கோவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வரும் சோதனை முறை இலவச வை-பை சேவையில், தேவையற்ற இணைய தளங்களை முடக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியின் மாநகரப் பகுதிகளில் இலவச வை-பை இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1.50 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு பரீட்சார்த்த முறையில் 4 ஜி இணைய வேகத்தில் வை-பை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியிலிருந்து சிட்ரா வரை சுமார் 6 கி.மீ. தொலைவு, திருச்சி சாலையில் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து அரசு கலைக் கல்லூரி சாலை வரை 1.25 கி.மீ. தூரத்துக்கு இண்டஸ்டவர்ஸ் நிறுவனம் இச்சேவையை வழங்குகிறது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் 3 கி.மீ. தூரம், மாநகராட்சி அலுவலகம், கணபதி, ராஜவீதி ஆகிய பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் இச்சேவையை வழங்குகிறது.
காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்கள், பாரதி பூங்கா ஆகிய இடங்களில், தலா 500 மீட்டர் சுற்றளவுக்கு புளூஅல்ட்ராபேண்ட் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனம் மூலம் வை-பை சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சோதனை முறையில் வழங்கப்படும், இந்த இணையதள சேவை, விரைவில் முழு அளவில் அமலுக்கு வர உள்ளது.
சோதனை அடிப்படையில் கடந்த சில நாட்களாக இணையதள சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. செல்போன் எண்களைக் கொடுத்து, ஓடிபி எனப்படும் தற்காலிக கடவு எண்களைக் பெற்று, இந்த சேவையைப் பயன்படுத்தலாம். இந்த சேவை மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் செல்போன், கணினி மூலம் பலரும் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வை-பை சேவையில் தேவையில்லாத இணையதளங்களை முடக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. சோதனை அடிப்படையில் தற்போது இச்சேவை வழங்கப்பட்டாலும், எந்தவித கட்டுப்பாடுகளும் அதில் இல்லாததால், தேவையற்ற இணையதளங்களை பலரும் பார்வையிட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது.
கட்டுப்படுத்துவது எளிது
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூங்குன்றன் என்பவர் கூறும்போது, ‘நகரின் பல பகுதிகளில் வை-பை இணையதள சேவை குறிப்பிட்ட நேரத்துக்கு இலவசமாக கிடைக்கிறது. இது ஆரோக்கியமான செய்திதான். ஆனாலும், அதில் கட்டுப்பாடுகள் அவசியம். ரேஸ்கோர்ஸ் அருகே பள்ளி மாணவர்கள் சிலர் மாநகராட்சி வை-பை வசதியைப் பயன்படுத்தி ஆபாச இணையதளங்களை பார்த்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது.
எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து தளங்களையும் பயன்படுத்தலாம் என்ற நிலை உள்ளது. பள்ளி மாணவர்கள் கூட செல்போன் பயன்படுத்தும் நிலை உள்ளதால், இணையதள சேவை வழங்குவதில் கவனம் தேவை. சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டாலும், அதில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் தேவையில்லாத இணையதளங்களை தடுப்பது எளிது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த விசயத்தில் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்’ என்றார்.
ஆலோசிக்கிறோம்…
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வை-பை வசதியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, பயன்பாடு அதிகமுள்ள இணையதளங்கள், அலைவரிசை பிரச்சினைகள், இணையவேகம், தற்காலிக கடவுஎண் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை குறித்து இந்த சோதனையில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தேவையற்ற இணைய தளங்களை முடக்குவது குறித்தும் முன்கூட்டியே ஆலோசித்தோம். அத்திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்படும்போது அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வருவதால், அதை சோதனை ஓட்டத்திலேயே அமல்படுத்த ஆலோசிக்கிறோம்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago