கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் தோழன் வண்டிப்பெரியாறு பாலு. ஆதிதிராவிடர் வகுப்பில் பிறந்த தமிழர். கேரளத்தில் எதற்கும் அஞ்சாத கம்யூனிஸ்ட்களே பாலுவை கண்டு பயந்தார்கள். காரணம், தனது ‘பிரச்சார ஜாத்தா’(பிரச்சார ஊர்வலங்கள்) மூலம் தேயிலைத் தோட்ட மக்களிடம் கம்யூனிஸ்ட்களின் முகத்திரையை கிழித்தவர் பாலு. பொதுச்சேவைக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காகவே பிரம்மச்சாரியாக வாழ்ந்த பாலு அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட்காரர்.
1984 வரை 14 ஆண்டுகள் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றில் களப் போராளியாக இருந்தவர். ஆனால், ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலைதூக்கிய சாதி, இன வேறுபாடுகளும் முதலாளித்துவ சிந்தனைகளும் செஞ்சட்டைக்குள் இருந்த பாலுவை கதர் சட்டைக்காரராக மாற்றியது. தொழிலாளர்கள் மத்தியில் பாலுவுக்கு இருந்த செல்வாக்கை பார்த்த காங்கிரஸ் கட்சி அவரை வண்டிப் பெரியாறு மண்டல காங்கிரஸ் தலைவராக அங்கீகரித்தது. இடுக்கி ஜில்லாவின் ஐ.என்.டி.யு.சி. செயலாளராகவும், ஹைரேஞ்ச் தோட்டத் தொழிலாளர் யூனியனின் (ஹெச்.ஆர்.பி.ஈ) துணைச் செயலாளராகவும் வளர்ந்தார்.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாலுவை பீர்மேடு தொகுதியில் நிறுத்தத் திட்டமிட்டது காங்கிரஸ். ஆனால், தங்களிடம் அரசியல் படித்த பாலு தனிப்பெரும் தலைவராக வளர்வதை கம்யூனிஸ்ட்கள் விரும்பவில்லை. 20.10.2004-ல், பத்துமலை எஸ்டேட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலுவை 8 பேர் கொண்ட கும்பல் மேடை ஏறி வெட்டிக் கொன்றது. இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 8 பேர் சரணடைந்தார்கள். ஆனால், இடுக்கி செசன்ஸ் நீதிமன்றத்தால் 2008-ல் அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
பாலுவுக்காக இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், பாலுவின் அம்மா முனியம்மா விடுவதாய் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாத முனி யம்மா, தனது மகனின் கொலைக்கு நீதி கேட்டு எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்தார். 62 வயதில் வைராக்கியத்துடன் வழக்கை நடத்தினார். நீதி கிடைத்தது; ஆனால், அதை உணரும் நிலையில் முனியம்மா இல்லை.
பாலு கொலையில் சம்பந்தப் பட்ட 8 பேருக்கும் 2009 டிசம் பரில் ஆயுள் தண்டனை அளித்தது உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு வருவதற்குள், புத்திர சோகம் முனியம்மாவின் புத்தியை பறித்துக் கொண்டது. வண்டிப் பெரியாறு பகுதியில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் பளிச் சென்று யாரைப் பார்த்தாலும் ’’மக்களே பாலு.. உனக்கு இன்னும் கூட்டம் முடியல்லியோ.. சீக்கிரமா வீட்டுக்கு வா..” என்று கையை பிடித்து விசாரிப்பதே முனியம்மாவுக்கு அனிச்சையாகிப் போனது.
’பாலு கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை குடுத்துட்டாங்க’ என்று மற்றவர்கள் சொன்னபோது, ‘அடப் பாவமே.. அவங்கள ஏன் ஜெயில்ல போட்டாங்க?’ என்றார் புத்தி பேதலித்துப் போன முனியம்மா. அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. 2012 மார்ச்சில் முனியம்மாவின் குரலும் அடங்கிப் போனது. கொலையாளிகள் குடும்பத்துக்கு மாதம் பத்தாயிரம் வீதம் உதவி செய்கிறது ஒரு கட்சி. ஆனால், கட்சிக்காக தனது ஒரே மகனை காவு கொடுத்த முனியம்மாவின் இறப்புக்கு காங்கிரஸ் தலைகள் அஞ்சலி செலுத்தக் கூட வரவில்லை - கம்யூனிஸ்ட்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு பயம். இறுதி மூச்சுவரை தனது மகன் பாலுவை தேடிக் கொண்டே இருந்தார் முனியம்மா. வண்டிப் பெரியாறில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் சாதியம் பேசி வாழ்ந்ததால், உன்னதமான தலைவன் பாலுவை இழந்துவிட்டார்கள்.
பாலுவின் தியாக வாழ்க்கையை நூலாக எழுதி ஆவணப்படுத்தி இருக்கிறார் கேரள தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பால சிங்கம். ‘பாலுவின் கதை’என்ற தலைப்பில் 320 பக்கங்கள் கொண்ட நூலாக தமிழிலும் மலையாளத்திலும் வெளிவர இருக்கும் பாலுவின் நிஜ சரித்திரம் நிச்சயம் ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும். இதை ஒரு ஆவணப் படமாகவும் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் அன்வர் பாலசிங்கம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago