புதுச்சேரியில் 5 ஆண்டுகளாக தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் இல்லை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்மாமணி மற்றும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படவில்லை. கடந்த 2010-ம் ஆண்டில் விருது பெற்றவர்களில் தமிழ்மாமணி விருது பெற்ற ஆறு பேருக்கு இன்னமும் தங்கப்பதக்கம் வழங்கவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நடனம், ஓவியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளும், தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்படுகிறது. கலைமாமணி விருதுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்க பதக்கம் தரப்படும். தமிழ்மாமணி விருதுக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 சவரன் தங்கப்பதக்கம் தரப்படும்.

கடந்த, 2008-09-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு 46 பேரும், தமிழ்மாமணி விருதுக்கு 6 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த விழாவில் அப்போதைய துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் பங்கேற்று விருதுகளை அளித்தார். அப்போது, அவர்களுக்கு விருதுடன் தங்கப்பதக்கம் வழங்கவில்லை. அப்போதே அதுபற்றி கேட்டபோது, ‘தங்கப் பதக்கத்தில் பெயர் பொறித்து தர காலஅவகாசம் தேவை’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓராண்டு கழிந்தும் தங்கப்பதக்கம் வழங்காததால் விருது பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து 2011-ம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலர் சத்தியவதியிடம் முறையிட்டனர். அதற்கு, ‘விருது வழங்கிய காலத்தில்விட தற்போது தங்கம் விலை உயர்ந்து விட்டது. எனினும், விரைவில் பதக்கம் தருவோம்’ என தெரிவித்தனர். அதன்பிறகு, விருது பெற்ற காலத்தில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப 2 சவரனுக்கான தொகையை கலைமாமணி விருது பெற்ற 46 பேருக்கு மட்டும் அரசு அளித்தது.

ஆனால், அப்போது தமிழ்மாமணி விருது பெற்ற நந்திவர்மன், சித்தன், பரிதி வெங்கடேசன், திருமாவளவன், அருணாச்சலம், நாகராசன் ஆகிய ஆறு பேருக்கு 2 சவரன் தங்கப் பதக்கத்துக்கான பணம் தரவில்லை.

இது குறித்து, ‘தமிழ்மாமணி’ விருது பெற்ற நந்திவர்மன், ‘தி இந்து’விடம் கூறும்போது, “தங்கப்பதக்கம், ரொக்கம் தருவது மரபு. எங்களுக்கு ஆறு ஆண்டுகளாகியும் தங்கப்பதக்கம் தரவில்லை. அதற்குரிய தொகையையும் தரவில்லை. ஆளுநர், தலைமைச் செயலர் என பலரிடம் மனு அளித்தும் பயனில்லை. விருது பெற்றவரில் சித்தன் என்பவருக்கு 94 வயதாகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்கு தொகையை அளித்தால் பயனளிக்கும். இந்த பிரச்சினை குறித்து டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நான் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால், தொகை கிடைக்கவில்லை. மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தேன்.

இதையடுத்து, இரண்டு முறை புதுச்சேரி தலைமை செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தும் எங்கள் ஆறு பேருக்கு இதுவரை தங்கப்பதக்கமும் தரவில்லை. அதற்கான ரொக்கத் தொகையையும் தரவில்லை” என்றார்.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் சரியாக தரப்படவில்லை. இதனால் பலரும் வேதனையில் உள்ளனர். விருதுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தும் 2011-ம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக விருதுகள் யாருக்கும் தரப்படவில்லை.

இது தொடர்பாக கலை பண்பாட்டு துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தியாகராஜன் தரப்பில் கேட்டபோது, "ஐந்து ஆண்டுகளாக கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் யாருக்கும் தரப்படவில்லை. பாரதியார் பிறந்த நாளன்று கலைமாமணி விருதுகளும் திருவள்ளுவர் பிறந்த நாளன்று தமிழ்மாமணி விருதுகளும் இந்த நிதியாண்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்