ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்ட சந்தீப் சக்சேனா: ராமதாஸ் கண்டனம்

ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டதால் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் மிக அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியிருக்கிறார்.

மேலும், சில கட்சிகள் ஆதாரமின்றி புகார் கூறியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். முறைகேடுகளை கண்டுகொள்ளாதது மட்டுமின்றி புகார் கூறியவர்களையே சக்சேனா விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆளுங்கட்சியினர் அப்பட்டமான விதிமீறல்களில் ஈடுபட்டனர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இரவோடு இரவாக தொகுதி முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன.

இந்த சாலை அமைக்கும் பணிகளில் சென்னை மாநகரக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும், சாலை அமைக்கும் பணிகளை சென்னை மாநகர காவல் ஆணையரே மேற்பார்வையிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காலங்காலமாக கருப்பான கழிவு நீர் வந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் தற்காலிக ஏற்பாடாக சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கழிவுநீர் குழாய்களும் மாற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டது வரவேற்கத்தக்க விஷயம் தான்.

ஆனால், 4 ஆண்டுகளில் எதையும் செய்யாமல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் இதை செய்தது விதி மீறல் என்பது சக்சேனாவுக்கு தெரியாதா? இதைத் தடுக்க அவர் என்ன செய்தார்? இந்த விதிமீறல்களுக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் திடீரென புதுப்பிக்கப்பட்டு, பச்சை வண்ணம் பூசப்பட்டது. குறைந்த பரப்பளவே கொண்ட அந்த அலுவலகத்தில் தேவையே இல்லாமல் மூன்று குளிரூட்டிகள் பொருத்தப்பட்டன. இவை யாருக்காக செய்யப்பட்டன? இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலா.... இல்லையா?

இந்த விதிமீறல்கள் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தெரியுமா... தெரியாதா? இதுகுறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் அவர் நடவடிக்கை எடுப்பாரா? தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது அவரது கடமை இல்லையா? ஒருவேளை அவர் எதிரிலேயே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கூட, எவரேனும் ஆதாரத்துடன் படம் பிடித்து வந்து புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பாரா? ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி இப்படிப் பேசலாமா?

தேர்தல் பிரச்சாரத்தின்போது சேலம் மாநகரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு தண்டையார்பேட்டையில் ஆளுங்கட்சிக்காக பரப்புரை மேற்கொண்டதை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக வெளியிட்டேன்.

அதைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுத்தார்? இதுதொடர்பாக சில செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, இதுகுறித்து யாரும் புகார் தரவில்லை என்று கூறினார்.

அப்படியானால், ஊடக செய்திகளின் அடிப்படையில் நீங்களாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது,‘‘ நான் இன்று தொலைக்காட்சி பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று பதிலளித்துள்ளார். இப்படி பதில் கூறுவது பொறுப்பான அதிகாரிக்கு அழகா? காவல் அதிகாரி பிரச்சாரம் செய்தது குறித்து அதுவரை தெரியாவிட்டாலும், அதன்பின் விசாரித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது?

வாக்குப்பதிவு நாளன்று 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளைப் பதிவு செய்தனர். அதனால் தான் 181 ஆவது வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வாக்குகள் பதிவாயின. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த முறைகேடுகளுக்கு இது ஒரு உதாரணம் தான்.

எந்தெந்த வாக்குச்சாவடியில் இதேபோல் முறைகேடுகள் நடந்தன என்பதை விசாரித்து அவை அனைத்திலும் மறு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, ஏதோ அந்த வாக்குச்சாவடியின் அதிகாரி தான் வாக்காளர்களை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட வைத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவரை பலிகடா ஆக்குவதும், அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்துவதும் கண்துடைப்பு நாடகமா.... இல்லையா?

தேர்தல் பரப்புரை முடிவடைந்தவுடன் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முகாமிட்டு முறைகேடுகளை அரங்கேற்றினார்கள். இதைத் தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பாரா?

1993 ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்குரிய சூழல் நிலவவில்லை. இதையடுத்து அத்தேர்தலை அப்போதைய தேர்தல் ஆணையர் சேஷன் ஒத்திவைத்தார். அதேபோன்ற சூழல் தான் இராதாகிருஷ்ணன் நகரிலும் நிலவியது.அத்தகைய சூழலில் சேஷன் காட்டிய வழியில் சக்சேனா நடந்திருந்தால் அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பார். ஆனால், ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டதால் தான் இப்போது விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய சந்தீப் சக்சேனா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, அதிமுகவின் நிர்வாகியாகவே மாறி எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். இவரை வைத்துக்கொண்டு 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது.

எனவே, சந்தீப் சக்சேனாவுக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்