ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

"முறைகேடுகள் தலைவிரித்தாடிய ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், "தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை நீக்கி விட்டு நேர்மையான அதிகாரி ஒருவரை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் என்ற பெயரில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முறைகேடுகளுக்குப் பெயர் போன பிகார் மாநிலத்தை விஞ்சும் வகையில் அ.தி.மு.க.வினர் அத்துமீறல்களை அரங்கேற்றியிருக்கின்றனர்.

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதே மிகப்பெரிய முறைகேடு தான். ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்காக தேவையின்றி ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேலை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததும், சட்டப்பேரவைத் தலைவரும், பேரவைச் செயலாளரும் ஞாயிற்றுக்கிழமையில் பேரவைச் செயலகத்தில் காத்திருந்து பதவி விலகல் கடிதத்தை வாங்கி உடனடியாக இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி காலியாக விட்டதாக அறிவித்ததும், அடுத்த 10 நாட்களில் அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜனநாயகத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்கள் அல்ல.

உடனடியாக சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் விருப்பம் நிறைவேற வேண்டும் அதிகாரப்படிநிலையின் உச்சத்தில் உள்ளவர்கள் நினைத்தால் மட்டுமே இதுபோன்ற ஜனநாயக அதிசயங்கள் நிகழ்வது சாத்தியமாகும்.

இடைத்தேர்தலை அறிவிப்பதிலேயே இந்தளவுக்கு அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் இன்னும் பல மடங்கு அத்துமீறல்கள் இருக்கும் என்பதாலேயே பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்தன.

எப்படியெல்லாம் முறைகேடுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அதைவிட பலமடங்கு அதிகமாகவே நடந்துள்ளன. வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரம் மட்டுமே முறையாக நடைபெற்றது. அதன்பின்னர் பல வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் நுழைந்து அங்கிருந்த வாக்காளர்களையும், தேர்தல் முகவர்களையும் வெளியேற்றி விட்டு தங்களின் விருப்பம் போல வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த உடனேயே, தொகுதியையச் சாராத அரசியல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்பது தான் விதி. ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அங்கேயே முகாமிட்டிருந்து முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளனர்.

ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது ஒன்றரை லட்சம் வாக்குகளில் வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சி மேலிடம் ஆணையிட்டிருந்ததாகவும், அதை நிறைவேற்றும் வகையில் தான் ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ளவாக்குகளை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குப்பதிவு வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டதால் இந்த முறைகேடுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த முறைகேடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தாரே தவிர முறைகேடுகளைத் தடுக்கவோ, முறைகேட்டாளர்களை பிடிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் செயல்கள் அரங்கேறின. தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத் தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சியால் நியமிக்கப்படுபவர் என்பதால், உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சினர் தான் வெற்றி பெறுவார்கள், அதற்காக அவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குதல் போன்ற முறைகேடுகள் நடப்பது இயல்பு என்றபோதிலும், வாக்குப்பதிவு நியாயமாகவே நடைபெறும். ஆனால், இப்போது வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் இனி ஜனநாயகம் என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த அச்சத்தை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும்.

எனவே, முறைகேடுகள் தலைவிரித்தாடிய ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, 2016 சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை நீக்கி விட்டு நேர்மையான அதிகாரி ஒருவரை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்