டெல்டா விவசாயிகளுக்கு ரூ.41 கோடி குறுவை தொகுப்பு உதவித் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 12-ம் திறக்க வாய்ப்பில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், விவசாயிகள் நலனுக்காக குறுவை தொகுப்பு உதவியை வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி குறித்த ஆய்வுக் கூட்டம் 2.6.2015 அன்று எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிக பரப்பில் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியில் குறைந்த பட்சம் 90 அடி தண்ணீர் இருக்கும் போது குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 72.64 அடியாகவும், நீர்வரத்து தற்போது மேட்டூர் அணையின் வினாடிக்கு 7,058 கன அடியாகவும் உள்ளது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 10 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் தர வேண்டும்.

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் கிடைத்தாலும் மேட்டூர் அணையில் ஜுன் இறுதியில் 79 அடி மட்டுமே தண்ணீர் இருக்கும். எனவே, இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது.

மாநில அளவில் கோடைப்பருவத்தில் சராசரி மழை அளவான 128 மில்லி மீட்டருக்குப் பதில் நடப்பாண்டில் 241.3 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை டெல்டா விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் குறுவை தொகுப்பு உதவியை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது

இதன்படி,

1. கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கியது போல், இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேரமும் முனை மின்சாரம் வழங்கப்படும்.

2. டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கான முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுக்கும். நெல் நடவுப் பணிகளையும், களைக் கட்டுப்பாட்டுப் பணிகளையும் உரிய காலத்தே மேற்கொள்ளவும்; பயிர் எண்ணிக்கையை பராமரித்து, குறைந்த நீரில் அதிக பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறையினை பின்பற்றி மகசூலை உயர்த்தும் வகையில், நடவு இயந்திரம் மூலம் நெல் நடவுப்பணியை மேற்கொள்ள டெல்டா விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் நடவு இயந்திரங்கள் வாடகைக்குப் பெறப்பட்டு, தேவையின் அடிப்படையில் விவசாயிகளின் வயல்களில் நடவுப்பணி மேற்கொள்ளப்படும்.

இதற்கு விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கென அரசுக்கு 25 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

3. தற்போது, டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடியின் மகசூலை உயர்த்தும் வகையில் நெல் நுண்ணூட்டக் கலவை மற்றும் உயிர் உரங்கள் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 315 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 7 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.

4. மண்ணின் தரத்திற்கு ஏற்ப, பயிர்களுக்கு உரம் இடப்பட வேண்டியது அவசியமாகும். வேளாண் உற்பத்தியினை அதிகரிக்கும் ஒரு உத்தியாக மாநிலம் முழுவதும் மண் பரிசோதனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த கையேடு 67.46 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்த மண் பரிசோதனை ஆய்வின் அடிப்படையில், டெல்டா பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் மண் வளம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இதற்கான ஜிப்சம், விவசாயத் துறை மூலம் விவசாயிகளுக்கு விலை ஏதுமின்றி வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 3 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

5. மண்ணின் ஈரப்பதத்தைக் கொண்டு, உழவு மேற்கொண்டு, குறுகிய கால பயிர்களான பயறு வகைகள் அல்லது பசுந்தாள் உரப்பயிர்களை தொகுப்பு கிராம அணுகுமுறையில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இதற்காக, வேளாண் பொறியியல் துறை மூலம் இப்பகுதிகளில், உழவுப்பணி மேற்கொள்ளப்படுவதோடு, குறுகிய கால பயறு வகைகள் அல்லது பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய தேவையான விதைகள் விலையில்லாமல் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதற்காக அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் மண் வளம் மேம்படுவதோடு, வெண்ணாறு கடைமடைப் பகுதியில் சம்பாப் பருவ நெல் உற்பத்தியும் அதிகரிக்கும்.

தற்போது அறிவித்துள்ள குறுவை தொகுப்பு உதவித் திட்டத்திற்காக அரசுக்கு 40 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.

இந்த குறுவை தொகுப்பு உதவி திட்டத்தினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும், மண் வளம் மேம்படவும் வழிவகை ஏற்படும்"

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்