பர்தா பற்றிய ஹெச்.ராஜா கருத்துக்கு சர்ச்சையை குறிப்பிட்டது ஏன்?- ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

பாஜக செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்த 'பர்தா' பற்றிய கருத்தையொட்டிய கேள்விக்கு 'சர்ச்சை' என்ற சொல்லைக் குறிப்பிட்டதற்கான காரணத்தை திமுக பொருளாளர் ஸ்டாலின் விளக்கினார்.

கொளத்தூர் தொகுதி மக்கள் குறைகளைக் கேட்டறிவதற்காக நான் நடத்தி வரும் "பேசலாம் வாங்க!" தொடர் சந்திப்பு - நிகழ்ச்சிகளின் பத்தாவது நிகழ்ச்சி 27.6.2015 அன்று முடிந்ததும், என்னைப் பத்திரிகையாளர்களும் ஊடகத்தினரும் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர்.

அவற்றில் ஒன்று, பா.ஜ.க. செயலாளர் ஹெச்.ராஜா, "முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று பேசியது பற்றியதாகும். அதற்கு நான், ஹெச்.ராஜா என்ன சொன்னார் என்று முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத நிலையிலும், ஊடக விளம்பரத்தை ஈர்ப்பதற்காக அவர் எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே தெரிவித்துப் பழக்கப்பட்டவர் என்பதாலும், "சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பதில் சொல்லத் தயாரில்லை" என்று பதில் அளித்தேன்.

ஹெச்.ராஜா, 'பர்தா' பற்றிச் சொன்னது சர்ச்சைக்குரிய கருத்து என்று ஒரு சிலர், என்னுடைய பதிலை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துப் பொருள் கொண்டு, எனக்கு அவப் பெயர் ஏற்படுத்திட சமூக வலைதளத்தில் வலிந்து முயற்சி மேற்கொண்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

'சர்ச்சை' என்ற சொல்லை நான் பயன்படுத்தியது, ஹெச்.ராஜா பின்பற்றி வரும் பிற்போக்கு அணுகுமுறையைப் பற்றியதே அல்லாமல், பர்தா பற்றிய கருத்து சர்ச்சைக்குரியது என்ற பொருளில் நிச்சயமாக இல்லை என்பதையும், ஏற்கெனவே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்றுவிட்ட ஒன்றை விவாதப் பொருளாக்கிடக் கூடாது என்ற எனது எண்ணத்தையும், மீண்டும் ஒருமுறை யாருக்கும் எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லாதவாறு, தெளிவுபடுத்திடப் பெரிதும் விரும்புகிறேன்.

ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து, நான் எனது முகநூலில், "மதச்சார்பற்ற நாட்டில் பர்தா அணிந்து கொள்வது என்பது இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சுதந்திரம் மட்டுமல்ல; அவர்களின் உரிமையும் ஆகும் என்பதை மனதில் வைத்து இதுபோன்ற வெறுப்பூட்டும் பேச்சுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று உறுதிபடத் தெரிவித்திருப்பதுதான், திமுக தொன்றுதொட்டு உளப்பூர்வமாக மேற்கொண்டு வரும் உண்மையான நிலைப்பாட்டினை ஒட்டிய எனது அணுகுமுறையும் தெளிவுரையும் ஆகும்.

இந்த என்னுடைய நேரடியானதும் நேர்மையானதுமான விளக்கத்திற்குப் பிறகும், இட்டுக்கட்டிய தவறான தகவலைத் திரைமறைவில் பரப்பிட யாரும் முயற்சித்தால், அதனைப் பொதுமக்கள் அடையாளம் கண்டு, அதன் பின்னணி நோக்கம் என்ன என்பதையும் நிச்சயமாகப் புரிந்து கொண்டு நிராகரித்து விடுவார்கள் என்பதால், இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பேணிக் காப்பதிலும், அவர்களின் நலனுக்கென அயராது பாடுபடுவதிலும், திமுக என்றென்றும் முன்னணியில் இருந்து வருகிறது என்பதை, அதன் கடந்த காலச் சாதனை ஆவணங்களைக் கருத்தில் கொண்டு, தமிழக மக்கள் நன்கறிவர் என்பதை நினைவூட்டுகிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிட்ட கருத்து:

முன்னதாக, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த கருத்து: "பாஜக தலைவர் அமித் ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் ஹெச்.ராஜா போன்றவர்கள் பேசுவது கண்டனத்திற்குரியது.

"பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும்" என்று அவர் பேசியிருப்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

மதசார்பற்ற நாட்டில் பர்தா அணிந்து கொள்வது என்பது இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சுதந்திரம் மட்டுமல்ல, அவர்களின் உரிமையுமாகும் என்பதை மனதில் வைத்து இதுபோன்ற வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

மத நல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் அமைதிக்கு எந்த பங்கமும் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமை என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்