகளுக்கு வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி பற்றி பேசும் தகுதி உண்டா?

4. கல்வியிலும் தமிழகத்தின் நிலை மெச்சிக் கொள்ளும் நிலையில் இல்லை. ஊரக தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 6.61% தான். பத்தாம் வகுப்பு படித்தவர்களின் எண்ணிக்கையும் 14.10 விழுக்காட்டைத் தாண்டவில்லை.

அதேநேரத்தில் 26.38 விழுக்காட்டினர் பள்ளிக்கூடத்திற்குக் கூட செல்லாத பாமரர்கள் ஆவர். எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற வள்ளுவரை போற்றுவதாகக் கூறிக்கொள்ளும் திராவிடக் கட்சிகளின் சாதனை இது தானா?

5) கடைசியாக உணவு படைக்கும் நிலவளத்தை மேம்படுத்துவதிலும் திராவிடக் கட்சிகள் படுதோல்வி அடைந்து விட்டது. இந்தியாவில் 25.63% ஊரக குடும்பங்கள் பாசன வசதியுடன் கூடிய நிலங்களை வைத்துள்ளன. ஆனால், தமிழகத்தில் 12.10% குடும்பங்கள் மட்டுமே பாசன வசதி கொண்ட நிலங்களை வைத்துள்ளன. 19.18% குடும்பங்கள் நிலங்களை வைத்துள்ள போதிலும், அவற்றுக்கு பாசன வசதி செய்து தரப்படவில்லை.

தென்னிந்தியாவிலேயே பாசன வசதி பெற்ற நிலங்கள் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் ஜலயாக்னா என்ற திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் 71 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து தரப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் 50 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தும் அதில் பாதியளவு நிலங்களுக்குக் கூட பாசன வசதி செய்து தரப்படாததற்கு பொறுப்பேற்கப் போவது யார்.... ஜெயலலிதாவா? ஸ்டாலினா?

தமிழகத்தின் இத்தனை அவலங்களுக்கும் காரணம் தமிழ்நாட்டு மக்களை எப்போதுமே நலிவடைந்த நிலையிலேயே வைத்திருந்தால் தான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்ற திராவிடக் கட்சிகளின் மனநிலை தான்.

மனிதனின் சிந்தனையை மழுங்கடிக்க மது, மானத்தை மழுங்கடிக்க இலவசங்கள், கேள்வி கேட்கும் மனநிலையை மழுங்கடிக்க திரைப்படங்கள் ஆகியவை தான் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முப்பெரும் உத்திகளாக உள்ளன. அதனால் தான் ஒருபுறம் இலவசங்களைக் கொடுத்துவிட்டு, மறுபுறம் ஏழைகள் உழைத்து வாங்கி வரும் ஊதியம் முழுவதையும் மதுவைக் கொடுத்து பறித்துக் கொள்ளும் அவலம் நடைபெறுகிறது.

மக்களுக்கு கல்வி வழங்கினால் அவர்கள் சிந்திக்கும் திறன் பெற்று ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள்; மதுவைக் கொடுத்தால் மயங்கிய நிலையிலேயே கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டு செல்வர் என்ற மனநிலையிலிருந்து திமுகவும், அதிமுகவும் மாறாததால் தான் தமிழகம் முன்னேறவில்லை.

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சீரழிந்து வருவதற்கு காரணம் திமுகவும், அதிமுகவும் தான் என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். மாநிலத்தைச் சீரழித்த இந்த இரு கட்சிகளுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்