‘நம்மால் முடிந்தவரை அல்ல.. முடியும்வரை செய்வதே முயற்சி’ - சமூக சிந்தனைகளை விதைக்கும் பேராசிரியை

By மு.முருகேஷ்

“படிப்பு மட்டுமே வாழ்க்கை யென எண்ணிவிடாமல், தனக்குள்ளி ருக்கும் திறனை அடையாளங் கண்டு வளர்த்தெடுக்க வேண்டியதும் இன்றைய இளைஞர்களின் பொறுப்பாகும்” என்கிறார் தனியார் கல்லூரில் தமிழ்ப் பேராசிரியை யாகப் பணியாற்றும் ஏ.கீதா (35). ஒரு வயது குழந்தையாய் இருக்கையில் போலியோவால் பாதிக்கப்பட்டு, இரு கால்களும் நடக்கும் சக்தியை இழந்தாலும், மன உறுதியெனும் ஊன்றுகோல் பிடித்து தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்பவர்.

தணலி, கீதாஞ்சலி எனும் பெயர்களில் கவிதைகள் எழுதுவதோடு, கம்பன் கழகம், இலக்கிய விழாக்கள், பள்ளிகளில் நடைபெறும் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழாக்களில் நடுவராகவும் இருந்து நல்ல தமிழ்ச் சிந்தனைகளை பரப்பி வருகிறார். ‘தி இந்து’வுக்காக அவரிடம் பேசியதிலிருந்து:

“நான் பிறந்தது படித்தது எல்லாமே வில்லிவாக்கத்தில்தான். அரசுப் பள்ளியிலும் அரசுக் கல்லூரியிலும்தான் படித்தேன். சிறு வயதிலேயே என்னால் நடக்க முடியாமல் போனதால், மற்றவர்களைப்போல் வெளியே சென்று விளையாட முடியாது. அதற்காக மனம் சோர்ந்துவிடாமல், புத்தகங்கள் படிப்பேன். பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும். கல்கியின் நாவல்களையும் விரும்பிப் படிப்பேன்.

ராணிமேரி கல்லூரியில் படிக்கும்போது எனது பேராசிரியர்கள் அனைவரும் என்மேல் அன்பும் அக்கறையும் காட்டினார்கள். எனக்குள் இருக்கும் திறமையை அடையாளங்கண்டு என்னை ஊக்குவித்தவர் பேராசிரியர் சிவசக்தி. கம்பன் கழக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க என்னைத் தூண்டினார்.

மிகவும் தயக்கத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் 2001-ல்தான் முதல்முறையாக கம்பன் கழக பேச்சுப் போட்டியில் பேசுவதற்காக மேடையேறினேன். அதில், நான் பரிசு எதுவும் பெறாதபோதும், அதற்காக வருத்தப்படாமல் தொடர்ந்து நான் இயங்குவதற்கான உந்து சக்தியை அந்த மேடை எனக்குத் தந்தது. முதல் தோல்வியை எனக்கான அனுபவமாக எடுத்துக் கொண்டதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து கட்டுரைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றேன்.

எவ்வளவு திறமையிருந்தாலும் இன்னமும் மாற்றுத்திறனாளிகளை பரிதாபமாக பார்க்கும் நிலைதான் நம் சமுதாயத்தில் உள்ளது. இந்நிலையில், எனக்குள் இருக்கும் திறனை அங்கீகரித்து, எங்கள் கல்லூரித் தலைவர் சேதுகுமணன் எனக்கு தமிழ்ப் பேராசிரியராக பணிசெய்யும் வாய்ப்பை வழங்கினார்.

எனது மாணவர்களை என் குழந்தைகள்போல் எண்ணி, அவர்களுக்கு அர்ப்பணிப்போடு கற்பிக்க வேண்டுமென்பதை உறுதியாக எடுத்துக்கொண்டு பாடம் நடத்தினேன். ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு கவனம் எடுப்பேன். ஒரே மாதிரியான கற்பித்தல் முறையால் எல்லா மாணவர்களுக்கும் புரியவைக்க முடியாது. எனவே, கற்றலில் சற்றே பின்தங்கும் மாணவர்களுக்கு பவர்பாயின்ட் பிரசன்டேஷன் மூலமாகவும் வகுப்புகளை நடத்தினேன். எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத் தரத்தேர்ச்சி மாணவிகளை உருவாக்கியதற்காக கல்லூரி நிர்வாகத்தால் தங்கக் காசுகள் பரிசாக பெற்றுள்ளேன்.

இன்றைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய விழாக்கள், கல்லூரி, பள்ளி விழாக்களில் பேசி வருகிறேன். முடியாது என்கிற எண்ணத்தை இளைஞர்கள் மனதிலிருந்து அழித்துவிட்டு, அதில் தன்னம்பிக்கையை விதைக்கிற வேலையை செய்து வருகிறேன். யாரையும் குறைத்து மதிப்பிடாமல், எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கிற ஒரு திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதை எனது பேச்சின் நோக்கமாக கொண்டிருக்கிறேன்.

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் ஆசிரியர் தின விழாவில் எனக்கு வழங்கிய ‘ஆசிரியர் செம்மல் விருதும், சென்னை கம்பன் கழகம் வழங்கிய ‘தமிழ்நிதி விருது’ம், தமிழகத் தமிழ்ப் பேரவை வழங்கிய ‘சொல்லரசி’ விருதும் என் செயல்பாட்டிற்கு மிகுந்த உந்துசக்தியாக அமைந்தன.

இன்றைக்கு பெண்கள் பல துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆணுக்கு சமமாக பெண்கள் வளர்ந்து வருகிற தற்போதைய சூழலிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேரவும் இங்கே பணம் கேட்பது வேதனையளிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் எளிமையாக வருவதற்கு ஏற்ற நிலையில் இன்றைய அரசு அலுவலகங்களின் கட்டிட அமைப்பு இல்லை. உள்ளே செல்லவே மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். நிச்சயம் இது மாற்றப்பட வேண்டும்” என்றார்.

தனது கல்விப் பணியில் மட்டுமல்ல, எழுத்திலும் பேச்சிலும் கூட இளைஞர்களின் மீதான நம்பிக்கையை விதைக்கும் பேராசிரியர் ஏ.கீதாவின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்